இந்து டாக்கீஸ்

திரை வெளிச்சம்: அரசிடம் திரையுலகம் எதிர்பார்ப்பது என்ன?

கா.இசக்கி முத்து

மே 30-ம் தேதி தமிழ்த் திரையுலகம் சார்பில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் தொடர்பாகத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மாநில அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைகளில் முதலாவதாக இருப்பது திரையரங்கக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்பது.

“திரையரங்கக் கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்குத் தரும் வசதிகள், பண்டிகை நாட்கள், வார இறுதி நாட்களில் சிறப்புக் கட்டணம் எனப் பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் அரசைக் கேட்டிருக்கிறார். உண்மையில் திரையரங்கக் கட்டணம் முறைப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறதா என அறிய முயன்றபோது கிடைத்த தகவல்கள் பல கதைகளைச் சொல்கின்றன.

2006 அரசாணை

கடந்த 2006-ம் ஆண்டு திரையரங்கக் கட்டணம் தொடர்பாக வெளியிட்ட அரசாணையில் ஏ.சி. இல்லாத திரையரங்குகளுக்கு 30 ரூபாய், ஏ.சி இருந்தால் 50 ரூபாய், 2 திரையரங்குகளுக்கு 85 ரூபாய், 2 திரையரங்குகளுக்கு மேல் இருந்தால் 95 ரூபாய், 2 திரையரங்குகளுக்கு மேல் ஏ.சி., உணவுக் கூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தால் 120 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என அனுமதி அளித்திருந்தது. அதே அரசாணையில் டிக்கெட் கட்டணத்திலிருந்து 15 சதவிகிதத்தைக் கேளிக்கை வரியாக அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்தக் கேளிக்கை வரியை 2011-ம் ஆண்டு 30 சதவிகிதமாக அரசு உயர்த்திவிட்டது.

பட்ஜெட்டும் டிக்கெட் விலையும்

2008-ம் ஆண்டுமுதல் தமிழ் திரையுலகில் முழுவீச்சில் டிஜிட்டல் திரையிடல் பரலாக்கப்பட்டது. டிஜிட்டல் தரத்துக்குப் பெரும்பாலான திரையரங்குகள் மாறியதும் முன்னணிக் கதாநாயகர்களின் படங்கள் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் புதிய போக்கு உருவானது. இதனால் தங்களுக்குப் பிடித்தமான பெரிய கதாநாயகர்கள் நடித்த புதிய படங்களைப் பார்க்கத் திரையரங்குகளில் கூட்டம் குறையும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமின்றி, படம் வெளியான சில தினங்களுக்குள் அதிக அளவிலான ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் பழக்கத்துக்குத் தயார்படுத்தப்பட்டார்கள்.

ஆனால் பெரிய திரையரங்குகளில் டிக்கெட் விலையை விடப் பாப்கார்ன், கார் பார்க்கிங் உள்ளிட்ட கட்டணங்கள் அதிகம். 120 ரூபாய்க்கு மேல் திரையரங்குகளில் டிக்கெட் விலையை விற்க முடியாத நிலையே தற்போது உள்ளது. இதனால் “5 கோடி முதலீட்டில் படம் தயாரிக்கப்பட்டால், அதற்கும் டிக்கெட் விலை 120 ரூபாய்தான். 500 கோடி முதலீட்டில் படம் தயாரிக்கப்பட்டாலும் டிக்கெட் விலை 120 ரூபாய்தான் என்பது எந்த விதத்தில் நியாயம்” என்பது பல பெரிய படத் தயாரிப்பாளர்களின் கேள்வி.

யாருக்கு எவ்வளவு?

“மால் திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை 120 ரூபாய். 30 சதவீதம் வரி சென்றுவிட்டால் 84 ரூபாய் கிடைக்கும். அதில் திரையரங்கிற்கு 42 ரூபாய், விநியோகஸ்தருக்கு 42 ரூபாய். விநியோகஸ்தருக்கான பங்குத் தொகை போகத் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் தொகை என்னவாக இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றார்கள் பல தயாரிப்பாளர்கள் வருத்தத்துடன். அதேபோல் “ஒரு டிக்கெட் 50 ரூபாய்க்கு விற்கப்படும் திரையரங்குகளிலிருந்து என்ன கிடைக்கும் என்பதையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதனால்தான் பெரிய படங்கள் வெளியாகும்போது, டிக்கெட் விலை உயர்த்த அனுமதி கேட்டால் தமிழக அரசாணையைப் பின்பற்றுங்கள் எனத் தட்டி கழிக்கிறார்கள்” என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

“மாநகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் பெரிய திரையரங்குகள் குறைவாகவும், சிறு திரையரங்குகள் அதிகமாகவும் உள்ளன. அவற்றில் கம்ப்யூட்டர் பில்லிங் வசதி கிடையாது. அங்கு டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்படுகிறது என்பது, தற்போது வரை தயாரிப்பாளர்களுக்குத் தெரிவதில்லை. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்வதோடு இல்லாமல், தமிழகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் கம்ப்யூட்டர் நெட் ஒர்க்கிங் வசதி செய்துவிட்டால் வசூல் நிலவரம் இன்னும் வெளிப்படையாக இருக்கும்” என்று முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

என்னதான் தீர்வு?

“கடந்த 11 வருடமாக ஒரே டிக்கெட் விலையினால் தமிழ்த் திரையுலகம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்களை மகிழ்விக்க வேண்டிய திரையரங்குகள் தொடர்ச்சியாக மூடப்பட்டுவருகின்றன. தமிழக அரசு உடனடியாக 2006-ம் ஆண்டு போடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்றாற்போல் மாற்ற வேண்டும் என்பது திரையரங்குகளின் கோரிக்கை. மற்ற மாநிலங்களில் இருப்பது போன்று வார இறுதிக்கு ஒரு டிக்கெட் விலை, வார நாட்களுக்கு ஒரு டிக்கெட் விலை என நிர்ணயம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மேலும், 5 கோடிக்குத் தயாரிக்கப்படும் படங்களுக்கு ஒரு டிக்கெட் விலையும், அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு ஒரு டிக்கெட் விலையையும் தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. திரையரங்க டிக்கெட் விலை கணிசமாக உயர்த்தினால் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல காலம் பிறக்கும் என்பதுதான் திரையுலகின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

SCROLL FOR NEXT