மார்ச் 8 - உலக மகளிர் தினம்
கோவை திரைப்படச் சங்கத்தின் சார்பாக சமீபத்தில் குழந்தைகள் திரைப்பட விழா 10 நாட்கள் நடந்து. அதில் ‘10 மொழிகள் 10 நாடுகள்’ என்ற தலைப்பில் திரையிடப்பட்ட அனைத்துப் படங்களுமே உன்னதத் திரை அனுபவமாக அமைந்தன. குறிப்பாக சவுதி அரேபியாவில் தயாரான முதல் திரைப்படம் என்ற பெருமையுடன் திரையிடப்பட்ட ‘வாஜ்தா’ பார்வையாளர்களைக் கலங்க வைத்தது.
நெருக்கடிக்கு மத்தியில் படப்பிடிப்பு
இந்த நூற்றாண்டிலும் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவது கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கும் நாடு இருக்கிறது என்பதைப் படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே உணர்ந்தபோது மனம் கனக்கத் தொடங்கியது. சவுதி அரேபியாவில் பெண் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை எவரும் ஊக்குவிப்பதில்லை. வாஜ்தா என்ற சிறுமி, ஆண் பிள்ளைகளைச் சிறகு முளைத்ததுபோல சைக்கிள்களில் பறப்பதைக் காண்கிறாள். அவளது மனம் ஏங்குகிறது. எப்படியாவது ஒரு சைக்கிள் வாங்கித் தன் நண்பர்களுடன் சைக்கிள் பந்தயத்தில் முந்த வேண்டும் என நினைக்கிறாள்.
அவளுக்கு சைக்கிள் கிடைத்ததா இல்லையா என்பதைப் பற்றிய கதைதான் படம். ஆனால் அதை மட்டுமா அந்தக் கதை உணர்த்துகிறது? பெண்களுக்கு மிக நியாயமாகத் தரவேண்டிய சுதந்திரத்தைக்கூடச் சமூகம் எப்படி மறுத்து வருகிறது என்ற வலியை, புலம்பலை மறைமுகமாக ஆனால் அழுத்தமாக உணர்த்துகிறார் படத்தின் இயக்குநர் ஹைபா-அல்-மன்சூர்.
சவுதி அரேபியாவின் வாழ்க்கை, கலாச்சாரம் குறித்துத் திரைப்படம் எடுக்க அந்த நாட்டில் அனுமதியில்லாத நிலையில் அங்கேயே ஐந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படமாக்கியிருக்கிறார் ஹைபா. அவர் பட்ட கஷ்டங்களுக்குப் பலனாகத் தற்போது உலகம் முழுவதும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்துவருகிறது.
பச்சை வண்ண சைக்கிள்
வாஜ்தா என்ற அந்தப் பத்து வயதுச் சிறுமி கண்களில் கனவுகளைச் சுமப்பவள். சைக்கிள் கடை ஒன்றில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் பச்சை நிற சைக்கிளை ஏக்கத்துடன் பார்க்கிறாள். அதை எப்படியாவது வாங்க வேண்டும் என்று ஆர்வம் கொள்கிறாள். அதன் விலை அதிகமாக இருப்பதாலும் பெண்கள் சைக்கிள் ஓட்டத் தேவையில்லை எனவும் கூறி அவளது ஆசையை அம்மா நிராகரிக்கிறாள். எப்படியாவது காசு சேர்த்து சைக்கிள் வாங்க வேண்டும் எனப் பல வழிகளில் முயல்கிறாள் வாஜ்தா. பள்ளியில் இரு காதலர்களுக்கிடையே கடிதப் பரிமாற்றம் செய்வதற்குக் காசு பேரம் பேசுவது அவற்றில் ஒரு வழி. அந்த முயற்சியின்போது ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டு விடுகிறாள். முதல் கதவு அடைக்கப்படுகிறது.
குரான் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசு வென்றால் ஒரு பெரிய தொகை பரிசாக கிடைக்கும் என்று பள்ளியில் அறிவிக்கிறார்கள். வெறி கொண்டு தன்னைத் தயாரித்துக்கொள்கிறாள் வாஜ்தா. குரான் போட்டியில் முதல் பரிசையும் வெல்கிறாள். பரிசைக் கைகளில் கொடுக்கும் முன் “பரிசுத் தொகையை என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார் ஆசிரியர். தன் மனதில் பசுமையாக முளைவிட்டு மரமாகி நிற்கும் தன் ஆசையை உணர்ச்சிப் பெருக்கில் போட்டு உடைக்கிறாள்; “சைக்கிள் வாங்கப் போகிறேன்”.
“பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது, அது உனக்குத் தெரியாதா?” எனக் கடிந்துகொள்ளும் ஆசிரியர், “உனக்கான பரிசுத் தொகையை ஒரு நிறுவனத்துக்கு அன்பளிப்பாய் அளிக்கப்போகிறேன்” என அறிவிக்கிறார். அப்போது அந்தச் சிறுமியின் கண்களில் திரண்டுவரும் கண்ணீரைப் பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் கண்களிலிருந்து துடைத்துக்கொண்டார்கள்.
இது ஒரு வாஜ்தாவின் கதை மட்டுமே அல்ல என்பதை இயக்குநர் நமக்கு எளிதாக உணர்த்திவிடுகிறார். வாஜ்தா என்கிற வளரிளம் பெண்ணின் கதாபாத்திரம் ஒரு குறியீடு. மொத்தப் பெண்களின் வாழ்க்கையும் அங்கே நுட்பமான சிக்கலின் ஊசலாட்டம் என்பதை வாஜ்தாவின் அம்மா கதாபாத்திரம் வழியே எடுத்துக்காட்டுகிறார். உலகில் எந்த மூலையிலும் எந்தக் கலாச்சாரத்திலும், தாய் - மகள் அன்பு என்பது ஒரு அலாதியான அனுபவம் என்பதை ஒரு பெண்ணாக, இயக்குநர் காட்டியிருப்பது, ஆண்கள் இன்னும் அன்புக்குரியவர்களாக உயர வேண்டும் எனும் ஆதங்கத்தை என்னுள் ஏற்படுத்தியது.
தன் நண்பனுடனான சைக்கிள் பந்தயத்தில் அவள் முன்னேறிச் செல்லும் காட்சியில் வரும் பின்னணி இசை மனதை ஏதோ செய்கிறது. “Catch me if you can ( முடிந்தால் என்னைப் பிடி)” என்றபடி அந்தச் சிறுமி சைக்கிள் ஓட்டும் காட்சியை பார்க்கும்போது ஏதோ இனந் தெரியாத சுதந்திரத்தை நாம் அனுபவித்த ஓர் உணர்வு.
தொடர்புக்கு: puliangudikannanagri@gmail.com