விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ‘உலக அழகி’ பிரியங்கா சோப்ரா. மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கமுடியாத அளவுக்குப் பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக பிரபலமானார். அங்கே கிடைத்த அடுக்கடுக்கான வெற்றிகள் அவரை ஹாலிவுட்டுக்கும் அழைத்துச்சென்றன.
ஐரோப்பா முழுவதும் திரைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர்களைவிட தொலைக்காட்சித் தொடர்களுக்கே அதிக ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இதற்குக் காரணம் தொடர்களின் பிரம்மாண்டம் திரைப்படங்களை மிஞ்சக்கூடியதாக உள்ளது. பிரியங்காவும் அப்படியொரு ஹாலிவுட் தொடரில் நடிக்கவே அங்கே அழைக்கப்பட்டார். அதுதான் ‘பே வாச்’. அது தற்போது திரைப்படமாகவும் தயாராகிவிட்டது.
ஆங்கிலம் உட்பட உலக மொழிகள் பலவற்றிலும் வெளியாகிறது. ‘ஸ்டார் வார்ஸ்’, கௌ பாய் வகைப் படங்களுக்கு இருப்பதுபோன்ற தீவிர ரசிகர்கள் ‘பே வாச்’ வகைப் படங்களுக்கும் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். பெண்கள் நீச்சல் உடை அணிவதை அவ்வளவாக விரும்பாத தென்னிந்திய கலாசார சூழலில் இந்தியாவின் பல மொழிகளிலும் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்திருக்கும் ‘பே வாச்’ வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தனது தோழிகளுடன் நீச்சல் உடையில் வருகிறார் பிரியங்கா.
இவர் நீச்சல் உடையில் தோன்றுவது கவர்ச்சிக்காக என்று பலர் நினைக்கலாம். ஆனால் பிரியங்கா இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் வேடம் கடலில் நீராட வருபவர்கள் ஆபத்தில் சிக்கினால் அவர்களின் உயிரை ஓடோடிப்போய் காக்கும் காவல் தேவதை(?) கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வதற்காக. அதாவது ஆக்ஷன் ஹீரோயின். சே கோர்டன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் வெய்ன் ஜான்சன், ஜான் எஃப்ரான், அலெக்சாண்டர் டட்டாரியோ போன்ற ஹாலிவுட் நடிகர்களின் கூட்டம் கடல் அலைகளில் சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறதாம். படத்தை உலகமெங்கும் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
- கனிமொழி.ஜி