அணியாகச் சேர்ந்து போராடுவதையும் இலக்கை நோக்கி நகர்வதையும் சேர்ந்து வெற்றிபெறுவதையும் கற்றுத்தரும் விளையாட்டு கால்பந்து. சென்னையிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பான்மையாக விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் இருக்கும் சூழ்நிலையில், வடசென்னை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டாகக் கால்பந்து காலங்காலமாக இருப்பதை ‘டாக்டர் ஷூமேக்கர்’ ஆவணப்படம் துலக்கமாகக் காண்பிக்கிறது.
ஒரு ஷூ பழுதடைந்தால் தூக்கிப் போட்டுவிட்டு புதிய ஷூ வாங்க முடியாத பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஷூக்களைக் குணப்படுத்தும் ‘டாக்டராக’ தன் வாழ்வைத் தேர்ந்தெடுத்த சாமானிய சாதனையாளர் இமானுவேலின் கதை இது.
ஏமாற்ற விரும்பாத இதயம்
கால்பந்து விளையாட்டின் மீது சிறுவயது முதலே தீராத ஆர்வம் கொண்டிருந்தார் இம்மானுவேல். வடசென்னையைச் சேர்ந்த அவர் தனது பிய்ந்து போன ஷூவைத் தைப்பதற்கு ஒருவரை நாடியபோது அவர் வாரக்கணக்கில் அந்தச் சிறுவனை அலையவைத்ததால் தானே செருப்பு தைப்பவர் ஒருவரின் உதவியுடன் இத்தொழிலைக் கற்றார். வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு மரத்தின் அடியில் உள்ள சின்னப் பட்டறையில் தான் நூற்றுக்கணக்கான கால்பந்து ஷூ ஜோடிகள் இம்மானுவேலின் பிரியமும் பசையும் தோய்ந்த விரல்களுக்காகக் காத்திருக்கின்றன.
ஷூ பழுதுபார்ப்பதற்குக் கறாராக நிர்ணயித்த கூலி எதையும் இம்மானுவேல் கேட்பதில்லை. நூறு ரூபாய் பழுதுபார்ப்பதற்குக் கேட்க இயலும் இடத்தில் 15 ரூபாயை வாங்கிக்கொள்கிறார். தேசிய அளவில் கால்பந்து விளையாட்டுகளுக்கு இன்னமும் வீரர்களை அனுப்பிக்கொண்டிருக்கும் வடசென்னையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் முதல், கால்பந்துப் பயிற்சியாளர்கள் வரை, இம்மானுவேலின் பணி பற்றி இப்படத்தில் பேசுகின்றனர்.
60 வயதுகளில் உள்ள இம்மானுவேலின் குடும்பம் அவரது பொருளாதார ஆதரவை எதிர்பார்க்காத அளவு வளர்ந்துவிட்டது. ஷூவை ஒட்டுவதற்காகப் பயன்படுத்தும் வேதிப்பிசினும் பணிச்சூழலும் உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியதாக இருப்பது தெரிந்தும், குடும்பத்தினரின் வலியுறுத்தலை மீறியும் இம்மானுவேல் இந்தப் பணியை இன்னும் அன்றாடம் தொடர்கிறார். தனது பிய்ந்துபோன ஷூவைத் திரும்ப மீட்டுக்கொடுப்பார் என்று எங்கிருந்தோ தன்னை நம்பி வரும் ஒரு பையனை ஏமாற்ற விரும்பவில்லை என்கிறார்.
‘டாக்டர் ஷூமேக்கர்’
இவர் நேரம் கிடைக்கும் போது, மைதானத்தில் இறங்கி சிறுவர்களுக்கே உரிய உற்சாகத்துடன் கால்பந்தும் விளையாடுகிறார். ‘டாக்டர் ஷூமேக்கர்’ ஒரு தனிநபரின் கதையை மட்டுமே கூறவில்லை. வடசென்னையில் ஒரு காலகட்டத்தில் நிறைய ஷூ பழுதுபார்க்கும் கலைஞர்கள் இருந்ததையும், இப்போது அவர்கள் அருகிவிட்டதையும் சுட்டிக்காட்டுகிறது. பிராண்டட் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு வடசென்னையின் தோல் செருப்புகள், தோல் ஷூக்கள் தயாரிப்புத் தொழிலுக்கு மவுசு குறைந்துவிட்ட சூழலையும் இப்படம் பேசுகிறது. தெலுங்கர்கள்தான் இத்தொழிலைக் காலங்காலமாகப் பார்த்துவந்தனர் என்றும் தமிழர்கள் இத்தொழிலில் இல்லை என்றும் இம்மானுவேல் சொல்கிறார்.
எவ்வளவு கிழிந்துபோன நைந்த ஷூவையும் அழகாக உருமாற்றிக் கொடுத்துவிடுவார் என்பதால் இவரிடம் பயனடைந்தவர்கள் கொடுத்த பெயர்தான் டாக்டர். இந்தப் பெயர் வடசென்னை முழுவதும் பிரபலம். அன்றாடம் ஒரு செடிக்கு நீருற்றிக் கொண்டிருந்தால் போதும்; அந்தச் செயல் இந்த உலகத்தை மாற்றும் ஒரு காரியத்திற்கு உதவிகரமாகத் திகழும் என்று ஒரு வாசகம் உண்டு. இம்மானுவேலின் தினசரி சேவையால் வடசென்னையின் மைதானங்களில் எத்தனையோ சுறுசுறுப்பான கறுப்புக் கால்கள் நிம்மதியாகக் கால்பந்து விளையாடிக் கொண்டிருக்கின்றன.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் இப்படத்தை வண்ண மயமாக உருவாக்கியிருப்பவர்கள் இயக்குநர்கள் தி. ஜா. பாண்டியராஜூ மற்றும் வினோத். தோல் தொழிலோடு சாதி பிணைக்கப்பட்டிருக்கும் அரசியலையும் கால்பந்துக்கும் பொருளாதாரப் பின்னணிக்கும் உள்ள உறவையும் சொல்லாமல் சொல்லும் இப்படம் அழகியல் ரீதியாகவும் ரசிக்கும்படி உள்ளது.