குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கென்று தனியாகத் தொலைக்காட்சிகள் வந்துவிட்டன. இந்தத் தொலைக்காட்சிகளில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவை அனிமேஷன் படங்கள்.
இந்த அனிமேஷன் படங்களில் இருபரிமாணப் படங்கள் (2டி), முப்பரிமாணப் படங்கள்(3டி) என இரண்டு வகைகள் இருக்கின்றன. இவற்றில் இருபரிமாண அனிமேஷன் படங்கள்தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் துறை உருவாக இருபரிமாண அனிமேஷன் படங்கள் முக்கியக் காரணமாக இருந்தன.
அனிமேஷன் படங்கள் என்றால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் குதூகலத்துடன் ரசிக்க உட்கார்ந்துவிடுவார்கள். இன்று எல்லாக் குழந்தைகளுமே கோட்டுச் சித்திரங்களை வரைவதில் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
2டி அனிமேஷன் படங்கள் கோட்டுச் சித்திரங்களில் இருந்துதான் உயிர்பெறுகின்றன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அனிமேஷன் படங்கள் வெறும் சித்திரங்களின் கேலிக்கூத்தாக இல்லாமல் தீவிர சினிமா ரசிகர்கள்கூட ஒதுக்கித்தள்ள முடியாத ஆழமான நீதிசொல்லும் கதை, திரைக்கதை, உரையாடல் ஆகியவற்றுடன் ரத்தமும் சதையுமான மனித நடிகர்களைவிடச் சிறப்பாக முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களுடன் வெளிவருகின்றன.
திரைப்பட வகையில் இன்று அனி மேஷன் படங்கள் சொன்ன தேதியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்வதற்கு முக்கியக் காரணம் நடிகர்களின் கால்ஷீட் தேதிக்காக இயக்குநரும் தயாரிப்பாளரும் காத்திருக்க வேண்டியதில்லை என்பதுதான். மேலும் ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கும் படைப்பாளி தனது கற்பனையை எவ்வளவு பிரமாண்டமாகவும் விரிக்க முடியும்.
இதற்கு இன்றுள்ள அதிநவீன 3டி அனிமேஷன் தொழில்நுட்பங்கள் கைகொடுக்கின்றன. இன்று அனிமேஷன் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவைப் பார்த்து ஆஸ்கர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளும் அவற்றுக்குக் கொடுக்கப்படுகின்றன. இதனால் கணினியில் உருவாகும் அனிமேஷன் கதாபாத்திரங் களுக்குக் குரல்கொடுக்க ஹாலிவுட் நட்சத்திரங்கள் நீ, நான் என்று போட்டிபோடும் கலாச்சாரம் அங்கே செழித்து வளர்ந்திருக்கிறது. அனிமேஷன் படங்களில் காட்சிகள் பிரம்மாண்டமாக இருப்பதால் நாடு, மொழி என எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் பயணிக்கின்றன அனிமேஷன் படங்கள்.
இப்படிப்பட்ட அனிமேஷன் தொழில்நுட்பத்தின் ஆரம்பம் அமெரிக்காவில் உருவானது. நடந்துபோகும் ஒருவரை அல்லது ஒரு செயலைச் செய்யும் ஒருவரை தனித்தனிப் புகைப்படங்களாக எடுத்து, அவற்றை ஒரு நொடிக்கு 12 அல்லது அதற்கும் அதிகமான புகைப்படங்களை வரிசையாக வைத்து நகர்த்தினால் அவை நம் கண்களுக்கு ஒரு தொடர் காட்சியாகத் தெரியும்.
கம்ப்யூட்டரால் தற்போது உருவாக்கப்படும் அனிமேஷன் படங்கள் வருவதற்கு முன்பு ஆச்சரியமான உலகங்களைச் சிருஷ்டித்த 2டி அனிமேஷன் படங்களின் காட்சிகள் அனைத்தும் ஓவியங்களாக வரையப்பட்டு அவை நொடிக்கு 15 பிரேம்களாக ஓடவிடப்பட்டு ஒரு நகரும் படமாக கேமராவில் பதிவுசெய்யப் பட்டவைதான். இதனால் இவை ஹேண்ட் ட்ரான் அனிமேஷன் (Hand Drawn Animation) என்றும் அழைக்கப்பட்டன. 1920களின் இறுதியில் எல்சி கிரிஸ்லெர் செகார் (Elzie Crisler Segar) உருவாகிய பாப்பை (popeye) 2டி அனிமேஷன் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் அளித்தனர். இதன்பிறகு 2டி அனிமேஷன் உலகில் நுழைந்து டிஸ்னி சகோதரர்கள் உருவாக்கிய மிக்கி மௌஸ் பெரும் புரட்சியை உண்டாக்கியது.
இவர்களது வெற்றியைப் பார்த்து எம்.ஜி.எம் அனிமேஷன் படங்களைத் தயாரிக்கவென ஹாலிவுட்டில் தனி ஸ்டூடியோவை அமைத்தது. பிறகு வால்ட் நிறுவனம் டிஸ்னியுடன் இணைந்து உலகின் மாபெரும் அனிமேஷன் சாம்ராஜ்யத்தைப் படைத்தார்கள். இதனால் அடுக்கடுக்காகப் பல கார்ட்டூன் கதாபாத்திரங்கள் ரசிகர்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கின. டாம் & ஜெர்ரி, மிக்கி மௌஸ், டொனால்ட் டக் என்று குழந்தைகள் கொண்டாடிய அனிமேஷன் பாத்திரங்கள் அத்தனையுமே 2டி தொழில்நுட்பத்தில் உருவானவைதான்.
இவை உருவாக்கம் பெறும் செயல்முறையை அடுத்த அத்தியாயத்தில் இன்னும் எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்...