இந்து டாக்கீஸ்

கோலிவுட் கிச்சடி: பூமராங் பெண்!

செய்திப்பிரிவு

டெல்லியில் பிறந்து வளர்ந்த பஞ்சாபிப் பெண் ரகுல் ப்ரித்சிங் கனவுடன் வந்திறங்கியது கோலிவுட்டில்தான். ‘தடையறத் தாக்க’ படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து பரிதாபம் அள்ளிக்கொண்டார். அதன் பிறகு தனிக் கதாநாயகியாக அவர் நடித்த ‘புத்தகம்’, ‘என்னமோ ஏதோ’ ஆகிய இரண்டு படங்களும் படுதோல்வியடைந்ததில் தெலுங்குத் திரையுலகைத் தஞ்சம் அடைந்தார். டோலிவுட்டில் கொண்டாடிவிட்டார்கள் ரகுலை. அங்கே இளமைப் புயலாகச் சுழன்றுகொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவிலிருந்து அவரது கண்கள் விலகவில்லை. தற்போது இரண்டு பெரிய படங்களின் மூலம் தமிழுக்குத் திரும்ப வந்திருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில் விஷாலுக்கு ஜோடி இவர்தான். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் படத்திலும் இவர்தான் நாயகி.

300 ஆண்டுகளுக்கு முன்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான அமைப்பின் கவுரவப் பொறுப்பிலிருந்து ரஜினி மகள் சௌந்தர்யா விலக வேண்டும் என்று ஒரு பக்கம் போராட்டம் நடக்கிறது. திரையுலகிலும் ஜல்லிக்கட்டு விவாதப் பொருளாகியிருக்கும் இந்தச் சூழ்நிலையில், 300 ஆண்டுகளுக்கு முன் ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டு தமிழர்களின் வாழ்வுடன் எப்படிப் பின்னிப் பிணைந்திருந்தது என்பதைச் சொல்ல வருகிறது ‘இளமி’ என்ற படம். 1700-ல் நடந்த உண்மையான வரலாற்று நிகழ்வை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஜூலியன் பிரகாஷ். இவர் இயக்குநர் ரவி மரியாவின் உதவியாளர். கதாநாயகனாக யுவனும் கதாநாயகியாக அனு கிருஷ்ணாவும் நடிக்கும் இந்தப் படத்தின் காலகட்டத்தை நம்பகமாகத் திரையில் கொண்டுவருவதற்காக கலை இயக்கத்துக்கு மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதியை ஒதுக்கியிருக்கிறார்களாம்.

தானா சேர்ந்த கூட்டம்

‘நானும் ரவுடிதான்’ பட இயக்குநர் விக்னேஷ் சிவன் – சூர்யா இணையும் படத்துக்குச் சரியான தலைப்பு கிடைக்காமல் அல்லாடிவந்தார்கள். தற்போது கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்று ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற தலைப்பைப் பதிவு செய்திருக்கிறார்களாம்.

பரபரப்பைக் கிளப்பிய மந்திரா பேடி

சிலம்பரசனின் ‘மன்மதன்’ படத்தில் தலை காட்டிய மந்திரா பேடி மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் வர்ணனையாளரும் ஆடை வடிவமைப்பாளருமான மந்திரா பேடி ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாக இருக்கும் ‘அடங்காதே’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தபோது அவரது உடையும் ஸ்டைலும் புன்னகையும் அனைவரையும் கவர்ந்தன. சண்முகம் முத்துசாமி இயக்கும் இப்படத்தில் சரத்குமாரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சென்னையில் மகேஷ் பாபு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடந்துவந்தது. அதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட செட்டில் நடைபெறவிருக்கிறது. இதற்காக மகேஷ் பாபு சென்னை வந்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கவனம் பெறும் நாயகி!

‘மிருதன்’ படக் கூட்டணி மீண்டும் இணையும் செய்தியை முதலில் வழங்கினோம். ‘டிக் டிக் டிக்’ என்று தலைப்பு சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகத் தேர்வாகியிருக்கிறார் ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் கதாநாயகி நிவேதா பெதுராஜ். தளபதி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் தலைப்பிடப்படாத படத்திலும் நிவேதாதான் ஹீரோயின்!

தமிழுக்கு வரும் ஷாஜன்

மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு அடுத்தபடியாகப் பேசப்பட்டவர் ‘கெட்ட' போலீஸ் சகாதேவனாக நடித்த ‘கலாபவன்' ஷாஜன். அவரை ‘எந்திரன் 2.0' படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் ஷங்கர். கேரக்டர் ரோல், வில்லன், நகைச்சுவை என்று என்ன வேடம் கொடுத்தாலும் நடிப்பில் ஷாஜன் பிச்சு உதறுவார். அதுதான் ஷாஜனை ஷங்கருடன் கொண்டு சேர்த்திருக்கிறது என்கிறார்கள் ஷங்கருக்கு நெருக்கமானவர்கள்.

ஷங்கர் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது பற்றி வாய் திறந்திருக்கிறார் ஷாஜன், “ஷங்கர் சாரிடமிருந்து அழைப்பு வந்தபோது ஒருபக்கம் நம்ப முடியாத சந்தோஷம். இன்னொருபக்கம் எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் ஏற்கெனவே நான் ஒப்புக்கொண்ட வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் வில்லனாக வந்து நின்றன. விஷயம் தெரிந்ததும், ஷங்கர் சார் நான் நடிப்பதற்காக படப்பிடிப்புத் தேதிகளை மாற்றி, தான் பெரிய பட்ஜட் படங்களுக்கு மட்டுமல்ல பெரிய மனதுக்கும் சொந்தக்காரன் என்பதைக் காட்டி அசத்திவிட்டார். அக்ஷய் குமாருடன் நான் நடித்த காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார். அடுத்து ரஜினி சாருடன் நான் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கும் ஷாஜன் நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தவர்.

SCROLL FOR NEXT