இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் சசிகுமார். தன் குருநாதர் பாலு மகேந்திராவுக்காக அவர் இப்போது மீண்டும் ஒரு தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்திருக்கிறார். அவர் இயக்கும் ‘தலைமுறைகள்’ படத்தை தயாரித்து வருகிறார். அத்துடன் ‘பிரம்மன்’ படத்தில் நாயகனாகவும் பிசியாக இருக்கும் சசிகுமாரை, ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.
‘தலைமுறைகள்’ எந்த மாதிரியான கதை?
ஒரு தயாரிப்பாளராக எனக்கு ரொம்ப திருப்தியாக அமைஞ்ச படம் ‘தலைமுறைகள்’. இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் அனைவருக்குமே, உடனே தனது குடும்பத்தைப் பார்க்கத் தோணும். அப்படியொரு ஆத்மார்த்த உணர்வை இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்தும். வெற்றிக்காக ஓடுகிறோம் என்கிற பெயரில் உறவுகளை இழந்துவிட்டு பரபரப்பு உலகில் வாழும் நாம், ஒரு கட்டத்தில் நிம்மதிக்காகத் திரும்பிப் பார்க்கிற நிலை வரும். அப்போது நம் பின்னால் உறவுகள் எனச் சொல்லிக்கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். கோடி ரூபாயைக் கொட்டிக் கொடுத்தாலும் தாத்தா பாட்டி மடியில் தலை சாய்க்கும் நிம்மதியைப் பெற முடியுமா? இத்தகைய தெளிவை இன்றைய தலைமுறைக்கு சொல்கிற படம்தான் ‘தலைமுறைகள்’.
பாலுமகேந்திரா - சசிகுமார் கூட்டணி எப்படி சாத்தியமானது?
திடீரென்று ஒருநாள் பாலு மகேந்திரா சார் போன் பண்ணினார். ‘உன்னைப் பாக்கணுமே’ என்றார். ‘நானே வரேன் சார்’ என்று சொன்னேன். ‘எனக்குத்தான் காரியம் ஆகணும்... நான் தான் வருவேன்’ என்று சொன்னார்.‘தலைமுறைகள்’ கதையைச் சொல்லத் தொடங்கினார். ‘வேண்டாம் சார், நிச்சயம் நான் தயாரிக்கிறேன். நீங்கள் என்னிடமெல்லாம் கதை சொல்லக்கூடாது’ என்றேன். தங்கத்தை உரசிப் பார்க்கும் வியாபாரத்தனம் எனக்குத் தெரியாது. ஆனாலும், விடாப்பிடியாகக் கதை சொன்னார். சொன்ன கதையும் சொல்லிய விதமும் இன்றைக்கும் எனக்குள் ஈரம் மாறாத நினைவுகளாக நிற்கின்றன. மொத்தத்தில் பாலு மகேந்திரா சாரின் கதையைத் தயாரிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
எல்லாம் முடிவான உடனே, ஒரு நாள் அவருடைய அலுவலகம் போனேன். ஒரு புகைப்படத்தைக் காட்டி, எப்படியிருக்கு என்று கேட்டார். ‘சார்.. இவரோட கண்கள் ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு. இவர் தான் நடிக்கிறாரா’ என்று கேட்டேன். ‘நான் தான் அது’ என்றார். நடிகராக பாலுமகேந்திராவை அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் கம்பெனிக்குரியது.
'தலைமுறைகள்' படத்தின் ஒளிப்பதி வாளர், இயக்குநர், நடிகர், எடிட்டர் எல்லாமே பாலுமகேந்திராதான். இதை ஒரு தயாரிப்பாளராக எப்படி பார்க்கிறீர்கள்?
நாம்தான் பாலுமகேந்திராவுக்கு வயசா கிட்டதா நினைக்கிறோம். ஆனால், அவர் இப்போதான் ரொம்ப இளமையான ஆளா இருக்கார். ஒவ்வொரு பிரேமிலும் தன் முழு எண்ணமும் வரணும் என்று நினைக்கிறார். காட்சிகளைப் புதுமையாக்கவும் அழகு படுத்தவும் அற்புதமாக யோசிக்கிறார். இந்த படத்தில் நான் ஒரு காட்சியில் மட்டும் நடிக்கிறேன். 800 பேரை வைச்சு ஒரு சீனை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டு இருந்தவர், ‘இந்த இடத்தில் நில்... இங்கே நட... இங்கே பேசு...’ எனச் சொன்னார். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட அந்தக் காட்சியை பிரிவியூவில் பார்த்து மிரண்டு விட்டேன். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம்.
இயக்குநர் சசிகுமாரை 2014-ல் பார்க்கலாமா?
இப்போ ‘பிரம்மன்’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். இன்னும் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கேன். 2014ல் படம் இயக்கணும். ஆனாலும், நான் நடிக்கிற படங்கள் முடிந்த பிறகுதான் இயக்கத்தில் முழுமையாக இறங்க முடியும். பிறர் படங்களில் நடிக்கிற போது நான் குழந்தை. ஒரு படத்தை இயக்கும்போது நான் தாய். ஒரு படத்தைத் தயாரிக்கும்போது நான் பிரசவம் பார்க்கும் மருத்துவர். இந்த மூன்றிலுமே முழுமையான பரவசத்தை உணர்கிறேன். ஆனாலும், தாய்மை சுமக்கும் தருணத்துக்காகவே காத்திருக்கிறேன்.
முன்னணி நடிகர்களை வைச்சு படம் இயக்க ப்ளான் பண்ணவே மாட்டீங்களா?
முன்னணி நடிகர்களுக்கு ஏற்றவாறு நல்ல கதை அமையணும். அப்படி அமைஞ்சா இயக்கத் தயாரா இருக்கேன். கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். அதுவரைக்கும் சஸ்பென்ஸ்.
ஒவ்வொரு பேட்டியிலும் 'எனது சிஷ்யன் சசிகுமார்' என பாலா பெருமையாக சொல்கிறாரே?
இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்? நம்மளோட வெற்றியையும் குணத்தையும் சில பேருடைய வார்த்தைகள்தான் தீர்மானிக்குது. அவருடைய அபிப்பிராயத்தையும் அன்பையும் பெற்றிருப்பது என் சொத்து. என் வங்கியில் நான் வைத்திருக்கும் பெரிய தொகை அது. அந்த வார்த்தைகளுக்குத் தகுதி உள்ளவனாக என்னைத் தக்க வைத்துக் கொள்வதே எனக்கான இலக்கு.
யாருக்குமே தெரியாமல் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க வைக்கின்றீர்களாமே?
இரண்டு வருடங்களுக்கு முன்.. ப்ளஸ் டூ ரிசல்ட் வந்த நேரம். 1100-க்கு மேல் மதிப்பெண் எடுத்தும் பொறியியல் படிப்பு படிக்க வசதி இல்லாமல் தவிப்பதாகச் சொல்லி ஒரு மாணவரின் நிலையை எனது நண்பர் ஒருவர் சொன்னார். அந்த மாணவரிடம் பேசியபோதுதான் பணம் இல்லாமல் படிப்பை இழந்து தவிக்கும் எத்தனையோ மாணவர்களின் நிலை எனக்குத் தெரிய வந்தது. அவர்களுக்கு சத்தமில்லாமல் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். அதற்காக நிறைய கல்லூரிகளிடம் நானே பேசுகிறேன். முடிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி உதவிக்கு வேண்டுகிறேன். நான் இறங்கிப் போவதால் ஒரு மாணவன் தன் வாழ்வில் ஏறிப் போகிறான் என்றால், அதை லட்சம் முறை செய்யவும் நான் தயார்.