ஓய்வு பெற்ற அப்பா, இல்லத்தரசி அம்மா, இரண்டு மகன்கள் எனக் கச்சிதமான நடுத்தரக் குடும்பம். பொறுப்புள்ள மூத்த மகனாக நாயகன் யகன் சிரிஷ். ஒன்றரை லட்சம் ரூபாய் மோட்டார் சைக்கிள், ஆப்பிள் ஐ போன் என ஆடம்பரமாக வாழப் பேராசைப்படும் இளைய மகனாக சத்யா.
தனது ஆசைகளை அடைவதற்காக எதற்கும் துணிகிறார் சத்யா. அந்த துணிச்சல் அவரை சங்கிலிப் பறிப்புக் கும்பலிடம் அழைத்துச் செல்கிறது. அதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்கிறது இயக்குநர் ஆனந்த கிருஷ்ணாவின் ‘மெட்ரோ’.
நகரத்தின் அமைதியான சாலைகளில் நடக்கும் பயங்கரமான சங்கிலிப் பறிப்புச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் அதிபயங்கரமான வலைப்பின்னலை ஊடுருவிச் செல்கிறது ‘மெட்ரோ’.
எடுத்துக்கொண்ட கதைக் களத்தைத் துல்லியமாகச் சித்தரிக்க இயக்குநர் மெனக்கெட்டிருப்பது காட்சிகளில் தெரிகிறது. அவற்றைக் காட்சிப்படுத்திய விதமும் புதிதாக இருக்கிறது. தங்கச் சங்கிலியை அறுப்பதும் அவற்றுக்கான திட்டமிடல்களும் பதைபதைக்க வைக்கின்றன.
சத்யாவின் சபலங்களில் தொடங்கும் பிரச்சினைகளைச் சங்கிலித் தொடர் காட்சிகளாக இணைத்து ரகசிய உலகம் ஒன்றை அறிமுகப்படுத்துகிறார் இயக்குநர். சங்கிலியை அறுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள், திருட்டுச் சங்கிலிகளை விற்பதற்கான முகவர்களுக்கான ரகசிய எண்கள், திருட்டு நகை உலகின் நடுநிசி மனிதர்கள், நகைகளை உருக்கித் தங்க பிஸ்கெட்டுகளைத் தயாரிக்கும் ரகசியத் தொழிற்கூடம் என இன்னொரு உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறது படம். பெருமளவு நம்பகத்தன்மையுடன் இந்த உலகம் திரையில் விரிகிறது.
நாயகன் சிரிஷ் பாத்திரத்துக்கேற்ற உடல் மொழியையும் உணர்ச்சிகளையும் நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். சத்யா அதிகக் காட்சிகளில் ஆக்கிரமிக்கிறார். ஆசைப்பட்டது கிடைக்காமல் வெறித்தனமாக அல்லாடுவது, கிடைத்த பின்பு பணத்தால் விசிறிக்கொள்வது போன்ற அவரது பாவனைகள் கவனிக்கவைக்கின்றன. பாபி சிம்ஹாவுக்கு ஒப்பீட்டளவில் சிறிய வேடம்தான்.
திருட்டுக்கும் பறிப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்கும் காட்சியில் அவரது நடிப்புத் திறன் நன்கு வெளிப்படுகிறது. பாத்திரத்துக்கேற்ற கெத்து அவர் உடல் மொழியில் காணப்படுகிறது.
பாடல்களே இல்லாமல் படங்கள் எடுப்பதுபோல நாயகியே இல்லாமல் எடுத்திருக்கலாம். நாயகிக்கான காட்சிகளும் தேவையும் வேலையும் மிகக் குறைவு. பாவம் மாயா. சென்ராயன், நாயகனின் துணைவராக வருகிறார். தமிழ் சினிமாவில் நாயகனின் நண்பர்களின் நிரந்தர வேலையான காமெடியை இதில் முற்றாகத் தவிர்த்து, சீரியஸான பாத்திரத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர். அதை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார் சென்ராயன்.
வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. இசையமைப்பாளர் ஜோகன் சிவனேஷ் பின்னணி இசையில் மிரட்டுகிறார். கானா பாடலில் கலக்குகிறார். மெல்லிசைப் பாடலில் வருடுகிறார். இன்னொரு பாடலில் ஜாஸ் இசையைத் தெறிக்கவிட்டிருக்கிறார்.
உதயகுமாரின் ஒளிப்பதிவில் இரவுக் காட்சிகளைப் பதிவுசெய்த விதம் நன்று. காட்சிகளுக்கு ஏற்ப வித்தியாசமாக அமைந்துள்ள சில கோணங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன. சங்கிலிப் பறிப்புக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ள விதம் அந்தக் காட்சிகளின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
சங்கிலிப் பறிப்பு வலைப்பின்னலை விரிவாகக் காட்சிப்படுத்துவதில் இயக்குநர் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், அந்தக் கும்பலை ஒழிக்கும் விஷயத்தில் நாயகனை மட்டுமே முன்னிறுத்துவது இதை வழக்கமாக படமாக்கிவிடுகிறது. நாயகனின் தம்பி திருடனாக மாறுவதற்கான காரணம் வலுவாக இல்லை. நாயகன் திருட்டு வலைப்பின்னலை ஊடுருவி அழிக்கும் காட்சிகள் நம்பகத்தன்மையோடு இல்லை. திருடர்கள் காவல் துறையினரைக் கடுமையாகத் தாக்கிய பின்பும் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.
சங்கிலிப் பறிப்பின் நுட்பங் களையும் அதனால் எளிதாகக் கிடைக்கும் பெரும் லாபங்களையும் இவ்வளவு விரிவாகக் காட்டுவது மோசமான முன்னுதாரணமாக அமையாது என்பது என்ன நிச்சயம்? மது அருந்தும் அப்பாவிடம் சிகரெட்டைக் கேட்டு வாங்கி அவர் முகத்திலேயே புகையை விடுகிறார் நாயகன். அப்பா - மகன் நட்பைக் காட்ட வேறு காட்சியே இல்லையா? போதைப் பழக்கங்களால் சமூகம் செல்லரித்துக் கிடக்கும் நிலையில் இதுபோன்ற காட்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
இப்படிப்பட்ட சில குறைகள் இருந்தாலும் சென்னையின் புத்தம்புது ரயிலைப்போல அதிவேகத்தில் பயணிக்கிறது மெட்ரோ!