படப்பிடிப்பு முடிந்து எடிட்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகள் முடிந்து, படத்தை மெருகேற்றும் படலம் நடக்கும் இடம் கலரிங். தெலுங்கில் வெளியாகியுள்ள ‘குரு' ‘பிரம்மோற்சவம்', ‘துருவா', தமிழில் ‘மாயா', ‘ஒ.கே கண்மணி', ‘இரண்டாம் உலகம்', ‘அரவான்', ‘லிங்கா', ‘தூங்காவனம்', ‘குற்றம் 23', ‘இறுதிச்சுற்று', 'தோழா' எனப் பல படங்களுக்குக் கலரிங் செய்திருப்பவர் ரங்கா. அவருடைய ஸ்டூடியோவுக்குச் சென்றபோது ‘படை வீரன்' படத்தின் கலரிங் பணிகளுக்கு இடையே பேசினார்.
‘கலரிங்' பணித் தன்மையைப் பற்றி சொல்லுங்கள்?
என்னுடைய பணிக்கும் டப்பிங், பின்னணி இசை உள்ளிட்ட பணிக்கும் சம்பந்தம் கிடையாது என்பதால் ரீல் வாரியாக எடுத்துப் பணிபுரியத் தொடங்கிவிடுவேன். ஒவ்வொரு ரீலிலும் உள்ள காட்சியமைப்புகளுக்கு என்ன மாதிரியான கலரிங் தேவைப்படுகிறதோ அதைச் செய்ய ஆரம்பித்துவிடுவேன். இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் இருவருமே என்ன நினைக்கிறார்கள் என்பதையும் கேட்டு வைத்துக் கொள்வேன். இப்போது ஃபோட்டோ ஷாப் போன்று, லேயர்களாகப் பிரித்துப் பணிபுரிகிறோம். தற்போது நீங்கள் எப்படிப் படப்பிடிப்பு செய்தாலும், அதைக் கதைக்களத்துக்கு தகுந்தார் போன்று மாற்றிக் கொள்ளலாம். ‘இரண்டாம் உலகம்' படத்தை எடுத்துக் கொண்டால், படப்பிடிப்பு செய்த காட்சிகளை, மொத்தமாக உருமாற்றியிருப்போம்.
இப்பணிக்கு என்ன படித்திருக்க வேண்டும்?
கலரிங் மற்றும் படங்கள் வரைவதில் ஆர்வமிருந்தால் போதும். லஸ்டர், பேஸ்லைட் போன்ற சாஃப்ட்வேர்கள் உள்ளன. அதைப் படித்தால் போதும். கலரிங் சென்ஸ் முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். இருட்டு அறையில் உட்கார்ந்தே பணியாற்றி வருவோம். வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. இதில் ஆர்வமிருந்தால் மட்டுமே பணிபுரிய எளிதாக இருக்கும். சாதாரண வேலை என்று நினைத்துச் செய்யத் தொடங்கினால் கடினமாக இருக்கும்.
உங்களுடைய முதல் படம் என்ன? அதிக சிரத்தை எடுத்துச் செய்த படம் எது?
‘சென்னை 28' எனது முதல் படம். கதைக்களம் யதார்த்தமாக இருந்ததால், காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்காது. யதார்த்தக் கதைக் களங்கள் கொண்ட படங்களுக்கு நேர் எதிரான கலர் சென்ஸுடன் கமர்ஷியல் படங்களுக்குப் பணிபுரிய வேண்டியிருக்கும்.
சுமார் 400 படங்கள் வரை பணிபுரிந்திருப்பேன் என நினைக்கிறேன். கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் படமென்றால், அதில்தான் எனது பணி அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஒரு காட்சியை எடுத்துக் கொண்டால்
படப்பிடிப்பு நடத்தியது பிரதமானமாக இருக்கும், அதில் கிராஃபிக்ஸ் வரும் இடங்களில் எல்லாம் தனித்தனி லேயராக பணிபுரிந்திருப்பார்கள். நான் ஒவ்வொன்றையும் படத்தின் கதைக்களத்துக்கு ஏற்றவாறு ஒரே மாதிரிக் கலரிங் செய்து ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரி இருப்பது போன்று கொண்டுவர வேண்டும். வழக்கமான படங்களில் எனது பணியை 20 நாட்களுக்குள் செய்துவிடலாம்.
விருதுகள் பட்டியலில் உங்களுடைய துறைக்கு விருது இல்லையே. இதில் வருத்தம் இருக்கிறதா?
வருத்தம் அல்ல கோபம் இருக்கிறது. விருதுகள் என எடுத்துக்கொண்டால் கேரள அரசாங்கம் மட்டும்தான் விருது கொடுக்கிறது. ‘பெங்களூர் டேஸ்' படத்துக்காக சிறந்த கலரிஸ்ட் விருது வாங்கினேன். இந்தப் பிரிவை அரசாங்கமே விருதுப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். விரைவில் தமிழக அரசும் சேர்க்கும் என நம்புகிறேன். அப்படிச் சேர்த்தால், எங்களுக்கு இன்னும் கொஞ்சம் ஊக்கமாக இருக்கும்.தேசிய விருது பட்டியலிலும் எங்களுக்கு விருதுப் கிடையாது. ஆஸ்கர் விருதுகள் பட்டியலில் எங்களுடைய பணிக்கு விருது உள்ளது.
எப்போதுமே பணிகள் இருக்குமே. குடும்பத்துக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
காலையில் ஒரு படம், மதியம் ஒரு படம் என்றுதான் பணிபுரிவோம். தினமும் 12 மணி நேரம் பணிகள் இருக்கும். கொஞ்சம் கண்ணுக்கு ஓய்வு கொடுத்தால் மட்டுமே, அடுத்த நாள் பணிபுரிய முடியும். தொடர்ச்சியாகத் தூங்காமல் பணிபுரிந்து வந்தால், கலரிங் தவறாகிவிடும்.
கோடை விடுமுறைக்கு நிறைய படங்கள் வெளியீடு இருக்கும். அந்தச் சமயத்தில் வேலை அதிகமாக இருக்கும். அதனால் டூர் போக முடிவதில்லை. தீபாவளி, பொங்கல் போன்ற விடுமுறை நாட்களிலும் பணி அதிகமாக இருப்பதால், சொந்த ஊருக்குப் போகவே முடிவதில்லை.
கலரிஸ்ட் ரங்கா | படம்: எல்.சீனிவாசன்