இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: அந்த 40 நாட்கள்

ஆசை

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றிக் கணக்கிலடங்காத படங்கள் உலகெங்கும் வந்திருக்கின்றன, வந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், புகழ்பெற்ற இயக்குநர் ரோத்ரிகோ கார்ஸியாவின் ‘லாஸ்ட் டேஸ் இன் த டெஸர்ட்’ கடந்த மே மாதம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படம் ஆசியாவிலும் குறிப்பாக இந்தியாவிலும் இந்த மாதம் வெளியாகிறது.

இயேசு கிறிஸ்து பாலைவனத்தில் 40 நாள் உபவாசம் இருந்ததை அடிப்படையாகக் கொண்டு கற்பனைச் சம்பவங்களுடன் இந்தப் படத்தின் கதை பயணிக்கிறது. இயேசு எதிர்கொண்ட வலியும் வேதனையும் சவால்களும் மிகுந்த பயணம் அது. இயேசுவாக நடித்திருப்பவர் யூவன் மெக்ரேகர். இயேசுவுக்கு அவருடைய பயணத்தில் கடும் சவால்களையும் சஞ்சலங்களையும் கொடுக்கும் சாத்தானாகவும் மெக்ரேகரே வேடம் பூண்டிருக்கிறார்.

பாலைவனப் பயணத்தில் ஒரு குடும்பத்தை இயேசு சந்திக்கிறார். ஒரு அப்பா, நோயாளியாக இருக்கும் அம்மா, ஒரு பையன் என்று சிறிய குடும்பம் அது. நகர வாழ்க்கையை வெறுக்கும் அந்தக் குடும்பத் தலைவர், ஜெருசலேமுக்குத் தன் குடும்பத்துடன் இடம்பெயர்ந்து, தன் மனைவிக்கு சிகிச்சை எடுக்காமல் ஒரு மலை உச்சியில் வீடு கட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்.

அந்தச் சிறுவனோ நகரத்துக்குச் செல்வதில் விருப்பமாக இருக்கிறான். அந்தச் சிறுவனை அவன் விருப்பப்படியே நகரத்துக்குச் செல்லச் சொல்கிறார் இயேசு. அந்தக் குடும்பத் தலைவர் வழியாகத் தந்தைமையின் அதிகாரக் குணத்தைப் பற்றி இயக்குநர் அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்.

உபவாசத்தின் நாற்பது நாட்களும் சாத்தான் கொடுத்த சோதனைகள், சஞ்சலங்கள், துர்க்கனவுகள், ஒரு குடும்பத்துடனான நட்பு என்று கழிகின்றன. அதற்குப் பிறகு சிலுவையேற்றத்துக்குக் காட்சிகள் தாவுகின்றன. சிலுவையில் தனியராக இயேசு மரணிப்பதாகப் படம் முடிகிறது.

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸின் மூத்த மகன் ரோத்ரிகோ கார்ஸியாவும் தன் தந்தை போலவே அட்டகாசமான, அதியற்புதக் கருக்களைத் தன் படங்களுக்குத் தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த முறை அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதையில் கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்ஸ்டாகிஸ் எழுதிய ‘த லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் ஜீஸஸ் கிறைஸ்ட்’ (இந்த நாவலைத் தழுவி மார்ட்டின் ஸ்கார்ஸஸி படம் எடுத்திருக்கிறார்), போர்ச்சுகல் எழுத்தாளர் ஹோஸே சரமாகுவின் ‘காஸ்பல் அக்கார்டிங் டூ ஜீஸஸ் கிறைஸ்ட்’ ஆகிய நாவல்களின் சாயல்கள் உண்டு.

‘காஸ்பல் அக்கார்டிங் டூ ஜீஸஸ் கிறைஸ்ட்’ நாவலில் இயேசுவின் உபவாசத்துக்கு முன்பு சாத்தான் எதிர்சக்தியாகக் கூட வந்துகொண்டே இருக்கும். சாத்தானுடைய கதாபாத்திரம் மிகவும் பிரம்மாண்டமான ஆளுமையைக் கொண்டதாக இருக்கும். சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே நுண்ணிய வேறுபாடு அந்த நாவலில் காட்டப்பட்டிருக்கும். முக்கியமாக, சாத்தானும் ஒரு மேய்ப்பராகக் காட்டப்பட்டிருப்பார்.

பாலைவனத்தில் உபவாசம் இருக்கும் நாட்களில் கடவுளை இயேசு எதிர்கொள்வார். இந்தப் படத்திலோ இயேசுவை சாத்தான் பாலைவனத்தில் பின்தொடர்கிறார், அதுவும் இயேசுவின் உருவிலேயே. ‘லாஸ்ட் டெம்ப்ட்டேஷன்’ நாவலில் வருவதுபோல் இயேசுவுக்கும் சில சஞ்சலங்கள், சபலங்கள், பயம் ஏற்படுவதாக இந்தப் படத்தில் சித்தரிக்கப்படுகிறது. இந்த உணர்வுகளெல்லாம் அவரது கனவுகளாகவோ பிரமைகளாகவோ படத்தில் காட்டப்படுகின்றன.

வழக்கமாக, இயேசுவைப் பற்றிய படங்களில் தத்துவ விசாரங்கள், போதனைகள் எல்லாம் இருக்கும். இந்தப் படத்தில் அப்படி ஏதும் இல்லை என்றும், படத்தில் வசனங்களின் இடம் மிகக் குறைவு என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மெல் கிப்ஸனின் ‘பாஷன் ஆஃப் ஜீஸஸ் கிறைஸ்ட்’ படத்தோடும் விமர்சகர்கள் இந்தப் படத்தை ஒப்பிட்டு வேறுபடுத்துகிறார்கள். மெல் கிப்ஸனின் படம் வன்முறை மிக்கதாகவும் ரத்தம் தெறிப்பதாகவும் இருக்கும். கார்ஸியாவின் படமோ வன்முறையை உருவகமாக எதிர்கொள்கிறது என்று சொல்லப்படுகிறது.

டிவிஷன் ஃபிலிம்ஸ், மாக்கிங்பேர்டு பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்துக்கு டேனி பென்ஸி, சாண்டர் யூரியான்ஸ் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளாக ஒளிப்பதிவுக்காகத் தொடர்ந்து ஆஸ்கர் விருது வென்ற இம்மானுவேல் லூபெஸ்கிதான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்த மாதம் இந்தியாவில் வெளியாகும் இந்தப் படத்துக்குப் பலத்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

SCROLL FOR NEXT