இந்து டாக்கீஸ்

டிஜிட்டலில் ‘ஆயிரத்தில் ஒருவன்’

செய்திப்பிரிவு

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 49 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது. ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் டிரெயிலர் வரும் பொங்கல் பண்டிகை முதல் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து திவ்யா பிலிம்ஸ் உரிமையாளர் சொக்கலிங்கம் கூறியதாவது:

எம்.ஜி.ஆர் நடிப்பில் பெரும் வெற்றியை பெற்ற ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடவிருக்கிறோம்.

35 எம்.எம் வடிவத்தில் இருந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை புதிய சினிமாஸ்கோப் வடிவத்தில் மாற்றும் வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறோம்.

அதேபோல 5.1 டிடிஎஸ் சப்தத்தில் மெருகேற்றப்பட்டு பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படம் இது. அன்று நாயகியாக நடித்த ஜெயலலிதா இன்று முதல்வராக இருக்கும் இந்நேரத்தில் படத்தின் டிஜிட்டல் வடிவத்தை கொண்டுவருவது சந்தோஷம் அளிக்கிறது.

இதேபோல, முன்பு சிவாஜி நடிப்பில் வெளிவந்த ’கர்ணன்’ படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிட்டோம்.

வரும் டிசம்பர் 24-ம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினத்தன்று இந்த டிஜிட்டல் வடிவத்தின் தொடக்க வேலைகளின் அறிவிப்பை அவரின் நினைவு தின சமர்ப்பணமாக அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் ஒரே நேரத்தில் படம் வெளிவர உள்ளது.

SCROLL FOR NEXT