தமிழ் சினிமாவையும் சண்டைக் காட்சிகளையும் பிரித்துப் பார்க்க முடியாது. மிக ஆபத்தான ஸ்டண்ட் காட்சிகளில் கதாநாயகர்களுக்கு ‘டூப்’ போட்டு அடிவாங்குவதில் தொடங்குகிறது ஸ்டண்ட் கலைஞர்களின் வலி மிகுந்த வாழ்க்கை. ஆபத்தான சேஸிங், உயரமான இடத்திலிருந்து குதித்தல், தாவுதல் என ஹாலிவுட்டுக்கு இணையான திறமை கொண்டவர்கள் தமிழ் சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள். இவர்களுக்கு ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு இரண்டுமே இதுநாள்வரை மறுக்கப்பட்டுவருகின்றன. தற்போது ‘அனல்’ அரசு தலைவராக இருக்கும் தமிழ் சினிமா ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி வைத்தவர் எம்.ஜி.ஆர். தற்போது 650 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்துக்குப் பொன்விழா சென்னையில் நடக்கிறது.
வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியாகப் பொன்விழாவைக் கொண்டாட இருக்கிறார்கள். “நாங்கள் இந்திய மொழிப் படங்கள் எல்லாவற்றிலும் பணியாற்றியிருக்கிறோம். எங்கள் உழைப்பைப் பற்றியும் எங்கள் இழப்பைப் பற்றியும் அனைத்துத் தரப்பு திரையுலகக் கலைஞர்களுக்கும் தெரியும். அதனால் எல்லோரையும் விழாவுக்கு அழைக்க இருக்கிறோம். விழா பிரம்மாண்டமாக இருக்கும். சுமார் 6 மணி நேரம் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டம் மட்டுமல்ல; எங்கள் ஸ்டண்ட் கலைஞர்களின் சாகசக் காட்சிகளும் இடம்பெறும்” என்கிறார் சங்கத் தலைவர் ‘அனல்’அரசு. பொன்விழாவின் முகூர்த்தத்திலாவது இவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறுமா?
கண்ணதாசன் குடும்பத்திலிருந்து…
கவியரசு கண்ணதாசன் குடும்பத்திலிருந்து பலர் திரையுலகுக்கு வந்திருக்கிறார்கள். தற்போது ஒரு புதிய கதாநாயகன் வருகிறார். அவர் கவிஞர் கண்ணதாசனின் பேரனும், இயக்குநர், கதாசிரியர் அண்ணாதுரை கண்ணதாசனின் மகனுமான முத்தையா கண்ணதாசன். எம். ஜெயப்பிரகாஷ் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘வானரப்படை’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி ஆகியோரும் நடிக்க, அவந்திகா என்ற சிறுமி முத்தையா கண்ணதாசனின் மகளாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
அவருடன் அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் என்கிற ஆறு சிறுவர், சிறுமியர் வானரப் படையாக நடிக்கிறார்கள். 9 வயதிலிருந்து 11 வயதுவரை உள்ள சிறுவர், சிறுமியரின் கள்ளம் கபடமில்லாத உலகம்தான் கதைக் கரு. “பெற்றோருக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் சின்ன இடைவெளிதான் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களை மையமாகக் கொண்டு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மனப் போராட்டங்களைச் சொல்லும் திரைப்படமாக இது உருவாகிவருகிறது” என்கிறார் இயக்குநர் எம். ஜெயப்பிரகாஷ்.
வாய்ப்பு வழங்கிய ஒளிப்பதிவு!
பாண்டிராஜின் ‘பசங்க’, சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’, விஜய் சேதுபதியை பாக்ஸ் ஆபீஸ் நாயகன் ஆக்கிய ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ உட்பட பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் சி. பிரேம்குமார். இவரது ஒளிப்பதிவைக் கவனித்துவந்த விஜய்சேதுபதி, “உங்களுக்குள் ஒரு சிறந்த இயக்குநரும் இருக்கிறார்” என்று கூற, தற்போது அது நிஜமாகிவிட்டது.
பிரபல தயாரிப்பாளர் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் படத்தை எழுதி இயக்குகிறார் பிரேம்குமார். இயக்கத்தைக் கையில் எடுத்துவிட்டதால் ஒளிப்பதிவு செய்யும் பணியைத் தன் நண்பருக்குக் கொடுத்துவிட்டார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய இருப்பவர் சண்முகசுந்தரம்.
பிஸி தேவா!
சொந்தப் பட நிறுவனம் தொடங்கி, பிரபுதேவா தயாரித்து நடித்த ‘தேவி’ அவருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபம் தந்த படமாகிவிட்டது. இதனால் தயாரிப்பது, இயக்குவது, வெளிப் படங்களில் நடிப்பது என்று பிஸியாகிவிட்டார் பிரபுதேவா. தற்போது எம்.எஸ். அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாகவும், அவருக்கு அப்பாவாக தங்கர்பச்சானும், கதாநாயகியாக லட்சுமி மேனனும் நடித்திருக்கும் படம் ‘யங் மங் சங், இதில் பிரபுதேவா ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறார்.
அதாவது குங்ஃபூ சண்டை சொல்லிக்கொடுக்கும் மாஸ்டராக. எஸ். கல்யாண் இயக்கத்தில் ‘குலேபகாவலி’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்துக்கொண்டே ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இதில் விஷாலும் கார்த்தியும் இணைந்து நடிக்கிறார்கள். தொடர் வெற்றியைக் குறிவைக்கும் பிரபுதேவா நகைச்சுவை தூக்கலாக இருக்கும் த்ரில்லர் கதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறாராம்.
பூங்காவில் குங்ஃபூ நாயகி
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அநேகன்’ படத்தில் அறிமுகமானார் மும்பைப் பெண்ணான அமைரா தஸ்தூர். அதன் பிறகு தமிழ்ப் படம் எதிலும் தலைகாட்டாத அவர், இந்திய – சீன கூட்டுத் தயாரிப்பாக உருவான ‘குங்ஃபூ’ யோகா படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஜாக்கி சானுடன் நடித்து வெளிநாடுகளில் ரசிகர்களைச் சம்பாதித்துக்கொண்டார். தற்போது தமிழில் அவர் நடித்துவரும் படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. கே.எஸ். மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்திருக்கிறது. அப்போது அமைராவையும் சந்தானத்தையும் காணக் கூட்டம் அலைமோதியதால் படப்பிடிப்பை இடம் மாற்ற வேண்டியதாகிவிட்டதாம்.