அமைதியான தோற்றமும், தருணம் உருவாகும்போது வெடித்தெழும் வீரமும் கொண்ட பாத்திரங்களில் நடித்துவரும் விஜய் ஆண்டனி நடித் திருக்கும் அரசியல் த்ரில்லர் படம் ‘எமன்’. ‘சைத்தான்’படத்தின் சறுக்கலை அடுத்து இந்தப் படத்தை விஜய் ஆண்டனி வெகுவாக நம்பியிருந்திருப்பார். ‘நான்’ படத்தின் மூலம் அவரது திரையுலகப் பிரவேசத்தை அழுத்தமாகத் தொடங்கி வைத்த இயக்குநர் ஜீவா சங்கர் இதை இயக்கியிருக்கிறார். இவற்றால் எழும் எதிர்பார்ப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது படம்?
1980-களில் திருநெல்வேலி கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சாதிக் கலப்புத் திருமணம் தொடர்பான விரோதம், உட்கட்சி அரசியல் மோதல் ஆகியவற்றால் கொல்லப்படுகிறார் தமிழரசனின் (விஜய் ஆண்டனி) தந்தை அறிவுடை நம்பி (அவரும் விஜய் ஆண் டனிதான்). மன அழுத்தம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்துகொள்ள, பிறந்த சில நாட்களிலேயே அநாதையாகி றான் தமிழரசன். சங்கிலி முருகனால் வளர்க்கப்படும் தமிழரசன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் குற்றம், அரசியல் ஆகிய வற்றுக்குள் நுழைகிறான். வாய்ப்ப்பு களைத் திறமையாகப் பயன்படுத்தி, கபட வேடதாரிகளின் சூழ்ச்சிகளை அவர்கள் பாணியிலேயே முறியடித்து வெல்கிறான்.
கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல சாயைகள். நாயகனின் கதாபாத்திரம் இந்த இடைவெளிக்குள் இருக்கிறது. தவறு செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எதுவும் இல்லாதவன். ஆனால், தேவைப்பட்டால் எந்தத் தவறை யும் செய்துவிடுவான். நல்லவர்களிடம் அன்பும் அனுசரணையும் கொண்டிருப் பவன். எதிரிகளின் ஆயுதங்களையே பயன்படுத்தி அவர்களை வெல்பவன். இத்தகைய மனிதனை மையப் பாத்திரமாக்கியிருப்பது படத்தின் வலுவான அம்சங்களில் ஒன்று.
நாயகனின் எதிரிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட முகங்கள் கொண்டவர்கள். நட்பு, விசுவாசம் ஆகியவற்றை விடவும் வெற்றியையே முக்கியமாக நினைக்கும் அரசியல்வாதிகள். இத்தகைய மனிதர் களிடையே நடக்கும் மோதலின் களம்தான் ‘எமன்’. இந்த மோதல்களைச் சுவையான திருப்பங்கள் நிறைந்த திரைக் கதையாக்கித் தந்திருப்பதில் இயக்குநர் வெற்றிபெறுகிறார். ஆனால், நாயகனின் பாத்திரத்தை வலுவாக நிலை நிறுத்து வதில் இயக்குநர் தவறியிருக்கிறார்.
நாயகன் எதிர்கொள்வதெல்லாம் ஆபத்தான இரட்டை வேடதாரிகளை. எந்த வித முன் தயாரிப்போ, வியூகமோ இல்லாமல் ‘என்னதான் நடக்கும் நடக் கட்டுமே’ என்று அவர்களை எதிர் கொள்கிறான். எதிராளி மிரட்டினால், அதைவிடக் கடுமையாக மிரட்டி வாயடைக்க வைக்கிறான். நாயகன் அசாத்தியமான மனஉறுதியும் எதையும் எதிர்கொள்ளும் திறனும் பெற்றதன் பின்னணி ஒரு காட்சியில்கூடச் சொல்லப் படவில்லை. காட்சிக்குக் காட்சி அதிரடி யும் அதிநாயகத்தன்மையும் நெளிய வைக்கின்றன. நாயகனின் அடுத்தடுத்த வெற்றிகள் திகட்டுகின்றன. எனவே, அதிநாயக சாகசங்களைக் கொட்டாவி யுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. உயிரைப் பணயம் வைத்து மோதும் போர்க்களம் தொய்வுடன் நகரும் காட்சிகளால் ‘போர்’ களமாகிவிடுகிறது.
தர்க்க எல்லைகளைத் தாண்டிய மசாலா படங்களில் இருக்கும் விறு விறுப்பும் வேகமும் இல்லாதது படத்தின் பெரிய பலவீனம். காட்சிகளின் நீளம், வசனங்களின் நீளம் ஆகியவை இதற்குக் காரணம். எனினும் ‘அரசியல்ல எதிரி எதிர்ல நிக்க மாட்டான், விசுவாசமா கூடவே நிப்பான்’ போன்ற சில வசனங்கள் மனதில் நிற்கின்றன.
படத்தின் வேகத்தைக் குறைப்பதில் பாடல் காட்சிகளும் பங்கு வகிக்கின்றன. மியா ஜார்ஜின் பாத்திரமும் அது திரைக்கதைக்குப் பயன்படும் வித மும் சமையலில் கொத்துமல்லி, கறிவேப்பிலையின் பயன்பாட்டுக்கு இணையானவை.
விஜய் ஆண்டனியின் வழக்கப்படி அடக்கிவாசிக்கும் பாத்திரம். அவரது உடல்மொழியிலும் முக பாவனை களிலும் சிறிது முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் குத்துப் பாடலில்கூட வெளுத்து வாங்காமல் அமரிக்கையாகவே ஆடு வது ஏன் என்று தெரியவில்லை. முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கும் தியாகராஜன் அடக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். நாயகி மியா ஜார்ஜுக்குக் குறைந்த வாய்ப்புதான். ஆனாலும் அதில் அவர் குறை வைக்கவில்லை. சார்லி நிறைவாகச் செய்திருக்கிறார்.
பின்னணி இசை பரவாயில்லை என்றாலும், பாடல்களில் விஜய் ஆண்டனியின் முத்திரை இல்லை. ‘என் மேலே கைவச்சா காலி’ என்னும் குத்துப் பாட்டும் ‘கடவுள் எழுதும் கவிதை’ டூயட் பாட்டும் கேட்கும்படி இருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரள வைக்கிறார் (ஒளிப்பதிவாளர்) ஜீவா சங்கர்.
சமகால அரசியலைவிட மிகையாகப் படத்தில் எதுவும் நடந்துவிடவில்லை என்றாலும் காட்சிக்குக் காட்சி வரும் சூழ்ச்சி களைப்படைய வைக்கிறது. தொடக்கத்தில் இருந்தே ஒவ்வொரு பாத் திரமும் யார் முதுகிலாவது குத்திக் கொண்டே இருக்கிறது. ஓரளவு மனசாட்சி கொண்டவராக வரும் சார்லிகூட இரட்டை வேடம் போடுகிறார். ‘மாற்றத்தை உங்களிடமிருந்து தொடங் குங்கள்’ எனும் காந்தியின் வார்த்தை களைப் பேசும் நாயகன், அவரது அஹிம்சைக் கொள்கையைக் கண்டு கொள்ளவே இல்லை.
சற்றே அழுத்தமான காட்சிகளும் கடைசி பத்து நிமிடங்களில் ஏற்படும் நம்பகமான திருப்பங்களும் இல்லா விட்டால் படம் ஒரு பெரும் விபத்தாகியிருக்கக்கூடும்.