சூப்பர் ஹீரோ படமென்றால் ஹாலிவுட்தான் அதில் கில்லி. இந்தியாவிலிருந்தும் ஒரு சூப்பர் ஹீரோ உருவாக முடியும் என்று காட்டினார் ஹ்ருத்திக் ரோஷன். தமிழில் விக்ரமை வைத்து சுசி கணேசன் செய்த முயற்சி ஏனோ வரவேற்பைப் பெறாமல் போய்விட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் மற்றொரு இந்திய மொழியிலிருந்து சூப்பர் ஹீரோ படம் ஒன்று உருவாகியிருக்கிறது.
இந்த சூப்பர் ஹீரோ சாகசங்கள் செய்வதோடு மட்டும் நின்றுவிட மாட்டார், இந்திய ரசிகர்களை வயிறுநோகச் சிரிக்கவைக்கவும் செய்வாராம். இப்படியொரு நகைச்சுவை சூப்பர் ஹீரோ படத்தை பஞ்சாபி மொழியில் தயாரித்திருக்கிறார்கள்.
'சூப்பர் சிங்' என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் அனுராக் சிங். வணிக ரீதியில் வெற்றிபெற்ற 'ஜாட் அன்ட் ஜூலி', 'பஞ்சாப் 1984' ஆகிய பஞ்சாபிப் படங்களை இயக்கியவர். பாலிவுட்டைக் கலங்கடித்த 'உட்தா பஞ்சாப்’ இந்திப் படத்தில் உதவிக்காவல் ஆய்வாளராக நடித்து அசத்திய டில்ஜித் தோஸங் சூப்பர் சிங் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் பஞ்சாப் பாப் இசை வட்டாரத்தில் மிகவும் பிரபலம்.
படத்தில் இவருக்கு ஜோடி சோனம் பாஜ்வா. 2012 மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சோனம் பாஜ்வா, 'கப்பல்' என்ற தமிழ்ப் படத்தில் வைபவுடன் இணைந்து நடித்தார். கூச்ச சுபாவம் கொண்ட சூப்பர் சிங் தனக்குத் திடீரென்று கிடைத்த அரிய சக்தியைப் பயன்படுத்தி என்ன மாதிரியான சாகசங்களில் ஈடுபடுகிறார் என்பதுதான் கதை. பாலிவுட்டில் பஞ்சாபி மொழியிலேயே வெளியாகவிருக்கிறார் ‘சூப்பர் சிங்’.
- கனிமொழி ஜி