ராஜு முருகன், இரா.சரவணன் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இயக்குநர்கள் ஆன பத்திரிகையாளர்கள். இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார் ‘கல்கி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய இதழ்களில் பணியாற்றிய மு.மாறன். இவர் இயக்கும் படத்துக்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. அருள்நிதி நாயகனாகவும் மகிமா நாயகியாகவும் நடிக்க, ‘குற்றம்-23’ படத்துக்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். 'ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் க்ரைம் த்ரில்லர் படம் இது.
கலை இயக்குநரின் வியப்பு!
‘பாகுபலி-2’ படத்தின் ட்ரைலர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அடுத்த மாதம் 28-ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தின் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் சாபு சிரில் படம் குறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் அடுக்கடுக்காக பாகுபலி அனுபவங்களை வெளியிட்டுவருகிறார். அதில் “பாகுபலி குழுவுடன் இணைந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது! பத்து படங்களில் செய்ய வேண்டிய உழைப்பை இந்த ஒரு படத்துக்காகச் செய்திருக்கிறேன்.
‘பாகுபலி’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அனைவருக்கும் நிறைய ஆச்சரியங்களைத் தரவிருக்கிறது. முதல் பாகத்தில் அதிகமாக கிராஃபிக்ஸ் வேலைகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இரண்டாம் பாகத்தில் மிகப் பிரம்மாண்டமான செட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம். முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான படம் என்ற பெருமையும் ‘பாகுபலி-2’க்கு உண்டு. படத்தின் க்ளைமேக்ஸை ஆந்திராவிலுள்ள மிகப் பெரிய ஒரு கல் குவாரியில் படமாக்கியிருக்கிறோம். படத்தின் 90 சதவிகிதப் படப்பிடிப்பு ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து முடிந்தது. காடு சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் கேரளாவிலுள்ள கண்ணவம் வனப்பகுதியில் படமாக்கியிருக்கிறோம்” என்று தகவல்களை வியப்புடன் அடுக்கிச் செல்கிறார் சிரில்.
அனிமேஷன் நாயகி அல்ல!
‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோன். தற்போது ரஜினிக்கு ஜோடியாக இயக்குநர் ரஞ்சித் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். இம்முறை அனிமேஷன் நாயகி அல்ல என்பதில் நிச்சயம் தீபிகா மகிழ்ந்திருப்பார்.
ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் நடித்து முடித்த கையோடு ரஜினி நடிக்கவிருக்கும் படம் இது. தனுஷின் பட நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முதலில் வித்யா பாலனிடம் பேசப்பட்டது. ஆனால் வித்யா பாலன் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க இருப்பதால் அவரால் கால்ஷிட் தர முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதாம்.
பறந்து பார்த்த கார்த்தி!
மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘‘இது எனது கனவுப் படம் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும்! காரணம் எல்லோருக்கும் மணி சார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எனக்கும் அந்த வாய்ப்பு இந்தப் படத்தின் மூலம் கிடைத்துள்ளது.
மணிரத்னம் சார் திரைக்கதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். நான் ஏற்றிருக்கும் ‘ஃபைட்டர் பைலட்’ வருண் கதாபாத்திரம் பற்றிப் படித்ததும் அந்த கேரக்டரில் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது. கதாபாத்திரத்தை முழுமையாக உணர்ந்துகொள்ள சண்டை விமானத்தில் சண்டை விமானி ஒருவருடன் பயணம் செய்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.” என்றார்.