இந்து டாக்கீஸ்

திரைக்கதையின் திருப்பமே நான்தான்! - நடிகை அனுஷ்கா பேட்டி

முத்து

‘பாகுபலி 2' படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவின் முகத்தில் சந்தோஷ வெளிச்சம் படர்ந்திருக்கிறது. முதல் பாகத்தில் தமன்னாவின் ராஜ்ஜியம் என்றால் இரண்டாம் பாகம் முழுக்க இவரது ராஜ்ஜியம். “பாகுபலி -2’-ல் எனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் என்பது கதையின் முக்கியத் திருப்பங்களுடன் அதிகமும் பின்னிப் பிணைத்திருக்கிறது. எனக்கும் சரித்திரக் கதாபாத்திரங்களுக்குமான பந்தம் தொடரும் என்றுதான் பாகுபலி எனக்கு உணர்த்துகிறது” என அழகான அனுஷ்கா ஆழமாகப் பேசத் தொடங்கினார்.

தேவசேனா கதாபாத்திரம் பற்றி இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

தேவசேனா கதாபாத்திரம் போல ஒன்றில் நடிக்க அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைப்பதில்லை. அது ஒரு வாழ்நாள் கதாபாத்திரம். இரண்டாம் பாகத்தில் அதற்கான முக்கியத்துவம் அதிகம். அதைத் திரையில் காண ஆர்வமாக இருக்கிறேன். முதல் பாகத்தில் எனக்குக் காட்சிகள் குறைவுதான். ஆனால், அதற்காக வருத்தப்படவில்லை. தேவசேனா கதாபாத்திரத்தின் பின்புலம், பாகுபலி - தேவசேனா காதல் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் காணும்போது நான் காத்திருந்ததற்கு அர்த்தம் இருக்கிறது என்பதை உணர்வார்கள்.

தாய், காதலி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தை எப்படி உணர்ந்தீர்கள்?

முதல் பாகத்தில் பிரபாஸின் தாயாகவும், இரண்டாம் பாகத்தில் ஜோடியாகவும் நடிப்பது குறித்து நானே பல முறை அவரிடம் நகைச்சுவையாகப் பேசியிருக்கிறேன். அவரைக் கிண்டல் செய்திருக்கிறேன். எங்களுக்கு நடுவில் காதல் காட்சிகளும் அழகாக அமைந்துள்ளன. ரசிகர்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும். இப்படத்துக்காக ராஜமெளலி, செந்தில், சாபுசிரில் உள்ளிட்டோரைத் தான் பாராட்ட வேண்டும். ஏனென்றால் நான் நடுவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு வந்தேன். அவர்கள் 5 வருடங்களாக ‘பாகுபலி'யில் மட்டும்தான் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடும்போது, இப்படத்தில் நான் செய்தது சிறுபகுதிதான். கண்டிப்பாக எனது நேரத்தில் பெரும்பான்மை ‘பாகுபலி'க்காக செலவானது உண்மைதான். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

ராஜமெலியின் இயக்கத்தில் ஏற்கெனவே நடித்திருக்கிறீர்கள் அல்லவா?

ஆமாம். இயக்குநர் விரும்புவதை வெளிப்படுத்த விரும்பும் நடிகை நான். எனது நடிப்பில் இருக்கும் நிறை, குறைகளைப் பற்றி ராஜமெளலிக்குத் தெரியும். என்னிடம் எப்படி வேலை வாங்குவது என்பது அவருக்குத் தெரியும். அதே சமயத்தில் தான் மனதில் நினைத்த காட்சி வரும்வரை விடமாட்டார். ஒரு முறை, ஒரு சின்ன காட்சிக்கு 17 டேக்குகள் வாங்கினேன். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை. ராஜமெளலி அற்புதமான ஆசிரியர். மிகவும் பொறுமையாக இருப்பார்

‘சைஸ் ஸீரோ’ படத்துக்காக உடல் எடையைக் கூட்டியதும் குறைத்ததும் பாகுபலி படப்பிடிப்புக்கு பிரச்சினையானதாகச் செய்திகள் வெளியானதே?

நிச்சயமாக இல்லை. ‘சைஸ் ஸீரோ’ படத்துக்காக 18 கிலோ எடையை அதிகரித்தேன். அதைக் குறைக்க எவ்வளவு மாதங்கள் பிடிக்கும் என்பதை எனது பயிற்சியாளரிடம் தெரிந்துகொண்ட பிறகே அந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். அந்தப் படத்துக்கான சவால் கடினமாகவே இருந்தது. என்றாலும் பாகுபலியின் படப்பிடிப்புடன் அது குறுக்கிடாத வகையில் பார்த்துக்கொண்டேன்.

SCROLL FOR NEXT