‘பான்ட்ரி’ மராத்திப் படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நாகராஜ் மஞ்சுளே. அவரது இயக்கத்தில் அடுத்து வெளியான ‘சய்ராட்’ மராட்டிப் படம் 5 கோடியில் தயாராகி வட இந்திய மாநிலங்களில் ரூ.150 கோடி வசூலித்தது. அந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான மறு ஆக்க உரிமையை வாங்கியிருப்பவர் ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த கன்னடத் தயாரிப்பாளரான ‘ராக்லைன்’ வெங்கடேஷ். சய்ராட் படத்தின் வெற்றிக்கான அம்சங்களில் அந்தப் படத்தின் கதாநாயகி ரிங்கு ராஜ்குருவின் நடிப்பு விமர்சகர்களால் சிலாகிக்கப்பட்டது.
எனவே கன்னட மறு ஆக்கத்திலும் ரிங்குவையே கதாநாயகி ஆக்கிவிட்டார் தயாரிப்பாளர். கன்னட ரீமேக்கைத் தொடர்ந்து தமிழ் மறு ஆக்கத்தையும் தொடங்க இருக்கிறாராம் தயாரிப்பாளர். தமிழிலும் ரிங்கு நடிப்பாரா என்பது இன்னும் முடிவாகவில்லை என்கிறது தயாரிப்பாளர் வட்டாரம். ஆனால் ராக்லைன் வெங்கடேஷ் தற்போது பாலா இயக்கிவரும் ‘நாச்சியார்’ படத்தில் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார் என்ற தகவலைக் கசியவிடுகிறார்கள்.
புத்தாண்டில் ட்ரைலர்
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் கடந்த 2016 தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியானது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விஜய் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படும் இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள். விஜயின் இந்த 61-வது படத்தின் டீஸர் டிரைலரை வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.
வில்லன் ராசி
‘பேராண்மை’ படத்தில் தொடங்கி வெளிநாட்டு நடிகர்களைத் தனக்கு வில்லன்களாகப் பெறுவது ஜெயம் ரவியின் ராசியாகிவிட்டது. தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துவரும் முழுநீள அறிவியல் புனைவுப் படமான ‘டிக் டிக் டிக்’ படத்தில் சிங்கப்பூரின் பிரபல நடிகரான ஆரோன் அஜீஸ் வில்லனாக அறிமுகமாகிறார். ஜெயம் ரவியும் அஜீஸும் விண்வெளியில் வேறொரு கிரகத்தில் மோதிக்கொள்ள இருக்கிறார்களாம்.
தற்காப்பு சினிமா
“ஆதித் தமிழர்கள் உலகுக்குத் தந்த தற்காப்புக் கலைகள் இங்கே வேறு வடிவங்களில் மீண்டும் வந்திருக்கின்றன. இதை அறியாத இன்றைய தமிழன் தனது பாரம்பரியக் கலைகளை அழியவிட்டுக்கொண்டிருக்கிறான். அதைத் தமிழர்களுக்கு நினைவூட்ட ‘தமிழனானேன்.க’ என்ற படத்தை முழுமையான முழுநீளத் தற்காப்புக் கலைப் படமாக உருவாக்கி வருகிறோம்” என்கிறார் இந்தப் படத்தை எழுதி இயக்கி, நாயகனாகவும் நடித்துவரும் சதீஷ் ராமகிருஷ்ணன். கோவையைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், தமிழனின் தற்காப்புக் கலைகளை முழுமையாகக் கற்று, அவற்றைப் பற்றி செய்த ஆராய்ச்சியால் இந்த முயற்சியில் இறங்கி முழுப்படத்தையும் ஒரே மூச்சில் முடித்துவிட்டாராம்.
கலங்கிய மகிமா
‘குற்றம் 23’ படத்தின் வெற்றியால் புதிய வாய்ப்புகளைப் பெற ஆரம்பித்திருக்கிறார் அந்தப் படத்தின் நாயகி மகிமா. ஜிவி பிரகாஷ் ஜோடியாக ‘ஐங்கரன்’ படத்தில் ஒப்பந்தமான மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய இவர் ‘பயணம்’ என்ற இசை வீடியோவைப் பார்த்துக் கலங்கிவிட்டேன் என்கிறார். “ஒவ்வொரு பெண் குழந்தையும் பல கனவுகளோடுதான் பள்ளியில் அடி எடுத்து வைக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகளின் கனவுகள் ‘குழந்தைத் திருமணம்’ மூலம் சிதைக்கப்படுகின்றன. இதைத்தான் சி.சி.எஃப்.சி என்ற நிறுவனம் ‘பயணம்’ என்ற இசை வீடியோவாகத் தயாரித்திருக்கிறார்கள்.
தாயின் அன்பு முழுமையாகக் கிடைக்கும் முன்பே இந்தியச் சிறுமிகளில் பலர் தாயாக மாறுவது சகித்துக்கொள்ள முடியாத துயரம். உலகத்திலேயே குழந்தைத் திருமணத்தில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தடுக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணம் சட்டரீதியாகக் குற்றம் என்று குரல் கொடுத்திருக்கிறார் மகிமா.