இந்து டாக்கீஸ்

ஹாலிவுட் ஷோ : புத்தகத்துக்குள் உறைந்திருக்கும் வரலாறு

செய்திப்பிரிவு

இரண்டாம் உலகப் போரின்போதும் அதற்கு முன்னரும், ஹிட்லரின் நாஜிப்படைகளால் கொல்லப்பட்ட யூதர்களின் சோக வரலாறு இன்றும் பல சிறுகதைகள், நாவல்கள் மற்றும் திரைப்படங்களுக்கு ஆதாரமாக உள்ளது. வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ‘தி புக் தீஃப்’.

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் தொடர்பான புத்தகங்களையும் அழித்தாக வேண்டும் என்று நினைத்த நாஜிகளின் மாணவர் அமைப்பினர் ஜெர்மானியர் அல்லாத மற்றவர்கள் எழுதிய புத்தகங்களை மொத்தமாகப் போட்டு எரிக்கும் வைபவத்தைத் தொடங்கிவைத்தனர். 1933இல் தொடங்கிய இந்த அறிவின் அழிப்பில் யூதர்கள், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட பல தரப்பினர் எழுதிய ஏராளமான புத்தகங்கள் மெளன வலியுடன் நெருப்பில் பொசுங்கின. வரலாற்றின் சோகப்பக்கங்களில் ஒன்றான இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மார்கஸ் ஜுஸாக் என்ற ஆஸ்திரேலிய எழுத்தாளர் எழுதிய நாவல் ‘தி புக் தீஃப்’! அதே பெயரில்தான் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஹிட்லரின் கொலைவெறியிலிருந்து யூதர்களைக் காப்பாற்ற முயன்ற ஜெர்மானியர்களும் கடும் தண்டனைகளுக்குள்ளாகினர். மார்கஸ் ஜுஸாக்கின் நாவல் இந்த இரண்டு விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டது. கதையில் வரும் ஜெர்மானிய சிறுமி நாஜிக்களால் பொது இடத்தில் வைத்து எரிக்கப்பட்ட புத்தகக் குவியலில் மிஞ்சிய ஒன்றை யாருக்கும் தெரியாமல் எடுத்து பத்திரப்படுத்துகிறாள். அவள் அந்தப் புத்தகத்தை எடுப்பதை நகர மேயரின் மனைவி பார்த்துவிடுகிறாள். அவளும் நாஜிகளுக்குத் தெரியாமல் ஒரு ரகசிய நூலகத்தையே நடத்துகிறாள். மேயரின் மனைவியுடன் நட்புகொள்ளும் சிறுமி தொடர்ந்து புத்தகங்களை அவளிடமிருந்து வாங்கிப் படிக்கிறாள். சிறுமியின் குடும்பம் சில வருடங்களுக்குப் பின்னர் ஒரு யூத இளைஞனுக்கு அடைக்கலம் அளிக்கிறது. நிலவறை ஒன்றில் தங்கவைக்கப்படும் அந்த இளைஞனுடன் அப்பெண் நட்புகொள்கிறாள். அவனைப்பற்றிய ரகசியத்தைக் காப்பாற்ற பல சிரமங்களுக்கு ஆளாகிறாள். இந்த நாவல் பல சர்வதேச விருதுகளை வென்றதுடன் ‘நியூயார்க் டைம்ஸ்’இன் பெஸ்ட் செல்லர் பட்டியலில் 230 வாரங்கள் இடம்பிடித்தது.

நாவலின் திரை வடிவத்தை இயக்கியிருப்பவர் பிரையன் பெர்ஸிவல் என்ற பிரிட்டிஷ்காரர். புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர்கள், குறும்படங்கள் எடுத்தவர் இவர். சிறுமி லீஸல் மெமிங்கர் பாத்திரத்தில் கனடா நாட்டைச் சேர்ந்த ஸோஃபி நெலிஸே நடித்திருக்கிறார். இப்படத்துக்காகப் பல விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார். படத்தில் புகழ்பெற்ற நடிகையான எமிலி வாட்ஸன், ஜாஃப்ரி ரஷ் போன்றோர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு இசையமைத்திருப்பவர் ஜான் வில்லியம்ஸ்.

SCROLL FOR NEXT