’பைரவி’யில் தொடங்கி ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படம்வரை ரஜினிகாந்த் எனும் யதார்த்த நடிகரை அடையாளம் காட்டிய படங்களின் பட்டியல் மிகச் சிறியது. ஆனால், ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரை நிலைநிறுத்திய படங்களின் பட்டியல் நீளமானது. அதில் ‘பாட்ஷா’வுக்கு என்றுமே தனியிடம் உண்டு. இதை ரஜினியே ஒப்புக்கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பரில் ‘கபாலி’ முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பியிருந்த ரஜினி ‘பாட்ஷா’ படத்தின் தயாரிப்பாளர், முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது ரஜினி பேசிய பேச்சு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது:
“என்கிட்ட ‘கபாலி’, ‘பாட்ஷா’வை மிஞ்சுமான்னு பலரும் கேட்கிறாங்க. சத்தியமா அதுமாதிரி எதிர்பாக்காதீங்க… அந்த மாதிரி மறுபடியும் உருவாக சான்ஸே இல்ல… ஆர்.எம்.வீ. அவர்களாலதான் அது முடியும். சத்தியமா இந்த மேடையில இருக்கறதுக்காக நான் சொல்லல. அந்தப் படத்தோட ஆரம்பத்துல என்னை யாருன்னு காட்டக் கூடாதுன்னுதான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனா ஆர்.எம்.வீதான் சொன்னாங்க.. உங்களை ரிவீல் பண்ணுங்கன்னு... அந்தக் காட்சிதான் மெடிக்கல் காலேஜ் அதிபர்கிட்ட என்னை பாட்ஷாவாக நான் வெளிப்படுத்துற காட்சி. படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணமான காட்சிகள்ல அதுக்கு முக்கியமான பார்ட் இருக்கு. பாட்ஷா அந்த அளவு ஹிட்டாகக் காரணமே அவர்தான்,” என்று பாராட்டியிருக்கிறார்.
நம்பியவர்களுக்காக கேங்ஸ்டர்!
முதல் கட்டப் படப்பிடிப்பு சமயத்தில் இருந்த மனநிலை ரஜினியை இப்படிப் பேச வைத்திருக்கலாம். ஆனால், படம் முடிந்து முழுப் படத்தையும் பார்த்த ரஜினியின் எண்ணம் தற்போது மாறிவிட்டது என்கிறார்கள் படக் குழுவினர். “அந்த அளவுக்கு ரஜினியை மக்களின் கேங்ஸ்டராக காட்டியிருக்கிறார் ரஞ்சித். இது மக்களுக்காகவும் தன்னை நம்புகிறவர்களுக்காகவும் கேங்ஸ்டர் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சாமானியக் குடும்பஸ்தனின் கதையாக உருவாகியிருக்கிறது. ரஜினி ஸ்டைலை உள்வாங்கிக்கொண்டு அதை அதிநவீனமாகக் கபாலியில் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார் ரஞ்சித். கபாலி படப்பிடிப்பு முழுவதும் ‘இயக்குநரின் நடிகராக’ ரஜினி இருந்தார் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்கள் படக் குழுவைச் சேர்ந்தவர்கள்.
மக்களுக்காகச் சிறை
இதற்கிடையில் பாட்ஷாவை மிஞ்சப் படமில்லை என்று எண்ணிக்கொண்டிருந்த ரஜினி ரசிகர்களும் தற்போது ‘கபாலி’யை வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதை உறுதிசெய்வதுபோல, “கபாலியில் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்ட தமிழர்களுக்காகச் சிறைசென்று திரும்பும் ரஜினி ஏன் கேங்ஸ்டராக மாறினார் என்ற பின்னணிக் கதை பாட்ஷாவுக்குச் சவால்விடும்” என்கிறார்கள் படத்தைப் பார்த்தவர்கள்.
முகம் மாறும் ‘பஞ்ச்’ வசனங்கள்
“இது இயக்குநரின் படம்” என்று ரஜினி தனக்கேயுரிய பணிவுடன் சொல்லியிருந்தாலும் “ இது ரஜினி எனும் சூப்பர் ஸ்டாரின் உச்சத்தைத் தொட்டுக் காட்டும் படம். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி’ என்ற பஞ்ச் வசனம் இன்றுவரை ரஜினியின் ரசிகர்களுக்கு மந்திரச் சொல்லாகவே இருகிறது. ஆனால், ‘காபாலி’யிலோ ரஜினி பேசியிருக்கும் சாதாரண ஒரு வார்த்தை வசனங்களே ‘பஞ்ச்’களாக மாறிவிட்டிருப்பதைப் படத்தின் படத்தின் இயக்குநரான ரஞ்சித் கூறுகிறார்.
முதல் கட்டப் படப்பிடிப்பின்போது பேசிய ரஞ்சித், “இப்படத்தில் ரஜினிக்கு பஞ்ச் வசனங்கள் இல்லை. ஆனால் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் மிகவும் பவர் ஃபுல்லாகவும் அதே சமயம் அர்த்தமுள்ளதாக இருக்கும்” என்றார். “மகிழ்ச்சி என்ற சொல் ரஜினியால் புகழ்பெற்ற பஞ்ச் ஆகிவிட்டது” என்கிறார்.
இதுவரை ரஜினி பேசிய பஞ்ச் வசனங்களில் முப்பதை எடுத்து, வர்த்தகத்துக்கும் வாழ்க்கைக்கும் அவை எந்த அளவு பொருத்தமாக இருக்கின்றன என்று அடிக்கோடிட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமே எழுதப்பட்டது. இனி சாதாரண சொற்கள் ரஜினியைக் கடந்து வந்தால் எப்படிப் புதிய அர்த்தமும் வலிமையும் பெறுகின்றன என்ற ஆராய்ச்சி களைகட்டலாம். அவ்வளவு ஏன்... ‘ரஜினிடா!’ என்ற வார்த்தையே இனி தமிழர்கள் மத்தியில் பஞ்ச் ஆவதற்கான வாய்ப்பு ‘கபாலி’ வெளியாகும் இந்த நாளில் தொடங்குகிறது.