சமீபத்திய ஆண்டுகளில் ஆஸ்க ருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட திரைப்படங்களி லிருந்து மாறுபட்ட, இசை சார்ந்த காதல் கதைப் படமான ‘ லா லா லேண்ட்’, அதிக பட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப் பெற்றிருக்கிறது. ஏழு கோல்டன் க்ளோப் விருதுகளை முதல் முறையாகப் பெற்று சாதனை படைத்திருக்கும் இப்படம் ஆஸ்கரிலும் முன்னணியில் நிற்கிறது. இதற்கு முன்னர் ‘டென் காமாண்ட்மெண்ட்ஸ்’, ‘பென்ஹர்’, ‘கிளாடியேட்டர்’ போன்றவை 8 முதல் 10 பரிந்துரைகளைப் பெற்றிருந்தாலும் ‘டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு ஆஸ்கருக் காக இத்தனை பரிந்துரைகளைப் பெற்றுள்ள படம் இதுதான். இதுவே தற்போது திரையரங்குகளில் இந்தப் படத்துக்கான ரசிகர்களின் வரவேற்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
குறும்படமா, திரைப்படமா?
‘பேட்மேன்’ திரைப்படத்தில் புகழ்பெற்ற பேட்மேன் நடிகரின், போதையிலிருந்து மீட்கப்படும் மகளாக நடித்து ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட எம்மா ஸ்டோன்தான் ‘லா லா லேண்ட்’ படத்தின் நாயகி. ஹாலிவுட்டில் கால் பதிக்க விரும்பும் இளம் நடிகைக்கும், இசையமைப்பாளராகப் போராடும் ரையன் கோஸ்லிங்குக்கும் இடையிலான உணர்வுபூர்வமான காதல் கதைதான் ஆஸ்கரின் டார்லிங்காக மாறியிருக்கிறது. திரைக்கதை எழுத்தாளர்-இயக்குநரான டேமியன் சஷலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் ஹர்விட்ஸும் சேர்ந்து உருவாக்கிய காதல் சிம்பனி என்று இப்படத்தைக் கொண் டாடுகிறார்கள் விமர்சகர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருவரும் சேர்ந்து ஆறேழு வருடங்களுக்கு முன்னால் உருவாக்கிய திரைக்கதை இது. முதலில் இதை மியூசிக்கல் குறும்படமாக உரு வாக்கவே இருவரும் முடிவுசெய்திருந்தனர்.
திறந்தது வாசல்
2010-ம் ஆண்டில் ‘லா லா லேண்ட்’-ன் முழுத் திரைக்கதையையும் எழுதி முடித்த இந்த இரட்டையர்களுக்குத் தயாரிப்பாளர் யாரும் கிடைக்கவில்லை. வர்த்தகரீதியான எந்த அம்சங்களும் இல்லையென்று நிராகரிக்கப்பட்டதாக சஷல் கூறியிருக்கிறார். ஜாஸ் பியோனா கலைஞனான நாயகனின் பின்னணியை ராக் கலைஞனாக மாற்றச் சொன்னார்கள் தயாரிப்பாளர்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் தனது திரைக்கதை துகிலுரிக்கப்படுவதை உணர்ந்த டேமியன் சஷல், ‘விப்லாஷ்’ திரைப்படத்தை எடுக்கத் தொடங்கினார். அந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, ‘லா லா லேண்ட்’ படத்தின் கதைக்குத் தயாரிப்பாளர்கள் காது கொடுத்தனர். எந்தச் சமரசமும் இன்றி விருப்பப்படி எடுப்பதற்கான சாத்தியங்கள் திறந்தன. ரையன் கோஸ்லிங், எம்மா ஸ்டோன் போன்ற முதல் வரிசை நட்சத்திரங்களின் தேர்வு படத்துக்குக் கூடுதல் வண்ணத்தை அளித்தது.
இந்திய ரசிகர்களுக்குப் பிடித்த மென்மை யான காதல் காட்சிகள், நடனம், பாடல்கள், உணர்வுபூர்வமான க்ளைமாக்ஸுடன் கூடிய ‘லா லா லேண்ட்’ பழைய ஹாலிவுட்டின் மியூசிக்கல் காமெடித் திரைப்படங்களை ஞாபகப்படுத்தும் திருவிழாவாக உலகமெங்கும் வசூல்ரீதியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
வசூல் சாதனை
‘லா லா லேண்ட்’ படத்தின் சோதனைத் திரையிடல்களின் போதெல்லாம் படத்தைப் பார்த்த நிபுணர் கள் கட்டாயத் தோல்வி என்று உதடு சுழித்தனர். ஆனால் அத்தனை ஆருடங்களையும் தாண்டி இப்படம் அமெரிக்காவில் மட்டும் 90 மில்லியன் டாலர் பணத்தைச் சம்பாதித்துவிட்டது. உலகம் முழுவதும் இதுவரை 174 மில்லியன் டாலர் பணத்தை வசூலித்துள்ளது. லைவ் ஆக்ஷன் மியூசிக்கல் வகைமையில் கடந்த நாற்பது ஆண்டுகளில் வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில் 11-ம் இடத்தை இப்படம் பிடித்துள்ளது.
ஒரு வகைமை வெற்றிபெற்று விட்டால் அதைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான படங்களை எடுப்பது கோலிவுட்டில் மட்டுமல்ல. ஹாலிவுட்டிலும் வாடிக்கைதான். ‘லா லா லேண்ட்’ படத்தைத் தொடர்ந்து இருபது மியூசிக்கல் திரைப்படங்கள் தற்போது அங்கே எடுக்கப்பட்டுவருகின்றன.