பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’.
செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அவனைக் கண்டுபிடிக்க துணை காவல் ஆணையர் ரகுமான் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது. அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் ‘பகடி ஆட்டம்’.
பாத்திரங்களை அவரவர் நிலைகளில் அறிமுகப்படுத்தியபடி இயல்பாகத் தொடங்குகிறது படம். ஆனால், சூர்யா கவுசல்யா காதல் காட்சிகளில் எந்தப் புதுமை யும் இல்லாமல், எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகளாக நத்தைபோல நகர்வதால் முதல் பாதி திரைக்கதை பெரும் ஆயாசத்தைத் தருகிறது. முதல் பாதியில் சூர்யா கடத்தப்பட்டு சிக்கிக்கொள்ளும் காட்சிகள் தவிர எல்லாக் காட்சிகளுமே அரதப் பழசு ரகம்.
காணாமல் போன இளை ஞனைக் கண்டுபிடிக்கும் புலன் விசாரணையாக மாறும் இரண் டாவது பாதி, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது. நம்பகத்தன்மை மிக்க காட்சிகள் மூலமாக புலன்விசாரணையை நகர்த்துகிறார் இயக்குநர். கைபேசிகளையும், சமூக வலைதளங்களையும் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? அவர்களது உலகில் எதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது? சமூகப் பொறுப்பு மிக்க ஒரு காவல் அதிகாரி சட்டத்தின் எல்லையைத் தாண்டி நீதி வழங்க முடியுமா எனப் பல்வேறு அம்சங்கள் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் கையாளப்பட்டிருக்கின்றன.
கவுசல்யாவாக நடித்திருக்கும் மோனிகா, அவரது அக்காவாக நடித்திருக்கும் கவுரி நந்தா ஆகி யோரது நடிப்பு, பாத்திரங்களுக்கு நம்பகத்தன்மை சேர்க்கின்றன. எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றிருக் கும் சுரேந்தர், பாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார். மிடுக்கான தோற்றம், பொருத்தமான உடல்மொழியால் ரகுமான் இயல்பாகக் கவர்ந்துவிடுகிறார். நிழல்கள் ரவி, ராஜ ஆகியோரது அனுபவமிக்க நடிப்பு, அவர்களது பாத்திரங்களுக்கு வலு சேர்க்கிறது.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை கட்டியம் கூறுவதுபோல அடுத்து வரவிருக்கும் காட்சியைப் பற்றி அறிவித்துவிடுகிறது. இளைய ராஜாவின் இசையில் உருவான இரண்டு அருமையான பாடல்களை (இளமையெனும் பூங்காற்று, என்ன என்ன கனவு கண்டாயோ) பயன்படுத்திக்கொண்ட விதம் இப்படத்துக்குத் தனி அந்தஸ்தை தந்துவிடுகிறது.
இன்றைய இளைஞர்களின் போக்கு, பெண்களுக்கான ஆபத்து ஆகியவை குறித்த தன் பார்வையைப் புலன்விசாரணை கலந்த குடும்பக் கதையாக முன்வைத்துள்ளார் இயக்குநர் ராம் கே.சந்திரன். முதல் பாதியின் இழுவையைத் தவிர்த்திருந்தால் இந்த ஆட்டத்தை முழுமையாக ரசித்திருக்கலாம்!