மலேசியாவில் தோட்டத் தொழிலாளர் களாக இருக்கும் தமிழர்களுக்காகப் போராடும் கபாலீஸ்வரன் (ரஜினி), ஒரு கட்டத்தில் மக்களுக்காக கேங்ஸ்டர் ஆகிறார். கொடூரமான மாபியா சம்ராஜ்யம் நடத்தும் டோனி லீ (வின்ஸ்டன் சாவோ) என்கிற சீனன், கபாலியைத் தீர்த்துக்கட்டப் பொறி வைக்கிறான். அந்த மோதலால் கபாலி சிறைக்குப் போக, நிறைமாத கர்ப்பிணியான அவர் மனைவி (ராதிகா ஆப்தே) என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
25 வருடங்களுக்குப் பின் விடுதலை ஆகும் கபாலி தன் எதிரிகள் மேலும் வளர்ந்து மாபெரும் சமூக விரோத சக்திகளாக இருப்பதைப் பார்க்கிறார். அவர்களை ஒடுக்குவதற்காகக் களம் இறங்குகிறார். இதற்கிடையில் தனது மனைவி உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்னும் தேடலும் தொடர் கிறது. இந்தச் சவாலில் கபாலி எப்படி வெல்கிறார் என்பதுதான் கதை.
ரஜினி சிறையில் இருந்து விடுதலை யாகும் காட்சியும், முதுமையான தோற்றத்திலும் முறுக்குக் குறையாமல் டோனியின் கையாள் ஒருவனை துவம்சம் செய்யும் வேகமும் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. சீர்திருத்தப் பள்ளியின் மாணவர்களைச் சந்திக்கும் காட்சியும், மனைவி குறித்த நினைவுகளின் அலைக்கழிப்பும் ஆழமான ஒரு பயணத்துக்குக் கட்டியம் கூறுகின்றன. இந்த இரட்டைப் பாதையில் கவனமாகப் பயணித்திருந்தால் படம் மாறுபட்ட சுவையுடன் இருந்திருக்கும். இரண்டிலுமே வலுவான, சுவாரஸ்யமான காட்சிகள் அமையாததால் படத்தின் மீதான ஈர்ப்பு குறைகிறது.
ரஜினி ‘டான்’ ஆன பின்னணி சரியாகச் சொல்லப்படவில்லை. ‘டான்’ களை அவர் ஒடுக்கும் பகுதிகளும் நம்பகத்தன்மையோடு வெளிப்படவில்லை. மனைவியைத் தேடிச் செல்லும் காட்சிகள் மட்டுமே ஓரளவு வலிமையோடு உள்ளன. சீர்திருத்தப் பள்ளி முதலான அம்சங்கள் திரைக்கதையுடன் ஒட்டவே இல்லை. கதையோட்டமும் நிதானமாகவே இருக் கிறது. சண்டைக் காட்சிகளில் போதிய தாக்கம் இல்லை. ரித்விகாவின் சோகம், சென்னையில் ரஜினிக்கு உதவும் நண்பர்கள், கலையரசனின் சஞ்சலம் எனப் பல விஷயங்கள் இருந்தும் எது வுமே தாக்கம் ஏற்படுத்தும் அளவுக்கு வலுவாகத் திரைக்கதையில் இடம் பெறவில்லை.
தனது கதாபாத்திரங்களின் வாழ்விடத் தையும் வாழ்வியலையும் துல்லிய மாகச் சித்தரிப்பதில் தேர்ந்தவரான இரஞ்சித், இந்தப் படத்தில் சறுக்கியிருக் கிறார். பிரச்சினையின் பின்புலம் தெளி வாக இல்லாததால், முதன்மைக் கதாபாத்திரத்துடன் ஒன்ற முடியாமல் போகிறது.
பல காட்சிகளில் வசனங்கள் கூர்மையுடன் இருக்கின்றன. பகட்டான ஆடைகளை அணிந்துகொள்வதற்காகக் கூறப்படும் காரணம் முதலான சில இடங்களில் இயக்குநரின் அரசியல் வெளிப்படுகிறது.
நட்சத்திரத் தேர்வில் வில்லன்கள் வின்ஸ்டன் சாவோ, கிஷோர் ஆகியோர் எடுபடவில்லை. அவர்களது பாத்திர வார்ப்பு பலவீனமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். தனது ‘மெட்ராஸ்’ படத்தில் தான் இயக்கி பழகிய முக்கால்வாசி நடிகர்களையே ‘கபாலி’யிலும் இரஞ்சித் பயன்படுத்திய காரணம் என்னவோ?!
வெள்ளை தாடி, கோட்-சூட்டில் ரஜினியின் பளீர் தோற்றம் கவர்கிறது. சின்னச் சின்ன அசைவுகளைக்கூடத் தன் அலாதியான ஸ்டைலுடன் அழகுபடுத்து கிறார். தனது மன வெளியில் சஞ்சரிக்கும் மனைவியைக் காணும்போது வெளிப்படும் சோகமும், மனைவியைச் சந்திக்கும் தருணத்தில் அவர் வெளிப்படுத்தும் தவிப்பும் நடிகர் ரஜினியை அடையாளம் காட்டுபவை.
ராதிகே ஆப்தே, தன்ஷிகா, ரித்விகா ஆகிய மூவரில் ராதிகா ஆப்தேவுக்கு மட்டும் நடிப்புக்கான களம் அமைந்துவிடுகிறது. அதில் அவர் தனது திறமையை அழகுறக் காட்டிச் செல்கிறார். தன்ஷிகா துப்பாக்கி பிடித்துச் சுடுவதற்கு மட்டும்தான் பயன்பட்டிருக்கிறார். ரித்விகாவின் கதா பாத்திரமும் எடுபடவில்லை. கலையரசன், தினேஷ் கதையும் அதேதான். ஜான் விஜய் ஓரளவு மனதில் பதிகிறார். ஒருசில காட்சிகளில் வந்துபோனாலும் மைம் கோபி கவனிக்கவைக்கிறார்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை குடும்பப் பின்னணி கொண்ட கேங்ஸ்டர் கதைக்குத் தேவையான பங்கைச் சரியாக அளித்திருக்கிறது. ‘நெருப்புடா’ பாடல் சரிவரப் பயன்படுத்தப்படவில்லை. இந்தக் குறையை ‘மாயநதி’ பாடல் போக்கி விடுகிறது.
ஜி. முரளியின் கேமரா நவீன மலேசியா வின் ஒளிரும் வீதிகளையும், விடுதி களையும் பளிச்சென்று படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. எடிட்டர் பிரவீன் கே.எல்., துருத்தித் தெரியும் பல உபரிக் காட்சிகளில் கத்தரி வைத்திருக்கலாம்.
விளையாட்டுத்தனம், வெள்ளந்தியான இயல்பு, வேகம், உக்கிரம் ஆகிய அடையாளங்கள் கொண்ட ரஜினியின் திரை பிம்பத்தை நிதானம், பக்குவம், ஆழம் என்பதாக மாற்றிய வகையில் இரஞ்சித் தனது படைப்பாளுமையை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்.
ஆனால், கதை, திரைக்கதை, காட்சி அமைப்பு, பாத்திர வார்ப்புகள் ஆகிய விஷயங்களில் ஒரு இயக்குநராக அவர் வெற்றி அடைந்ததாகச் சொல்ல முடியாது. விளைவு, படம் ரஜினி படமாகவும் இல்லாமல் இரஞ்சித் படமாகவும் இல்லாமல் நடுவாந்தரத்தில் தொங்குகிறது.