சிம்புவை நாயகனாக வைத்து மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம் 'வாலு'. இந்தப் படத்தின் நாயகியான ஹன்ஸிகாவை சிம்பு காதலிப்பதாக பட்சிகள் சொல்ல, இதற்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடியது.
ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்தப் படம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. 'வாலு' படத் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டு இருக்கும் பணச் சிக்கல்தான் காரணம் என்று ஒருபுறம் செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன.
இந்நிலையில் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என்று அதன் இயக்குநர் விஜய் சந்தரிடம் கேட்டோம்.
‘வாலு’ படத்தின் தாமதத்துக்கு முக்கிய காரணம் நடிகர்கள்தான். சிம்பு, ஹன்சிகா, சந்தானம், கன்னட நடிகர் ஆதித்யா என்று இந்தப் படத்தில் பணியாற்றுபவர்கள் எல்லோருமே முன்னணி நடிகர்கள். இவர்களின் கால்ஷீட்டை எல்லாம் வாங்கித்தான் நான் படப்பிடிப்புக்கு செல்லவேண்டும். இவர்கள் நான்கு பேரையும் வைத்து 13 நாட்கள் ஷூட் பண்ணினேன். அந்த 13 நாள் அவர்களைச் சேர்க்க எனக்கு 4 மாதமானது. ஒரு மாஸ் ஹீரோதான் ‘வாலு’ கதையைப் பண்ண முடியும். அதனால்தான் சிம்புவை இந்தப் படத்தின் ஹீரோவாகத் தேர்ந்தெடுத்தேன். நிறைய பேர் ‘கிடைத்த ஹீரோவை வைத்து படத்தை எடுங்கள்’ என்று சொன்னபோதும் நான் அதற்கு தயாராக இல்லை.
அதுபோல் பல தயாரிப்பாளர்களிடம் நான் கதையைச் சொன்னபோது பட்ஜெட் காரணமாக இதைப் படமாக எடுக்கத் தயங்கினார்கள். ஆனால் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மட்டுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல், இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார். ரெயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு செட், பெரிய வாழை மண்டி செட், பெரிய மார்க்கெட் செட்டில் சண்டைக் காட்சி, சிம்பு படத்தில் இதுவரை வராத அளவுக்கு ஒரு மாஸ் ஓப்பனிங் ஸாங் என்று திட்டமிட்டு செய்திருக்கிறோம். இதனால் பட்ஜெட் அதிகம். ஆனால் தயாரிப்பாளர் இதுவரை அதைப்பற்றி ஒருவார்த்தைகூட கேட்டதில்லை.
நான் கேட்ட எல்லாவற்றையும் செய்து கொடுத்திருக்கிறார். இப்போதுகூட ஒரு பாட்டுக்காக, ஹைதராபாத்தில் ஒரு பெரிய செட் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. வெளிநாட்டில் ஒரு பாட்டு ஷூட் பண்ணப் போறோம். அதற்கும் தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்.
எல்லாம் சரியாக இருந்தாலும் என் நேரமோ என்னமோ, நாங்கள் ஐதராபாத்தில் செட் போட்ட நேரத்தில் அங்கே குண்டு வெடித்து பிரச்சினையாகிவிட்டது. இதனால் படப்பிடிப்பு ரத்தானது. அதன் பிறகு மீண்டும் செட் போட்டோம். ஆனால் தசரா விடுமுறையால் அனுமதி கிடைக்கவில்லை. இப்படி பல பிரச்சினைகளைத் தாண்டி 'வாலு' தயாராகி வருகிறது.
டிசம்பரில் ஆடியோ ரிலீஸ், பொங்கலுக்கு டிரெய்லர், பிப்ரவரியில் படம் என்று ‘வாலு’ இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டோம். “என்னடா இவ்வளவு நாளா படம் எடுக்குறாங்க.. அப்படி என்ன தான் படத்துல இருக்கு” என்று பலரும் நினைக்கலாம். அவர்களுக்கு என் பதில், “பொங்கலுக்கு டிரெய்லர் பாருங்க.. உங்களுக்கே தெரியும். படம் அவ்வளவு மாஸா வந்திருக்கு” என்பதுதான். இந்தப் படம் ஒரு ஒயின் பாட்டில் மாதிரி. நீங்க எத்தனை நாள் அதை மண்ணுக்குள்ள புதைச்சு வைச்சாலும், வெளியே எடுக்குறபோது ஒரு டேஸ்ட் இருக்கும் தெரியுமா.. அப்படித்தான் என் ‘வாலு’ படமும் இருக்கும்.
முதல் படத்தையே எதற்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் திட்டமிட்டீர்கள்?
நான் கதை சொன்ன தயாரிப்பாளர்களும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ‘வேறு ஏதாவது கதையைச் சொல்லுங்கள். இந்த கதைக்கு பட்ஜெட் அதிகமாகும்’ என்று சொன்னார்கள். சரியென்று சொல்லி வேறு ஏதாவது கதை எழுதினால்கூட முடிக்கிற போது பெரிய பட்ஜெட்டாக நிற்கிறது.
‘வாலு' எப்படி ஆரம்பிச்சீங்க..?
கண்டிப்பா தமன் மற்றும் சந்தானம் தான் ‘வாலு’க்கு காரணம். அவர்கள் இல்லாவிட்டால் ’வாலு’ இல்லை. ஒரு நாள் இரவு தமன் ஸ்டூடியோ அருகில், அரை மணி நேரம் சிம்புவிடம் இந்தக் கதையைச் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு நாம் இதைப் பண்ணுவோம் என்று அவர் கூறினார். இந்தப் படத்தை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவர் சிம்புதான். விஜய் சந்தர், இயக்குநர் விஜய் சந்தரா உருவானதற்கு தமன், சிம்பு, சந்தானம் மூவருக்கும் நன்றிக் கடன் பட்டிருக்கேன்.
சிம்பு - ஹன்சிகா காதல் உருவான தற்கு உங்க படம்தான் காரணமாமே?
சிம்பு - ஹன்சிகா இரண்டு பேருமே ட்விட்டரில சொன்னதுக்கு பிறகுதான் அவங்க லவ் பண்றாங்கன்னே எனக்கு தெரியும். படத்தோட எடிட்டிங்ல லவ் சீன் எல்லாம் பார்க்கிறபோது நிஜக் காதலர்கள் மாதிரியே தெரிஞ்சுது. அவங்க ரெண்டு பேரும் உண்மையில் காதலிப்பதால்தான் காட்சிகள் அழகாக வந்திருக்கிறதோ என்று யோசித்தேன்.