இந்து டாக்கீஸ்

தொலைக்காட்சி உலகம்: பைத்தியம் பிடிக்க வைக்கிறதா இந்தத் தொடர்?

முருகேஸ்வரி ரவி

நெருப்பை உமிழ்ந்தபடி அங்குமிங்கும் பறக்கும் டிராகன்கள், வெப்பத்தினால் தாக்கி அழிக்க முடியாத அபார சக்தி கொண்ட நாயகி, சூனியக்காரக் கிழவிகள் என்று நம்ப முடியாத சூழல்களைக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஃபாண்டஸி தொலைக்காட்சித் தொடர் 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' (Game of Thrones). ஐரோப்பாவைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் நம்பர் ஒன் தொடர்.

HBO தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரின் ரசிகர்கள் இதை வெறுமனே பார்த்து ரசித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பவர்கள் அல்ல. இத்தொடரின் ரசிகர் ஒருவருடன் பேசிப் பாருங்கள். அவர் வாய் ஓயாது! நீங்களும் அத்தொடரின் ரசிகர் எனில் தீர்ந்தீர்கள். கதை பற்றி உங்களிடம் விவரிப்பார், விவாதிப்பார், கொஞ்ச நேரத்தில் சண்டைக்கும்கூட வந்துவிடுவார். இந்தத் தொடரில் அப்படி என்னதான் இருக்கிறது?

என்ன கதை?

ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய வெஸ்ட்ரோஸ் என்ற பெரிய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்காகப் பல சக்திகள் சண்டையிட்டுக்கொள்வதே கதை. கதையின் பெரும் பகுதி வெஸ்ட்ரோஸ் (Westeros), எல் காஸோ (El Caso) ஆகிய இரண்டு கண்டங்களில் நடக்கிறது. இவற்றைப் பிரிப்பது ‘நேரோ’ என்ற பெருங்கடல்’(Narrow Sea). வெஸ்ட்ரோஸைத் தற்போது ஆண்டுவருபவர் ‘கிங்ஸ் லேண்டிங்’ (Kings Landing) என்ற இடத்தில் தனது எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கிறார். டிராகன்களின் துணையோடு இழந்த ராஜ்யத்தை கைப்பற்றத் துடிக்கும் டேநெரீஸ் டார்கேரியனின் (Daenerys Targaryen) போராட்டம் ஒரு பக்கம்.

இந்த இரு தரப்பிலுமிருந்து பல்வேறு சதிகளும் தந்திரங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் தடுப்புச் சுவரான ‘வொயிட் வால்'க்குப் புறத்தே இருக்கும் பனிப் பிரதேசத்தில் இருக்கும் வைல்ட்லிங்ஸ் (wildlings) மற்றும் வொயிட் வாக்கர்ஸ் (white walkers) எனும் கொடிய சக்திகள் நாட்டை நோக்கிப் படையெடுக்க ஆரம்பிக்கின்றன. இப்படி சுவாரசியமாகப் பின்னப்பட்டுள்ள கதையில் ஒவ்வொரு பிரச்சினையும் எவ்வாறு சமாளிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் விறுவிறுப்பான திரைக்கதையும், காட்சிகளில் பிரம்மாண்டத்தைக் கொண்டுவரப் பணத்தைத் தண்ணீர்போல் செலவழித்திருப்பதும் இந்தத் தொடரின் கவர்ச்சிக்கு முக்கியமான காரணங்கள்.

விலை மதிப்பற்ற சம்மதம்

இந்தத் தொடரின் கதைக்கான மூலம் ஜார்ஜ் ஆர். ஆர் மார்ட்டின் எழுதி 1996-ம் ஆண்டில் மிகப் பிரபலமாய்த் திகழ்ந்த ' ய சாங் ஆஃப் ஃபயர் அண்ட் ஐஸ்’(A Song of Ice and Fire) என்ற புத்தகத் தொடர்தான். வருடத்துக்கு ஒரு சீசன். சீசனுக்குப் பத்து எபிஸோட்கள் என்று பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் இந்தத் தொடர் உருவான விதம் குறித்துப் பல சுவாரசியமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

இளம் வயதில் தாங்கள் படித்து ரசித்த நாவலுக்குத் திரைக்கதை எழுத மார்ட்டினின் விலைமதிப்பற்ற சம்மதத்தை வாங்க அவரைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்கள் டேவிட் பெனியாஃபும் ( David Benioff), டி. பி. வைஸும் (D.B. Weiss). அப்போது மார்ட்டின் மிகவும் தயங்கினாராம். தன்னுடைய புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களும் சம்பவங்களும் நுணுக்கமாகவும் நூதனமாகவும் சிக்கலானதாகவும் இருப்பதால் அதனை அத்தனை சுலபமாய்த் தொலைக்காட்சித் தொடருக்கான திரைக்கதையாக ஆக்க இயலாது என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார்.

ஆனால் இந்த இரு திரைக்கதாசிரியர்களும் அவரை விடவில்லை. பிறகு நீண்ட யோசனையுடன், “நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் அவற்றுக்குச் சரியான விடை அளித்தால் சம்மதிக்கிறேன்” என்றவர் பதில் சொல்ல முடியாத சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். கதையிலேயே ஊறித் திளைத்திருந்த ரசிகர்களான இருவரும் மிகச் சரியான பதில்களைத் தந்ததும் வியந்துபோய் புன்னகைத்தவர், “பிழைத்துப் போங்கள்” என்று சம்மதித்திருக்கிறார்.

கடவுள் பாதி மிருகம் பாதி

எச்.பி.ஓ. (HBO) தொலைக்காட்சி தயாரித்து வழங்கிக்கொண்டிருக்கும் இந்தத் தொடர் கதாபாத்திரச் சித்தரிப்புக்காக மட்டுமல்ல, வசனங்களுக்கும் புகழ்பெற்றுவருகிறது. முக்கியக் கதாபாத்திரங்கள் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பேசிப் பேசியே திகிலை ஏற்படுத்துகின்றன.

‘குளிர் காலம் வரப்போகிறது’என்று பலரும் பேசியே குளிர்காலத்தின் மீதான பயத்தால் ரசிகர்களை உறையச் செய்துவிடுகிறார்கள். முத்திரை வசனங்களைப் பல கதாபாத்திரங்கள் பேசினாலும் டிரியன் லேன்னிஸ்டர் (Tyrion Lannister) என்னும் குள்ள உருவக் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் பொன்மொழிகளாக அதன் ரசிகர்களால் கருதப்படுகின்றன. ‘கடவுள் பாதி மிருகம் பாதி' என்று கூறுவதைப் போல் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் சிறந்த குணநலன்களும் உண்டு , நயவஞ்சகமும் உண்டு. எவரும் முழுமையாக நல்லவரும் இல்லை, முழுமையாகக் கெட்டவரும் இல்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைத் தூண்டி, பின்னர் அதைச் சிதைக்கும் வண்ணம் அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்வது தொடரில் சர்வ சாதாரணம்.

அரசியல் என்று வந்துவிட்டால் நயவஞ்சகமும் சூழ்ச்சியும் சர்வசாதாரணம் என்பதுபோல் கதாபாத்திரங்கள் முக்கியமான தருணங்கள் நடந்துகொள்வதை ரசிகர்கள் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தொடரைப் பார்த்துப் புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைப் பற்றிக் கதையின் கர்த்தா ஆர். ஆர். மார்ட்டினிடம் பேட்டியொன்றில் கேள்வி கேட்கப்பட்டது. “சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டும் சாவதும், நாயகர்களுக்கு மரணம் இல்லை என்றும் காட்டுவது நேர்மையற்ற செயல். ஃபேண்டஸி எழுத்தாளர் என்றாலும் உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்” என்றார்.

ரசிகர்களின் எச்சரிக்கை உணர்ச்சி

எந்தக் கதாபாத்திரமும் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ரசிகர்கள் இதைப் பார்க்கின்றனர். 20 வயதுக்குக் குறைந்த இந்தியப் பார்வையாளர்களுக்குக் காட்டப்படக் கூடாத அதீத வன்முறையும் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளையும் சில எபிசோட்கள் கொண்டிருந்தாலும் விறுவிறுப்பு குறையாத திரைக்கதை, அழகிய காட்சியமைப்பு, பொருத்தமான நட்சத்திரத் தேர்வு, நடிகர்களின் தேர்ந்த நடிப்பு ஆகியவை தொடரை வெற்றிப் பாதையில் செலுத்தியிருக்கின்றன. இதுவரை ஆறு சீசன்களில் எட்டு எபிஸோடுகள் ஒளிபரப்பாகியிருக்கும் நிலையில் தொடரின் கிளைமாக்ஸ் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் நெருங்கி வந்துவிட்டதாக நினைத்து விரல் நகங்களைக் கடித்துத் துப்பிக்கொண்டு திரிகிறார்களாம் ரசிகர்கள்.

SCROLL FOR NEXT