மாசமா... ஆறுமாசமா… என்று தொடங்கும் எங்கேயும் எப்போதும்’ படப் பாடல் சி.சத்யாவைத் தமிழ் ரசிகர்களுக்குப் பளிச்சென்று அடையாளம் காட்டியது. சமீபத்தில் வெளிவந்த இவன் வேற மாதிரி பட இசையும் திரையிசையில் இவர் வேற மாதிரி என்பதை உணர்த்தியது. அவரிடம் உரையாடியதிலிருந்து....
எப்படி இசையின் பக்கம் வந்தீர்கள்?
என்னுடைய அப்பா டி.ஆர். சிதம்பரம் ஒரு நாடக நடிகர். நான் பாடகனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். அப்பாவின் நண்பரான நாஞ்சில் ராஜா வீட்டிற்கே வந்து வாய்ப்பாட்டு சொல்லிக்கொடுப்பார். என்னுடைய அண்ணன் மிருதங்கம் வாசிப்பார். இன்னொரு அண்ணன் வயலின் வாசிப்பார்.
பத்தாவது படிக்கும்போதே எனக்குத் திரையிசையின் மீது கவனம் திரும்ப ஆரம்பித்தது. காரணம் இளையராஜா. அவரின் இசையில் மூழ்கி, திரை இசைப் பாடல்களை ஹார்மோனியத்தில் வாசிக்கப் பழகினேன். பிறகு போளகம் சாம்பசிவ ஐயர், சீதா நாராயணன், தக்கேஸி மாஸ்டர், டி.வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் முறையாக கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டேன். கர்நாடக இசைப் பயிற்சியால், கீ-போர்டை யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே வாசிக்க ஆரம்பித்தேன். பல இசைக் குழுக்களில் சுமார் பத்து ஆண்டுகள் கீபோர்ட் வாசித்த அனுபவம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது என்று சொல்ல வேண்டும்.
திரைக்குள் எப்படி நுழைந்தீர்கள்?
ஒரு கட்டத்தில் இசையமைப்பாளர் பாலபாரதியிடம் உதவியாளராகச் சேர்ந்தேன். அவரும் இளையராஜாவின் விசிறி. நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்போம். அவர்தான் எனக்கு இசையமைப்பதில் இருக்கும் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். அதன்பின் இசையமைப்பாளர் ஆதித்தன், சிற்பி, பரத்வாஜ் ஆகியவர்களிடமும் சில காலம் பணிபுரிந்தேன். விளம்பரப் படங்களுக்கு ஜிங்கிள்ஸ் செய்துகொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில்தான், கிருஷ்ணசாமி என்பவர் ‘ஆடுகிறான் கண்ணன்’ என்னும் சன் டிவி சீரியலுக்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார்.
வெள்ளித்திரை வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?
சரவணன் என்னும் நண்பருக்காக அவரின் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்தேன். அப்போது சில்லென்று ஒரு காதல் படத்தின் இயக்குநர் கிருஷ்ணா அவரைப் பார்ப்பதற்கு வந்திருந்தார். நான் இசையமைத்த சில ஜிங்கிள்ஸ்களை சரவணன் அவருக்குக் காண்பிக்க, நாம் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்றார் என்னிடம். அறிமுகத்தின்போது, எல்லாரும் சொல்லும் ஆறுதல் வார்த்தைகள்தானே என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர் சீரியஸாகத்தான் சொல்லியிருக்கிறார் என்பது இரண்டு ஆண்டுகளுக்குப் பின்தான் புரிந்தது.
‘ஏன் இப்படி மயக்கினாய்’ என்ற படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கினார். மிகப் பிரம்மாண்டமாக இசை வெளியீடு எல்லாம் நடந்தது. பாடல்கள் இணையத்தில் வெளியாகிப் பாராட்டுகள் குவிந்தன. ஆனால் படம் வரவில்லை. அந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுத்தான் எனக்கு ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கான வாய்ப்பு வந்தது. தொடர்ந்து பொன்மாலைப் பொழுது, தீயாய் வேலை செய்யணும் குமாரு, இவன் வேற மாதிரி, நெடுஞ்சாலை என்று பயணம் தொடர்கிறது.
த்ரில்லர், லவ், ஆக் ஷன் - ஒரு இசையமைப்பாளரின் திறமை அதிகம் வெளிப்படுத்த உதவும் படம் எது?
ஒரு இசையமைப்பாளருக்கு இனிய அறிமுகம் கிடைக்க காதல் கதை உதவலாம். எல்லா உணர்ச்சிகளையும் கொண்ட படங்களுக்குச் சிறப்பான இசையை அளிப்பவர்தான் நீடிக்க முடியும்.
சமீபத்திய மகிழ்ச்சி?
தெருவில் என்னை நிறுத்தி, தான் எழுதிய கவிதைகளைக் காண்பித்துப் பாட்டு எழுத வாய்ப்பு கேட்டார் ஒரு இளைஞர். அவரின் பெயர் மணிஅமுதவன். அவரை ஸ்டுடியோவுக்கு அழைத்து சில டியூன்களுக்கு எழுதச் சொன்னேன். சரியாகவும் சிறப்பாகவும் எழுதினார். நெடுஞ்சாலை படத்தின் எல்லாப் பாடல்களையும் அவர்தான் எழுதியிருக்கிறார். ஒரு நல்ல திறமையாளரை நடுச்சாலையில் தவறவிடாமல் இருந்ததற்காக மகிழ்ச்சியடைந்தேன். இந்தப் படத்தின் இசையை இசைப் புயல் ரஹ்மான் வெளியிட்டதையும் மறக்க முடியாது.