இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒரு படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே தங்களது அடுத்த படத்தை முடிவு செய்துவிடுவார்கள். ஜெயம் ரவி நடிக்க; ‘டார்ஜான்’ ஸ்டைல் படமொன்றை ‘வனமகன்’ என்ற பெயரில் தற்போது இயக்கிவருகிறார் இயக்குநர் விஜய். இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில் தற்போது அடுத்த படத்தை முடிவு செய்துவிட்டார். மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சார்லி’ படத்தின் மறு ஆக்கத்தை இயக்குகிறார். இதில் துல்கர் ஏற்ற வேடத்தை மாதவனும், பார்வதி வேடத்தை சாய் பல்லவியும் ஏற்க ஒப்பந்தமாகிவிட்டார்கள்.
முறுக்கு மீசை விஜய்!
கொஞ்சம் தாடியும் தடித்த முறுக்கு மீசையுமாகப் புதுத் தோற்றத்தை உருவாக்கிவருகிறார் விஜய். இது அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் 61-வது படத்துக்கான தோற்றமாம். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் காஜல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கும் இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்க இருக்கிறார் வடிவேலு. கூடுதலாக சத்யனும் இணைந்திருக்கிறார்.
பொறுத்தது போதும்!
மோகன்லால் நடிப்பில் 37 கோடியில் தயாரான ‘புலி முருகன்’ மலையாளப் படம் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தப் படம் தமிழில் மறு ஆக்கம் செய்யப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் மறு ஆக்கம் வரையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்று தற்போது ‘வீரப்பாய்ச்சல்’ என்ற தலைப்புடன் தமிழ் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. கண்ணெதிரே தன் தந்தையை ஒரு புலி அடித்துக் கொன்றதைப் பார்த்த சிறுவன் அவன். அதே புலியைத் திறமையாகக் கொன்று பழி தீர்க்கிறான். அதற்குப் பிறகு தனது கிராமத்தையும் பாதுகாக்கும் ‘புலி முருகனாக’ வளர்ந்து பெரியவனாகும் அவன், புலியோடு வேறு சில மனித மிருகங்களையும் வேட்டையாட வேண்டிய நிலை வருகிறது. அதுதான் இந்தப் படத்தின் கதை.
விருது மழையில் கனவு வாரியம்
ஹாலிவுட்டின் மிகப் பழமையான முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று வார்னர் பிரதர்ஸ். இவர்கள் இந்தியாவுக்குள் கால் பதித்துவிட்டாலும் தமிழ் நாட்டுக்குள் வராமல் இருந்தார்கள். தற்போது ‘கனவு வாரியம்’ தமிழ்ப் படத்தை வெளியிடுவதன் மூலம் தமிழ் பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக நுழைந்திருக்கிறார்கள். தமிழகத்தில் நிலவிவந்த மின்வெட்டு பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படத்தை எழுதி, இயக்கி நாயகனாகவும் நடித்திருப்பவர் அருண் சிதம்பரம். படம் வெளியாவதற்கு முன்பே ஏழு சர்வதேச விருதுகளையும், உலகப் புகழ்பெற்ற ரெமி விருதுகள், இரண்டையும் வென்று விருது மழையில் தொடர்ந்து நனைந்துவருகிறது. கனவு வாரியத்தை விரைவில் திரையில் பார்க்கலாம்.
அதிதிக்குக் கிடைத்த கவுரவம்
கடந்த 42 ஆண்டுகளாகத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்திவருகிறது. சென்னை தீவுத்திடலில் 30 நாட்கள் திருவிழாபோல நடத்தப்படும் இதைத் தொடங்கி வைக்க முன்னணி நட்சத்திரங்களை அழைத்து வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அதைத் திறந்து வைத்தவர் ஓர் அறிமுகக் கதாநாயகி. ‘பட்டதாரி’ படத்தின் மூலம் அறிமுகமான அதிதிக்குத்தான் இந்த கவுரவம். அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருக்கும் ‘சந்தனத் தேவன்’ படத்துக்குக் கதாநாயகியாக இவர் தேர்வாகியிருக்கிறார். இனியும் அவரை அறிமுகம் நட்சத்திரமாகப் பார்க்க வேண்டாம் என விழாக் குழு நினைத்துவிட்டது போலும்.
பாலா தயார்
‘தாரை தப்பட்டை’ படம் தோல்வியடைந்து விட்டாலும் வேல. ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலை மையமாக வைத்துப் புதிய படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் பாலா. இந்தப் படத்துக்கான திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வேல. ராமமூர்த்தியே எழுத, திரைக்கதையை மேலும் செம்மை செய்ய பிரபல நவீன எழுத்தாளரைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசித்திருக்கிறார் பாலா. இந்தப் படத்தின் படப்பிடிப்பை மே மாதம் தொடங்க லொக்கேஷன் பார்த்து முடித்துவிட்டார்களாம்.விரைவில் தனது நட்சத்திரங்களை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறார் பாலா என்று இயக்குநர் வட்டாரத்திலிருந்து நம்பகமான தகவல் கிடைத்திருக்கிறது.