இந்து டாக்கீஸ்

அம்மா சினிமா

செய்திப்பிரிவு

பிரபலங்களின் வாழ்க்கைச் சாயலைக் கொண்ட போலி பயோ பிக் திரைப்படங்களை எடுப்பதில் பாலிவுட்டை அடித்துக்கொள்ள முடியாது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைக் கொஞ்சம் கற்பனை கலந்து படமாக்க முயல்வதாகப் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

படத்துக்கு அம்மா என்று தலைப்பு வைத்து மொத்தப் படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்துவிட்டார்களாம். படத்தை இயக்கியிருப்பவர் பைசல் செய்ஃப். இவர் வேறு யாருமல்ல, இந்தியில் ‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்' படத்தை இயக்கி சர்ச்சையில் சிக்கினாரே அவரேதான்.

தனது பெயரில் ஒரு படமா என்று அதிர்ந்த ரஜினி, இந்த படம் வெளியாகக் கூடாது என்று ஐகோர்ட்டில் தடை வாங்கிவிட்டார். என்றாலும் படக் குழு வழக்கை எதிர்கொண்டு வருகிறதாம். இதேபோன்ற நிலைமை ‘அம்மா’ படத்துக்கும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த படக்குழு தற்போது இது ‘ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை அல்ல’ என்று பல்டி அடித்திருக்கிறது.

ஆனால் இந்தப் படத்தின் கதாநாயகி ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜெயா’. தவிர படத்தின் முன்னோட்டத்தில்’ ‘சட்டத்துக்கு சவாலாக இருக்கும் பெண்’ என்று எழுத்துகளைப் போடுகிறார்.

ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரபல கன்னடக் கதாநாயகியான ராகினி திவிவேதி. "இப்படம் எனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். இது போன்ற படத்தில் நடிப்பது என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்" என்று கூறியிருக்கிறார் ராகினி. இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால் படத்தின் இறுதிக் காட்சியை மட்டும் மறு படப்பிடிப்பு செய்ய முடிவு செய்திருக்கிறார்களாம்.

மற்ற மொழிகளில் இந்தப் படம் எப்படி வெளியானாலும் சரி, தமிழில் இந்தப் படம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பீதியும் குழுவினரிடம் இருக்கிறதாம். இதனால் படத்தின் கிளைமாக்ஸை எப்படி வைக்கலாம் என்றும் படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகச் சொல்கிறார்கள்

SCROLL FOR NEXT