இந்து டாக்கீஸ்

திரை விமர்சனம்: ஒரு கிடாயின் கருணை மனு

இந்து டாக்கீஸ் குழு

35 வயதாகியும் திருமணம் நடக்காமல் இருக்கும் தன் பேரன் ராமமூர்த்திக்காக (விதார்த்) குலதெய்வமான முனியாண்டிக்கு வேண்டிக்கொள்கிறார் அவரது பாட்டி. வேண்டியபடியே பேரனுக்குத் திருமணமும் நடக்கிறது. வேண்டுதலை நிறைவேற்ற சமையல் பாத்திரம், ஆட்டுக் கிடா, தட்டுமுட்டு சாமான்களுடன் லாரி ஓடத் தொடங்குகிறது.

ஆடு வெட்டிப் பலியிட்டு, படையல் வைத்து வழிபடக் கிளம்பும் ஊர்க்காரர்களின் பயணத் தையே சினிமாவாகத் தந்திருக்கிறார்கள் இயக்குநர் சுரேஷ் சங்கையா மற்றும் குழுவினர். கிடா வெட்டுக்காக கிளம்பியவர்கள் கொலை வழக்கில் சிக்கிக்கொள்ளும் கதைதான் ‘ஒரு கிடாயின் கருணை மனு’. முதல் பாதியில் நிகழும் சம்பவங்களால் விறுவிறுப்பாக ஓடும் கதை, இரண்டாம் பாதியில் கொஞ்சம் அலைபாய்கிறது.

விதார்த் அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே தன்னுடைய புதுமாப்பிள்ளைப் பவிசைக் காட்டுகிறார். ஃபேஷியல் முகத்துடன் புதுப்பெண்ணாக நடித்திருக்கும் (பின்னணிக் குரல் கலைஞரான) பிரவீணா தன் தோற்றம், நடிப்பு இரண்டாலும் ஈர்க்கிறார். விதார்த்தின் பெரியப்பாவாகக் கவிஞர் விக்கிரமாதித்யன், கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

விதார்த்துக்கு இணையாக தொடக்கம் முதலே கதையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் ‘கொண்டி’ என்ற கதாபாத்திரத்தில் ‘ஆறு’ பாலா இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். பெரிய பெரிய விஷயங்களைக்கூட ஒரு அசட்டைத்தனத்துடன் எதிர் கொள்ளும் கிராமத்து இளைஞராக ‘கொண்டி’ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்களோடு ‘சுப்பிரமணியபுரம்’ சித்தன், ஹலோ கந்தசாமி, கலை இயக்குநர் வீரசமர், ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் பங்களிப்பைச் சரியாக வழங்கியுள்ளனர்.

படத்தின் அநேகக் காட்சிகள் காட்டுப் பகுதி யில் உள்ள ஒரு பழைய கல்மண்டபத்தில்தான் நடக்கின்றன. கதையை வசனங்களே நகர்த்திச் செல்கின்றன. வட்டாரப் பேச்சுவழக்கில் சொலவடைகள், புதுமொழிகள் கலந்து கதாபாத்திரங்கள் ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்ளும்போது திரையரங்கில் சிரிப்பொலிகள் உயர்கின்றன. குரு நாதன் - சுரேஷ் இணைந்து வசனம் எழுதியுள்ளனர்.

ஆட்டுக் கிடாயின் பார்வையில் இருந்து விரியத் தொடங்கும் தொடக்கக் காட்சியில் இருந்து இறுதிவரை உறுத்தாமல் தொடர் கிறது ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு.

‘எல்லாத்துக்கும் காரணம் இந்த ஆடா இருக்குமோ?’ என கொண்டி கதாபாத்திரம் கூறுவதுபோல, தான் வெட்டப்படுவதைத் தடுக்க மேற்கொள்ளும் தவம்போல் மொத்த படக் காட்சிகள் நெடுகிலும் ஒரு சாட்சியாக வருகிறது அந்த ஆடு.

ஓர் உயிர்ச் சேதம் நடந்த இடத்தில் கதா பாத்திரங்கள் வெளிப் படுத்தும் நகைச்சுவை உணர்வு இயல்பாக இல்லை. ஆனாலும், மண் மணக்கும் அம்சங்களால் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஒரு நல்ல திரைப்பட அனுபவமாக வசீகரிக்கிறது.

SCROLL FOR NEXT