வால் டிஸ்னியின் தயாரிப்பில் 1977-ல் வெளியான லைவ் ஆக்ஷன் அனிமேஷன் திரைப்படம் ‘பீட்ஸ் டிராகன்’. அதாவது ஹாலிவுட் நடிகர்களுடன் 2டி அனிமேஷன் மூலம் உருவாக்கப்பட்ட டிராகன் கதாபாத்திரம் நடித்திருந்தது. அன்று அது உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்று அதே படத்தைப் பார்த்தால் கிண்டல் செய்வீர்கள். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்த இந்தப் படம் பீட்டர் என்னும் ஏழைச் சிறுவனுக்கும் எல்லியட் என்னும் ஒரு டிராகனுக்குமான உறவே. இந்த டிராகன் பிறர் கண்களுக்குப் புலப்படாது, ஆனால் பீட்டரின் கண்களுக்கு மட்டுமே தென்படும் விசேஷத் தன்மை கொண்டது. யாருமற்ற பீட்டருக்குப் பாதுகாப்பைத் தரும் எல்லியட் தனது விசேஷத் தன்மை காரணமாக பீட்டருக்குச் சில சிக்கல்களையும் ஏற்படுத்திவிடும்.
இப்படியான காட்சிகளைக் கொண்ட இந்தப் படத்தின் மையக்கதை பிரசுரிக்கப்படாத ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது. அதன் உரிமையைப் பெற்றுப் படத்தை உருவாக்கியிருந்தது டிஸ்னி நிறுவனம். ஆங்கில இயக்குநர் டான் சாஃபி படத்தை இயக்கியிருந்தார். பலதரப்பட்ட விமர்சனங்களையும் மீறி ஹாலிவுட் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த இந்தப் படம் தயாரிப்புச் செலவைவிட மும்மடங்குக்கும் அதிகமான வசூலை வாரிக் கொடுத்திருந்தது.
அந்த ‘பீட்ஸ் டிராகன்’ 39 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு சாகசத் திரைப்படமாக அதே பெயரில் 3டி தொழில்நுட்பத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இம்முறை இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இசைப் படமாக இது அமைக்கப்படவில்லை. ஆனால் ஒரு சாகசத் திரைப்படத்துக்குத் தேவையான உயிரோட்டமான பின்னணியிசையைத் தந்துள்ளார் இசையமைப்பாளர் டேனியல் ஹர்ட். டேவிட் லாவரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையை அவரும் தோபி ஹல்ப்ரூக்ஸ் என்பவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
கையால் வரையப்பட்டு அனிமேஷன் செய்யப்படுவதே உத்தியாக இருந்த அந்த நாட்களில் எல்லியட் என்னும் அந்த டிராகன் கம்ப்யூட்டரில் வரையப்பட்டுப் பின்னரே அனிமேஷன் செய்யப்பட்டிருந்ததால் அன்று அனைவரையும் வசீகரித்த டிராகன் இன்று 3டி அனிமேஷனில் பிரம்மாண்டமாக உயிர்பெற்றிருக்கிறது ஆகஸ்டில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெயிலர் பரவசம் தருகிறது, படமும் பரவசத்தில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடுகிறது.