இந்து டாக்கீஸ்

அலசல்: அழகு மட்டும் காரணமா?

அரவிந்தன்

கடந்த ஆண்டு வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷா, ஜீவாவைவிட ஒரு வயது மூத்தவர். ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்த ஜெய் அவரைவிட இளையவர்.

60 வயதைத் தாண்டிய ஆண் நடிகர் 18 வயதுப் பெண்ணோடு ஜோடியாக நடிப்பது சகஜமாகிவிட்ட தமிழ்த் திரையின் சூழலில் தன்னைவிட வயதில் இளையவரின் ஜோடியாக இரு தமிழ்க் கதாநாயகியர் நடித்தது அபூர்வமானதுதான்.

நாயகிகள் பல ஆண்டுகள் தாக்குப்பிடிப்பது தமிழுக்குப் புதிதல்ல. பத்மினி, சரோஜாதேவி, கே.ஆர். விஜயா முதலான பலர் பத்தாண்டுகளைத் தாண்டியும் கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருந்தார்கள்.

அறுபதுகளுக்குப் பிறகு இந்தப் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. கதாநாயகிகளின் அனுபவம், நடிப்பு ஆகியவற்றைவிடவும் புதிய முகங்கள், மிகவும் இளமையான தோற்றம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.

இந்திப் படங்களில் முன்னணியில் இருந்த கதாநாயகிகளின் தோற்றம், உடலமைப்பு ஆகிய வற்றுடன் போட்டியிடக் கூடிய கதாநாயகி களுக்கான தேவை உருவானது. வயதான கதாநாயகர்கள் புதிய நாயகிகளை நாட ஆரம்பித்தார்கள். கதாநாயகிகளின் ஆயுட்காலம் குறைய ஆரம்பித்தது.

இந்தப் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் ஸ்ரீதேவி. தன் தோற்றப் பொலிவாலும் நடிப்புத் திறமையாலும் அவர் தன்னைத் தவிர்க்க முடியாத நட்சத்திரமாகப் பல ஆண்டுகளுக்கு நிலைநிறுத்திக்கொண்டார்.

அவருக்குப் பிறகு வந்த ராதா முதலான சிலர் எவ்வளவுதான் பிரபலமாக விளங்கி வெற்றிகளைக் குவித்தாலும் அவர் அளவுக்கு இந்த அம்சத்தில் வெற்றிபெற முடியவில்லை. தொண்ணூறுகளின் இறுதிவரை தொடர்ந்த இந்தப் போக்கு புத்தாயிரத்தில் மாறத் தொடங்கியது. 2002, 2003, 2004 ஆண்டுகளில் திரையுலகினுள் பிரவேசித்த த்ரிஷா, ஸ்ரேயா, நயன்தாரா, சிநேகா, தமன்னா, இலியானா போன்றவர்களும் சற்றுப் பிந்தி வந்த அனுஷ்கா போன்றவர்களும் இந்த வரையறையை மாற்றி எழுதினார்கள்.

அறிமுகமாகிப் பத்தாண்டுகளுக்குப் பிறகும் முன்னணிக் கதாநாயகியாக, காலத்துக்கேற்ற வசீகரத் தோற்றம் கொண்ட பெண்களாக இவர்கள் வலம்வருகிறார்கள். சந்தை மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் அறிமுகமானபோது இருந்த தோற்றத்திலிருந்து பெரிதும் மாறாத பொலிவுடன் திரையில் வெற்றிகரமாகத் தொடர்வது தமிழ்ப் பின்னணியில் புதிய விஷயம்.

உலகமயமாதலின் தாக்கம்

இந்தித் திரையுலகில் இன்னும் பத்தாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்ட இந்தப் போக்கை உலகமயமாதலின் பல்வேறு விளைவுகளில் ஒன்றாகச் சொல்லலாம். தொண்ணூறுகளில் தொடங்கிய உலக மயமாதல் போக்கால் பல புதிய அம்சங்கள் இந்திய வாழ்வில் பிரவேசித்தன.

அதற்கு முன்பும் இந்தியாவில் அழகிப் போட்டிகள் நடந்தன. அதற்கு முன்பும் இந்திய அழகிகள் உலக அரங்கில் போட்டியிட்டதுண்டு. ஆனால் தொண்ணூறுகளில்தான் உலக அழகிப் பட்டங்கள் இந்தியப் பெண்களின் வசமாயின. அழகு சார்ந்த கனவு இந்தியப் பெண்களின் சிந்தனையில் ஊடுருவியது. வயது, அழகு ஆகியவை குறித்த பார்வைகள் மாறத் தொடங்கின.

அழகாக இருப்பதும் அழகைப் பராமரிப்பதும் ஆளுமையின் முக்கியமான அம்சங்கள் என்னும் பிரக்ஞை உருவாக ஆரம்பித்தது. அழகு சாதனத் துறை செழித்து வளர்ந்தது. அழகாகத் தம்மை உணர்பவர்களும் அத்தகைய கனவைக் கொண்டவர்களும் பல மடங்கு அதிகரித்தார்கள்.

ஊடகங்களின் மூலமாகச் சமுதாயத்தின் பொதுப் புத்தியில் உறையவைக்கப்பட்ட அழகு பிம்பங்கள் அவற்றை அணுக முடியாதவர்களிடத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் தனியே அலசப்பட வேண்டியவை. எனினும் இந்தச் சூழல், நடுத்தர, மேல் நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் பெண்களுக்கு ஒரு புதிய திறப்பைத் தந்தது.

39 வயதிலும் வசீகர நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்ததும் 34 வயதிலும் கரீனா கபூர் நேற்று அறிமுகமான நாயகிபோலப் புத்துணர்வுத் தோற்றம் தருவதும் இந்தப் போக்கின் அடையாளங்கள். த்ரிஷா முதலானவர்கள் இந்தப் போக்கின் தமிழ் முன்னோடிகள். 30 வயதைக் கடந்தால் அக்கா, அண்ணி வேடங்களுக்குள் ஒண்டிக்கொள்வது அந்தக் காலம் என்று தன்னம்பிக்கையோடு சொல்கி றார்கள் இன்றைய நாயகிகள்.

அணுகுமுறையில் மாற்றம்

30, 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல, வீட்டில் பணக் கஷ்டம் தாள முடியாமல் குடும்பத்தைக் கரைசேர்க்கும் பொறுப்பைச் சுமந்துகொண்டு இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தை நோக்கிப் பெண்கள் படையெடுப்பதில்லை. நடுத்தர வர்க்கத்தையோ அதற்கு மேல் உள்ள தட்டுகளையோ சேர்ந்தவர்கள், நன்கு படித்தவர்கள், நல்ல வேலையில் அமரக்கூடிய, அல்லது சொந்தத் தொழில் செய்யக்கூடிய பெண்கள் திரைத்துறையை விரும்பித் தேர்ந்தெடுத்துவருகிறார்கள்.

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் அறிமுகமான அசின் ஒரு தொழிலதிபரின் மகள். த்ரிஷாவின் பெற்றோர் நல்ல வேலையில் இருந்தவர்கள். இப்படிச் சொல்லிக்கொண்டேபோகலாம். இவர்கள் பிழைப்புக்காகத் திரைக்கு வந்தவர்கள் அல்ல என்பதுதான் இவர்கள் திரைத் துறையை அணுகும் விதத்தின் அடிப்படையைத் தீர்மானிக்கிறது.

அழகு மட்டும் காரணமா?

அழகும் இளமைத் தோற்றமும் மட்டுமே இவர்களின் வெற்றிக்குக் காரணம் அல்ல. இதே காலகட்டத்தில் ஆண்டுக்குச் சராசரியாகப் பத்து புதிய அழகிகளாவது தமிழ்த் திரையில் பிரவேசித்திருப்பார்கள். அவர்கள் எல்லோராலும் வெற்றிபெற முடியவில்லை. நடிப்புத் திறனைக் காரணமாகச் சொல்லலாம் என்று பார்த்தால் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பு நாயகிகளுக்கு அவ்வளவாகக் கிடைப்பதில்லை. எனவே இவர்களுடைய வசீகரம், பல விதமான பாத்திரங்களுக்கும் பொருந்தும் தோற்றம் போன்ற சில காரணங்களும் த்ரிஷா முதலானோரின் வெற்றிக்கும் நீடித்திருக்கும் தன்மைக்கும் காரணமாக இருக்கலாம்.

இவர்கள் அனைவருமே உடல் கவர்ச்சியை முன்னிறுத்தும் பல படங்களில் நடித்திருக்கிறார்கள். ஆனால் முற்றிலும் மாறுபட்ட வேடங்களிலும் தோற்றங்களிலும் பிரகாசிக்க முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார்கள். அருந்ததி (அனுஷ்கா), விண்ணைத் தாண்டி வருவாயா (த்ரிஷா), அனாமிகா, ஸ்ரீராமராஜ்யம் (நயன்தாரா), மனம் (ஸ்ரேயா) ஆகியவை சில உதாரணங்கள்.

ரெண்டு, குருவி, வில்லு, கந்தசாமி போன்ற படங்களில் இதே நடிகைகளின் தோற்றத்தோடு மேற்படி படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இவர்களால் எந்த அளவுக்கு வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று வித்தியாசமான தோற்றங்களில் பொருந்திப்போக முடிகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அழகுக்காக மட்டுமின்றி நடிப்புத் திறனுக்காகவும் கொண்டாடப்பட்ட பத்மினி போன்ற நடிகைகளோடு ஒப்பிடப்பட வேண்டுமென்றால் இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம். பானுமதி போன்றோருக்குக் கிடைத்த பாத்திரங்கள் இப்போது காலாவதியாகிவிட்டன. அப்படிப்பட்ட பாத்திரங்களை உருவாக்க யாரும் மெனக்கெடுவதில்லை.

அரிதாக ஏற்படும் வாய்ப்புகளும் வணிகக் காரணங்களால் காயடிக்கப் படுகின்றன. இந்நிலையில் இளம் கதாநாயகியாக நடிக்கும் திருப்தியை மட்டுமே இவர்களால் பெற முடிகிறது. பெண்களுக்கான வலுவான கதாபாத்திரங்களை உருவாக்கும் துணிச்சலும் படைப்பாளுமையும் கொண்ட இயக்குநர்கள் அதிகரிக்கும் போது இந்தப் பெண்கள் தோற்றத் தைத் தாண்டிய காரணங்களுக்காகவும் பேசப்படுவார்கள் என்று எதிர் பார்க்கலாம்.

SCROLL FOR NEXT