‘அக்னிப் பரீட்சை’ நேர்காணல் நிகழ்ச்சியில் பதிலளித்த கமல் ஹாசன் தாம் நேரடி அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்பதைக் குறிக்க, “ஆள்காட்டி விரலில் மை வைத்துக்கொள்வேன். அதற்காக கை முழுவதும் கருப்பாக்கிக்கொள்ளத் தயாரில்லை” என்றார். விரைவில் தமிழகத்துக்குத் தேர்தல் தேவை என்றார். வித்தியாசமான வார்த்தைகளில் பூடகமாகத் தன் அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்தியது பாராட்டத்தக்கது.
கிடைக்காத விளக்கம்
“நடராஜன், திவாகரன் போன்றோர் அ.தி.மு.க. அரசியலிலும், ஆட்சியிலும் நுழைய வாய்ப்பே இல்லை” என்றார் டி.டி.வி.தினகரன் (தந்தி டிவி நேர்காணல்). “உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” என தீபக் கூறுகிறாரே என்ற பாண்டேவின் கேள்விக்கு “அவர் அதை எப்போது சொன்னார், பகலிலா, இரவிலா?’’ என்று பதில் கேள்வி கேட்டது திகைப்பளித்தது. ஆனால் அதற்கான விளக்கத்தை அவர் அளிக்கவேயில்லை.
நினைவுகளில் மூழ்கலாம்
வசந்த் டிவியின் தேனருவி நிகழ்ச்சியில் பழைய திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புகிறார்கள். அப்போது திரையில் அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படம், அது வெளியான வருடம், பட இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடியவர்கள் போன்ற விவரங்களையும் பாடலின்போது திரையில் தோன்றச் செய்கிறார்கள். பாடல் தொடர்பான முழு விவரங்களை அறியவும் மலரும் நினைவுகளில் மூழ்கவும் இது வசதியாக இருக்கிறது. பழைய பாடல்களை ஒளிபரப்பும் எல்லாத் தொலைக்காட்சிகளும் இதைப் பின்பற்றலாமே.
கண் கோடி வேண்டும்.
எஸ்.வி.பி.சி. சேனலில் தினமும் மாலையில் திருமலையில் நடைபெறும் இசை நிகழ்ச்சி ஒன்றை ‘நாத நீராஞ்சனம்’ என்ற பெயரில் ஒளிபரப்புகிறார்கள். இசைக் கலைஞர்கள் சுமாராகவும், நன்றாகவும் பாடுகிறார்கள். எனினும் அவர்களை மட்டுமே வெகுநேரத்துக்குத் தொடர்ந்து திரையில் காட்டுகிறார்கள் என்றால் அதற்கு வேறொரு காரணமும் புரிகிறது. மிகப் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு அதிக பட்சம் இருபதுபேர்தான் வருகிறார்கள். அதில் தரிசனத்துக்காக வரிசையில் நின்று வதங்கி, களைப்பு நீங்க உட்கார்ந்தவர்கள்போலவும் சிலர் தென்படுகிறார்கள். ஆனால் கர்னாடகக் கச்சேரியின் நுட்பங்கள் எதையுமே அறிந்துகொள்ளாமல் இருந்தும் அவர்கள் முகத்தில் தென்படும் பரவசத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
விரல் விளையாட்டு!
மெகா டிவியில் வெகு நாட்களாக அமுதகானம் என்ற பகுதி இடம் பெறுகிறது. பழைய தேன் பாடல்களை ரசித்து மூழ்கி விவரிக்கிறார் தொகுப்பாளர். சிம்புவையே பின்னுக்குத் தள்ளுமளவுக்கு விரல்களை வளைத்தும், நெளித்தும் உரையாடுகிறார். கொஞ்சம் அசந்தால் நம் கண்களையே குத்திவிடுவாரோ என்று பயம் தோன்றுகிறது.