ஜீ டிவியில் ‘சரிகமப குரல் தேடல்’.நிகழ்ச்சியின் நடுவர்கள் பாடகர்கள் கார்த்திக்கும், விஜய் பிரகாஷும் போலித்தன மில்லாமல் கருத்து கூறுகிறார்கள். (சூப்பர் சிங்கரின் ஆஸ்தான நடுவர்களில் ஒருவரான சுஜாதாவும் இந்த ஜீ டி.வி. நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். தமிழைக் கற்றுக் கொண்டிருப்பார் என்று நம்பலாமா?) சிறுவர் சிறுமிகள் பாடும்போது நடுவர்கள் கண்களைக் கட்டிக் கொள்கிறார்கள் (நீதிதேவதைபோல நடுநிலைமை! பாட்டு பிடித்திருந்தால் மட்டும் கண்கட்டை அவிழ்ப்பார்கள்). அடுத்த எபிசோடில் இவர்கள் கையில் தராசுத் தட்டை எதிர்பார்க்கலாமா?
போல்ட்டான முடிவு?
ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்டை அடித்துக் கொள்ள இப்போதைக்கு யாருமே உலகில் இல்லை. ஒலிம்பிக் பந்தயத்தில்கூட வெற்றிக் கோட்டை அவர் தொட்ட பிறகு திரும்பிப் பார்த்தால் சற்று தொலை தூரத்தில்தான் அடுத்த விளையாட்டு வீரர் மூச்சிறைக்க ஓடி வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ‘விட்டுக் கொடுக்கும் மனநிலையுடன்’ ஒரு முடிவை எடுத்திருக்கிறார் உசேன் போல்ட் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ்). இறுதியாக ஜுன் மாதத்தில் தன் சொந்த நாடான ஜமைக்காவில் ஒரு போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறாராம். அப்போது ஜமைக்கா மக்கள் பெருமிதமும் துக்கமுமாக உணர்ச்சிக் குவியலாகிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
விறுவிறுப்பு குறைவு
விஜய் டிவியில் சந்திரநந்தினி என்ற வரலாற்று மெகா தொடர். சந்திரகுப்தனுக்கும் அவன் கொன்ற தனநந்தனின் மகள் நந்தினிக்கும் திருமணம் நடைபெற எதிரெதிர் மனநிலை யிலேயே உள்ள அவர்கள் வாழ்க்கையை மட்டுமே மையமாகக் கொண்டு வரும் மெகா தொடர் என்பதால் விறுவிறுப்பு குறைவு. சந்திரகுப்தனை அரியணையில் அமர்த்தியவரை மையமாகக் கொண்ட ‘சாணக்யா’ என்று பல வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் வெளியான தொடரோடு ஒப்பிடத் தோன்றுகிறது. வசனத்திலும் கலையிலும் முத்திரை பதித்த தொடர் அது. செட்டிங் என்றே தோன்றாதபடி அக்கால மகதத்தைக் கண்முன் கொண்டு வந்த தொடர்.