இந்து டாக்கீஸ்

தகராறு - தி இந்து விமர்சனம்

இந்து டாக்கீஸ் குழு

வழக்கம் போல மதுரையில் கதை. வழக்கம் போல அங்கு நான்கு நண்பர்கள் (வழக்கம்போல என்பதை இந்த விமர்சனத்தின் எல்லா வாக்கியங்களிலும் சேர்த்துக்கொள்ளலாம்). அந்த நான்கு பேரும் அனாதைகள். அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். படித்த, அழகான, ஊரின் முக்கியமான நபரின் பெண்ணைக் கதாநாயகன் விரும்புகிறான். பெரும் துரத்தலுக்குப் பிறகு அந்தப் பெண்ணும் அவனைக் காதலிக்கிறாள்.

இதற்கிடையில் ஊருக்குப் புதிதாக வந்திருக்கும் காவல் துறை அதிகாரியின் வீட்டிலேயே கொள்ளை அடிக்கிறார்கள். இதில் ஒரு மோதல் ஏற்படுகிறது. மேலும், அந்த ஊரில் இருக்கும் இன்னொரு பெரிய மனுஷன் வீட்டில் திருடப் போய் மாட்டிக்கொண்டதால் அவருக்காக ஒரு வேலை செய்ய வேண்டியதாகிறது. இருந்தாலும் அவருடனேயே சண்டையும் ஏற்படுகிறது.

காதலியின் அப்பா, காவல் துறை அதிகாரி, இன்னொரு ரவுடி என மூன்று பக்கமும் நெருக்கடி.

இந்தச் சமயத்தில் நண்பர்களில் ஒருவன் கொல்லப்படுகிறான். ஏன் கொல்லப்படுகிறான்? கொன்றவர்களை நண்பர்கள் என்ன செய்தார்கள்?

பதில் இரண்டாம் பாதியில்.

கிளைமாக்ஸ் டிவிட்ஸ்டை மட்டுமே நம்பி வந்திருக்கும் மற்றும் ஒரு படம் ‘தகராறு’. இன்னும் எத்தனை படங்கள் இதுபோல வரும் என்று தெரியவில்லை. எந்தக் கதாபாத்திரமும் இயல்பாக இல்லை. எல்லாரும் மிகை உணர்ச்சியிலேயே பேசுகிறார்கள். எப்போதும் கத்துவது, சவடால் விடுவது, அல்லது கிசுகிசுப்பான குரலில் பேசுவது என்று நோகடிக்கிறார்கள். டப்பிங் தியேட்டரை எத்தனை நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தார்களோ தெரியவில்லை.

முக்கோணக் காதல் கதை இருந்த காலம் போய், இப்போது காதல், நண்பன், துரோகம் என்னும் முக்கோணம் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆரம்பத்தில் ஆறுதலாக இருக்கிறார் பூர்ணா. ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் அவரது மேக் அப்பும், டப்பிங்கும் நம்மை மிகவும் சோதிக்க வைக்கிறது. மௌன குரு போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு இந்தப் படத்தை எப்படித்தான் அருள்நிதி தேர்ந்தெடுத்தாரோ தெரியவில்லை. அவர் போடும் சத்தம் தாங்க முடியவில்லை.

வசனங்கள் மிகச் சில இடங்களில் நன்றாக இருக்கின்றன. இசை தரண். பின்னணி இசை இரைச்சல். பாடல்கள் சுமார்.

சுப்ரமணியபுரத்தின் கதையை ஆளாளுக்கு சுட்டுக்கொண்டிருக்கிறார்கள். காட்சிகள், வாழ்வியல் சித்தரிப்புகள், கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையே ஊடாடும் உணர்வுகள், காதல், நகைச்சுவை, துரோகம் ஆகிய அனைத்தும் மிக இயல்பான முறையில் நம்பத்தக்க விதத்தில் சுப்ரமணியபுரத்தில் காட்சிப்படுத்தப்பட்டன. செயற்கைப் பூச்சு இல்லாமலேயே படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்ல அந்த இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. அதன் புற அடையாளங்களை மட்டும் ஒற்றி எடுத்தால் அதுபோன்ற படத்தை எடுத்துவிட முடியாது.

SCROLL FOR NEXT