இந்து டாக்கீஸ்

செல்ஃபிக்களில் மறைந்திருக்கும் உலகம்!- இயக்குநர் அன்புமதி பேட்டி

ஆர்.சி.ஜெயந்தன்

சின்னத்திரையிலிருந்து புறப்பட்டு வெள்ளித்திரையை வென்றெடுக்கும் இயக்குநர்கள், நடிகர்களின் பட்டியல் நீளமாகிவரும் காலம் இது. விரைவில் வெளியாகவிருக்கும் ‘சண்டிக் குதிரை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சின்னத்திரையிலிருந்து வந்திருக்கும் அன்புமதி. “சின்னத்திரையில் இயங்கியவர்களுக்கு சினிமா மொழி தெரியுமா என்ற சந்தேகம் இன்னும் இருக்கிறது.

எங்கே இயங்கினாலும் சினிமாவை இதயபூர்வமாகக் காதலித்தால் போதும், அதை அணுஅணுவாக உள்வாங்கிக்கொண்டு அதை நெருங்கிவிட முடியும். சினிமாவை நெருங்குவதற்கு எனது 20 வருடங்களைக் கொடுத்திருக்கிறேன்” என்று பேசத் தொடங்கினார்.

உங்களைப் பற்றி சிறு அறிமுகம்?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்தான் என் சொந்த ஊர். பள்ளிப் பருவத்தில் பாலகுமாரனில் தொடங்கி பொன்னீலன், பூமணி எழுத்துகள் வரை நூலகம் வழியே பரிச்சயமானது. வாசிப்பின் தாக்கத்தில் 16 வயதில் எழுதிய எனது சிறுகதை பிரபல வார இதழில் பிரசுரமானது. அதில் கிடைத்த அங்கீகாரம், மகிழ்ச்சி காரணமாக சுமார் 300 சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதிக் குவித்தேன். ஒரு பத்திரிகையில் தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதிக் கேட்டார்கள். எதை எழுதினாலும் சிறப்பாக எழுத வேண்டும் என்று நினைப்பேன்.

தொடராக வெளிவந்த எனது கட்டுரைகள் ‘சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்கு…’ என்ற தலைப்பில் நூல் வடிவம் பெற்றபோது அதற்கு 2001-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நான் ஃபிக்‌ஷன் நூலுக்கான முதல் பரிசு கிடைத்தது. இது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்ததும் சென்னையிலிருந்து பல அழைப்புகள். ஆனால் அப்போது சென்னைக்கு வர முடியவில்லை.

பிறகு இளங்கலை படிக்கிறபோது பேராசிரியர் தொ. பரசிவன் எழுதிய ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற நூல் நம் கலாச்சாரம், வரலாறு மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. முதுகலையில் வரலாற்றை விரும்பித் தேர்வுசெய்து படித்த பின் சென்னை வந்து தூர்தர்ஷன் நிகழ்ச்சித் தயாரிப்பில் பங்கெடுக்க ஆரம்பித்தேன்.

பிறகு சன் டிவி, ஜெயா டிவி, ஜி தமிழ் என மெகா தொடர்கள், பல நிகழ்ச்சிகள், விளம்பரப் பட இயக்குநர் என்று 20 ஆண்டுகள் ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குநராகத் தொலைக்காட்சி மற்றும் விளம்பர உலகில் பணியாற்றிய அனுபவத்துடன் சினிமாவுக்கு வந்திருக்கிறேன்.

‘சண்டிக்குதிரை’ என்ற தலைப்பை வைத்து இதையொரு மண்வாசனைப் படம் எனலாமா?

படத்தில் மண்வாசனை மட்டுமே இல்லை, இதில் இன்றைய இளைஞர்கள் உலகைச் சுற்றிப் படர்ந்திருக்கும் நவீன வாழ்க்கையின் அதிர்ச்சிகரமான முகம் பதிவாகியிருக்கிறது. அந்த வகையில் இதையொரு நான்-ஸ்டாப் மண்வாசனை த்ரில்லர் எனலாம். நான் - ஸ்டாப் என்று நான் கூறக் காரணம் திரைக்கதை.

அடிப்படையில் எழுத்தாளராகப் பணிபுரிந்த அனுபவம் காரணமாக இதன் திரைக்கதைக்காக ஐந்து ஆண்டுகள் செலவழித்திருக்கிறேன். ‘சந்திரமுகி’ படத்தின் முதல்பாதியில் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்ததற்குச் சற்றும் எதிர்பாராத ஒரு பின்னணிக் கதை இரண்டாம் பாதியில் அமைந்திருக்கும். அதேபோல் ‘த்ரிஷ்யம்’ படத்தின் திரைக்கதையையும் குறிப்பிட வேண்டும்.

இந்தப் படங்களின் திரைக்கதைக்கு இணையாகப் படத்தின் இன்னொரு ஹீரோவாகத் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். படம் முடிவையும் ஊகிக்க முடியாதபடி அமைத்திருக்கிறேன். க்ளைமாக்ஸுக்காகப் பேசப்படும் படங்களின் பட்டியலில் ‘சண்டிக் குதிரை’க்கு இடம் கிடைக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

இது எதைப் பற்றிய படம்?

செல்ஃபி மோகத்தால் ஏற்படும் விபரீதம்தான் இந்தப் படத்தின் முக்கியக் கரு. பிரபலங்கள் முதல் கிராமத்து விவசாயிவரை அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது செல்ஃபி மோகம். அன்பாக, பாசமாக, நட்பாக எடுத்துக்கொள்ளும் செல்ஃபிக்களில் தொடங்கி ஆபத்தை வலிய இழுத்துவரும் அந்தரங்கமான செல்ஃபிக்கள்வரை அவற்றில் பல வகையுண்டு.

செல்ஃபி படங்கள் மகிழ்ச்சியூட்டி அங்கீகாரத்துக்காக அலையும் மனித மனதின் வெளிப்பாடாக இருந்தாலும் நவீனத் தொழில்நுட்பத்தின் எல்லைகள் மீறப்படும்போது என்னவாகிறது என்பதை உண்மைச் சம்பவங்களின் தாக்கத்திலிருந்து கதையின் முக்கிய நிகழ்வாக்கியிருக்கிறேன். படத்தைப் பார்த்துவிட்டுத் தணிக்கை அதிகாரிகள் மனம்விட்டுப் பாராட்டினார்கள். ரொம்பவும் டென்ஷனாக்கிவிட்டீர்கள் என்றார்கள்.

ராஜ்கமல் அழகான சீரியல் நாயகன். அவரை ஏன் தேர்வு செய்தீர்கள்?

ராஜ்கமல் பிரபலமான டிவி நடிகர், ஆங்கர், மாடல் கோ-ஆர்டினேட்டர் என எல்லாவற்றிலும் வெற்றியைப் பார்த்தவர். எனது நண்பர். அவரிடம் ‘சண்டிக்குதிரை’ கதையைக் கூறி, பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம் இருக்க வேண்டும், அதேநேரம் கொஞ்சம் முரட்டுத்தனமும் தெரிய வேண்டும், அதுமாதிரி எனக்கொரு புதுமுக நாயகனைக் கண்டுபிடித்துத் தாருங்கள் என்றேன். அதன் பிறகு ஆறுமாதம் கழித்து வந்த அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை.

நான் எப்படிக் கேட்டிருந்தேனோ அதேபோல தாடி வளர்த்துக்கொண்டு, உடல் கறுத்து லுங்கியைக் கட்டிக்கொண்டு வந்து என் முன்னால் நின்று ஆச்சரியப்படுத்தினார். கதைப்படி அவர் மண் குதிரை செய்யும் கலைஞர். அதற்காக அந்தக் கலையைச் சிரத்தை எடுத்துக் கற்றுக்கொண்டு நடித்தார்.

புதுக்கோட்டை அருலேயுள்ள குலமங்கலம் என்ற கிராமத்தில் அந்தக் கலை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் இருக்கிறது. அங்கேதான் படமாக்கினோம். ராஜ்கமல் அழுது நடித்த காட்சிகள் எதிலும் கிளிசரின் பயன்படுத்தவில்லை. அத்தனை இயல்பாக நடிக்கக்கூடிய கலைஞன். அதேபோல தனது கதாப்பாத்திரத்துக்காகப் பல நாட்கள் குளிக்காமல் வெயிலில் உழன்று கிடந்து நடித்ததைப் பார்த்த மொத்தக் கிராமமும் அவருக்கு நண்பராகிவிட்டது.

நாயகி மானசாவை எங்கே பிடித்தீர்கள்?

இந்தப் படத்துக்குப் பல மாவட்டங்களில் கதாநாயகி தேர்வு நடத்தினோம். ஆனால் அமையவில்லை. பிறகு துபாயில் வசித்துவரும் கேரளப் பெண்ணான மானசாவைத் தேர்வுசெய்தோம். தமிழ் பேசுவதுதான் அவரது பலம். நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். பத்து ஆண்டுகள் கதாநாயகியாகத் தாக்குப்பிடிக்கக்கூடிய அனைத்துத் தகுதிகளும் அவரிடம் இருக்கின்றன. அவரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்.

இந்தப் படத்தில் மறக்க முடியாத மனிதர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?

கதையைக் கேட்ட பலரும் “பிச்சுட்டீங்க… நாம பண்றோம். வெயிட் பண்ணுங்க” என்பார்கள். ஆனால் வேறு படவேலைகளில் மூழ்கிவிடுவார்கள். எனவே எனது பல ஆண்டு சேமிப்பையெல்லாம் போட்டு நானே தயாரிப்பைத் துணிச்சலாகத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் பணமில்லாமல் படம் நின்றது. அப்போது நாங்கள் எடுத்திருந்த

காட்சிகளைப் பார்த்து வியந்து, கதையைக் கேட்டு, எங்கள் டீம் மீது நம்பிக்கை வைத்து, எங்களோடு இணைந்து படத்தைத் தயாரித்திருக்கும். பி. பிரகாசத்தை மறக்க முடியாது. அதேபோல் படத்தின் இசையமைப்பாளர் வாரஸ்ரீ… இவர் பக்திப் பாடல்களின் விற்பன்னர். இதுவரை 6,000 பக்திப் பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார்.

இவற்றில் 1,000 பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். ‘நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா’ என்ற பிரபலமான பாடலும் அதில் அடக்கம். பக்தி இசையை அமைத்தவர் ஒரு த்ரில்லர் படத்துக்கு இசையமைக்க முடியுமா என்று பயந்தேன். பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் பின்னியிருக்கிறார்.

SCROLL FOR NEXT