வித்யா பாலனின் திரை அவதாரங்கள் இப்போதைக்கு அடங்காது போலும்!‘பேகம் ஜான்’ இந்திப் படத்துக்காகப் பாலியல் தொழிலாளிப் பெண்களை வழிநடத்தும் தலைவி போன்ற ‘பிராத்தல் மேடம்’ கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். அதுவும் வரலாற்றில் பின்னோக்கிச் சென்று ‘பிராத்தல் மேடம்’ கதாபாத்திரம் ஏற்பதென்றால் கொஞ்சம் சவால்தானே! இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு நடிகர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித்.
“‘பேகம் ஜான்’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, இரண்டு பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்றன. வித்யா பாலனுக்காகத் தனியாகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இன்னொரு பயிற்சிப் பட்டறை, படத்தில் நடிக்கும் மற்ற பெண்களுக்காக நடைபெற்றது. வித்யா இயல்பிலேயே அனைவரிடமும் எளிதாகப் பழகக்கூடியவர். அதனால், படத்தில் நடிக்கும் பெண்களுடன் இயல்பாகப் பழகவிடக் கூடாது என்று நினைத்தேன். அவருக்கும், அந்தப் பெண்களுக்கும் இடைவெளி இருக்க வேண்டுமென்று நினைத்தேன். அதை அவர் புரிந்துகொண்டார்” என்கிறார் ஸ்ரீஜித்.
2015-ம் ஆண்டு, வெளியான வங்காளத் திரைப்படம் ‘ராஜகாஹினி’யின் இந்தி மறுஆக்கம்தான் இந்த ‘பேகம் ஜான்’. பிரிவினைக் காலப் பின்னணியைக் கதைக் களமாகக் கொண்ட இந்தத் திரைப்படம் வங்காளத்திலிருந்து பஞ்சாப்புக்குப் பயணிக் கிறது. இந்தப் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.
“பயிற்சிப் பட்டறையின் போது, வித்யா நிறைய கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்து விட்டார். மூன்று வயது பேகம் ஜானின் நினைவுகள் என்னவாக இருந்திருக்கும், திருமணமாகும்போது எப்படி உணர்ந்திருப்பார் என்று பல விதமான கேள்விகள். அதனால், பயிற்சிப் பட்டறையின் முடிவில் நான்கு திரைக்கதைகள் எழுதிவிட்டேன். பட்டறை முடிந்து வித்யா படப்பிடிப்பு தளத்துக்கு வந்தபோது, உக்கிரமான, சூழ்ச்சி மிகுந்த, புத்திசாலித்தனமான ஒரு பெண்ணாக அவரை உணர்ந்தேன். வித்யா பாலனின் எந்தச் சாயலும் அந்தப் பெண்ணிடம் இல்லை” என்று வியக்கிறார் ஸ்ரீஜித்.