இந்து டாக்கீஸ்

மாயப்பெட்டி: திரைப்படத்துக்கு உதவிய நாடகம்

ஆபுத்திரன்

மூவிஸ் நெள சேனலில் காந்தி திரைப்படம் மறு ஒளிபரப்பானது. நடுநடுவே வெளியான தகவல்கள் சுவாரசியம். அதில் ஒன்று, அகதா கிறிஸ்டியின் ‘மெளஸ் ட்ராப்’ என்ற பிரபல நாடகத்தின் உரிமைப் பங்குகளில் சிலவற்றை காந்தி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் ரிச்சர்ட் அட்டன்பெரோ வைத்திருந்தார். காந்தி திரைப்படத் தயாரிப்புச் செலவை ஈடுகட்ட இந்தப் பங்குகளை அவர் விற்று விட்டாராம்.

சீறாத சீரான வர்ணனை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உற்சாகமாக நடைபெற்றதைப் பல சானல்களில் விரிவாகவே ஒளிபரப்பினார்கள். மாடுபிடி வீரர்கள் அவ்வப்போது கொஞ்சம் விதிமீறல் செய்தபோது உடனுக்குடன் அதைச் சுட்டிக்காட்டித் திருத்திக்கொண்டிருந்தார் அறிவிப்பாளர். குரல், வழிநடத்திய விதம், எந்த விதத்திலும் அரசியல் கலக்காமை என்று பல விதங்களிலும் மனம் கவர்ந்தார் முகம் காட்டாத அந்த அறிவிப்பாளர்.

கவலை ஏற்படுத்தும் போக்கு

புதிய தலைமுறை சேனலில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் உற்சாகம் பொங்க இப்படி விவரித்தார். “முன்பெல்லாம் மதுரையைச் சுத்தி இருக்கிறவங்கதான் பரிசுகளை ஸ்பான்சர் செய்வாங்க. இப்போ சென்னை நிறுவனங்களெல்லாம் ஸ்பான்சர் செய்ய வந்திருக்காங்க. அடுத்த தடவை ஸ்பான்சர் நிறுவனங்களின் பெயர் அச்சிட்ட பனியன்களோடு மாடுபிடி வீரர்கள் களம் இறங்க வாய்ப்பு உண்டு”. கடைசி வாக்கியத்தையும் அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு எப்படியெல்லாம் கமர்ஷியலாகப் போகக்கூடும் என்பதையும் நினைத்தால் கவலை தோன்றுகிறது.

மொழியின் வாசனை

பின்னணிப் பாடகி சுஜாதா (ஜிடிவி – சரிகமப) ஒரு சிறுவன் பாடி முடித்ததும் இப்படி ஆலோசனை கூறினார்: “எனக்குத் தமிழ் சரியா பேச வரலே. என்னவோ அது என் தலையிலே ஏறல்லே (உண்மைதான்). ஆனா என் பாட்டிலே தமிழ் தெளிவாக இருக்கும். (இதுவும் உண்மைதான்). நீ பாடும்போது ‘நெறுமுகையே’ன்னு மலையாள வாடை வீசும்படி பாடக் கூடாது. திருத்திக்கணும்” என்றார்.

SCROLL FOR NEXT