காட்டைத் தங்கள் தாயாகக் கருதும் மக்களுக்கும், காட்டின் வளத்தைச் சட்ட விரோதமாகச் சுரண்டிக் கொழுக்க நினைக்கும் பெரு நிறுவனத்துக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘கடம்பன்’.
தேனி மாவட்டத்தின் மலைக் கிராமங்களில் ஒன்று கடம்பவனம். தேன் எடுத்தல், வேட்டையாடுதல், இயற்கையாகக் கிடைக்கும் உணவு வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அந்த ஊர் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அந்த ஊரிலும் அந்த ஊரைச் சுற்றியுள்ள சில பகுதிகளிலும் சிமென்ட் தயா ரிக்கத் தேவைப்படும் சுண்ணாம்புக் கற்கள் அதிகமாக உள்ளன. இதை அறிந்துகொண்ட சிமென்ட் நிறு வனம் ஒன்று அந்தப் பகுதியை வளைத்துப்போடப் பார்க்கிறது. அதற்கு கடம்பவன மக்கள் தடை யாக இருக்கின்றனர். அவர்களை அகற்றத் திட்டமிடுகிறது சிமென்ட் நிறுவனம். அதற்காக எந்த எல்லைக்கும் போகத் தயாராகிறது. இந்த இரு பிரிவினர் இடையே நடக்கும் மோதலில் யார் வென்றார்கள் என்பதே கதை.
பேராசை கொண்ட நிறுவனங் கள், அவர்களுக்குத் துணை போகும் அரசு அமைப்புகள் என எடுத்துக்கொண்ட கதைக் களத் துக்காக இயக்குநர் ராகவாவைப் பாராட்டலாம். ஆனால், திரைக் கதை தட்டையாக உள்ளது. சிமென்ட் நிறுவன அதிபரின் தம்பியைப் பிடித்துவைப்பது, இயந்திரத் துப்பாக்கி வைத்திருக்கும் வில்லன் ஆட்களைக் காட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு தயா ரிக்கப்பட்ட ஆயுதங்களை வைத்து விரட்டி அடிப்பது ஆகியவற்றைக் காட்சியாக்கியதில் நிறைய இடங் களில் லாஜிக் ஓட்டைகள். ஊர் மக்களை அங்கிருந்து விரட்ட, அந்த இடத்தைப் புலிகள் காப்பகமாக அறி விக்கச் சொல்லி வனச்சரக அதிகாரி யிடம் உத்தரவிடுகிறார் வில்லன். ஆனால் சாதாரண வனச்சரக அதி காரி ஒருவருக்கு, ஒரு இடத்தைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க அதிகாரம் இருக்கிறதா என்ன?
சமவெளிப் பகுதிகளில் இருந்து மலைக்கு வரும் மக்கள் செய்யும் அட்டகாசங்களால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பழங்குடி மக்களை ஏமாற்றும் தொண்டு நிறுவன நடவடிக்கைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தியதில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர்.
கட்டுமஸ்தான உடலும், ஆக் ரோஷ நடிப்புமாக ஆர்யா அசத்து கிறார். சண்டைக் காட்சிகளில் இருக்கும் துடிப்பு, காதல் காட்சி களில் காணவில்லை.
கடம்பனைச் சுற்றிச் சுற்றி வரும் பொன்வண்டாக கேத்தரீன் தெரசா. ஆனால் பாவம் அதைத் தவிர அவருக்கு வேறு வேலையில்லை. தவிர, காதல் காட்சிகள் மிகவும் செயற்கையாக இருக்கின்றன.
ஆர்யாவின் தந்தையாக சூப்பர் சுப்பராயன், நண்பனாக ஆடுகளம் முருகதாஸ், சிமென்ட் நிறுவன அதிபராக தீப்ராஜ் ராணா, தொண்டு நிறுவனத் தலைவராக ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் தங்கள் பணியைச் சரியாகச் செய்திருக் கின்றனர்.
‘வாழ்க்கைத் தரம்கிறது வாழ்ற முறைலதான் இருக்கு’, ‘காட்டை அழிக்க உன்னைப் போல ஆயிரம் பேர் வந்தா, காட்டைக் காப்பாத்த என்னைப் போல நூறு பேர் வருவாங்க’ என்று சில வசனங்கள் மட்டும் ஈர்க்கின்றன.
பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையில் ஆங்காங்கே யுவன் ஷங்கர் ராஜா தெரிகிறார். தேனி, கொடைக்கானல் பகுதியின் காடு கள், மலைகள், அருவிகளை அழ காக அள்ளி வந்திருக்கிறது எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு. கிளை மாக்ஸ் காட்சிகளில் தேவா இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
கதையாக, காட்சிகளாக, ‘கடம்பன்' செழுமை. ஆனால் திரைக்கதையில் வறட்சி.