இந்திய சினிமாவுக்குக் குற்ற உலகம் தொடர்பான கதைகளும், அந்தப் பின்னணி சார்ந்த நாயகர்களும் புதிதல்ல. ஆனால் குற்றவுலகின் யதார்த்தத்தையும், அதில் புழங்கும் மனிதர்களின் உளவியலையும் நெருங்கிச் சென்று திரைப்படமாக்கிய முதல் இயக்குநர் ராம் கோபால் வர்மா தான். அந்த உலகில் நடக்கும் மோதல்கள், வன்முறை, குரோதங்களை ரத்தக் கவுச்சியுடன் பார்வையாளர்களுக்குப் பரிமாறியவர் அவர். தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்த சிவா (தமிழில் உதயம்), வர்மாவின் முதல் படம். சாதாரணப் பின்னணி கொண்ட ஒரு கல்லூரி இளைஞன், சூழ்நிலைகளால் துரத்தப்பட்டு வன்முறையைக் கையில் எடுக்கும் வழக்கமான சண்டைக் கதைதான். படாடோபம் இல்லாத ஹீரோயிசமும், வேகமான திரைக்கதையும், நெஞ்சைத் தடதடக்க வைக்கும் சண்டைக்காட்சிகளும் ஒரு தலைசிறந்த இயக்குநரின் வருகைக்குக் கட்டியம் கூறின.
தெலுங்கிலிருந்து பாலிவுட்டை நோக்கி வேகமாகத் தன்னை விஸ்தரித்துக்கொண்டார் வர்மா. மும்பையின் அரசியல், வர்த்தகம், சினிமா, ரியல் எஸ்டேட் என எல்லாத் துறைகளிலும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கம் செலுத்திவந்த நிழலுலக தாதாக்களின் வாழ்க்கை நடைமுறைகள் மீது அவருக்கு ஈர்ப்பு உருவானது. கொலை, கடத்தல், குண்டுவீச்சு போன்ற பெரும் குற்றங்களில் ஈடுபடும் மனிதர்களின் அன்றாடம் எப்படி இருக்கும் என்று ஆய்வுசெய்யத் தொடங்கினார், குற்றவுலக நபர்களைச் சந்தித்து உரையாடினார். ஒரு பெரிய பிரமுகரைக் கொலை செய்யப் போகும் நபர், அன்று காலையில் எப்படி இருப்பான்? தன் அம்மா, மனைவி, குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்வான்? அந்தக் கேள்விகளுக்கான பதில்தான் சத்யாவும், கம்பெனியும்.
ஒரு சராசரி வாழ்வைத் தேடி மும்பை நோக்கி வரும் இளைஞன் சந்தர்ப்பவசமாகக் குற்றவுலகின் ஒரு பகுதியாக மாறுகிறான். ஒரு கொலைத்தொழிலாளி எப்போதும் துப்பாக்கியைத் தூக்கிவைத்துக்கொண்டு, இறுக்கமான முகத்துடனேயே அலைந்துகொண்டிருக்க வேண்டியதில்லை! அவன் தன் காதலியோடு கடற்கரைக்குச் செல்வான், கர்ப்பமான மனைவிக்கு நண்பர்களுடன் சென்று நகை வாங்கிக் கொடுப்பான், ஓட்டலுக்குச் சென்று குழந்தைகளுடன் இரவு உணவு சாப்பிடுவான் என்று அவர்களது சராசரி உலகையும், ஆசாபாசங்களையும் காட்டிய படம் சத்யா.
கம்பெனி படம், குற்றவுலகத்தை இயக்கும் பொருளாதாரம் குறித்தது. “இங்கே நட்பு, மரியாதை, நேர்மை எல்லாவற்றையும் ஒரே ஒரு விஷயம்தான் நிர்ணயிக்கிறது. அது லாபம். இங்கே யாரும் வரலாம். ஆனால் எவரும் வெளியேற முடியாது” என்று அஜய் தேவ்கன் சொல்வார்.
ஒரு கட்டத்தில் குற்றவுலகம்தான் வர்மாவின் சிறப்பம்சம் என்று விமர்சனம் எழுந்தபோது அதையும் உடைத்தார். ரங்கீலா போன்ற கொண்டாட்டமான இசையும், சொட்டச் சொட்ட இளமையும் கொண்ட படத்தையும் எடுத்தார்.
1990களுக்குப் பிறகு திகில் படம், செய்தி சார்ந்த படங்கள், நிஷப்த் போன்ற உணர்ச்சி வேகம் கொண்ட படம் என எல்லா வகைமைகளையும் செய்த இயக்குநர் அவர்தான். அமிதாப், தனது வயதுக்கேற்ற திரைப்படங்களில் நடிக்க முடிவுசெய்த பின்னர் அவருக்கேற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவரைப் பிரமாதமாகப் பயன்படுத்தியவர் வர்மாதான். அறுபது வயது நபரின் அமைதியான குடும்ப வாழ்க்கை சிறிய காதல் தடுமாற்றத்தால் நிலைகுலைந்து போகும் லோலிதா வகைக் கதையை விரசம் இல்லாமல், உணர்வுபூர்வமான கதைசொல்லலின் மூலம் அமிதாப்பின் வழியாகவே சாதித்தார் வர்மா. ஆனால் நிஷப்த் வெற்றிபெறவில்லை.
இத்தனை வகைமைகள், பரிசோதனைகள் செய்த வர்மா கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு வெற்றியைக்கூட அனுபவிக்கவில்லை. கதையில் கவனம் செலுத்தாமல் புதிய சினிமாத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கவனமும் ஒரு காரணம். டிஜிட்டல் காமிராவின் சாத்தியங்கள் அவரை ஈர்த்தன. கதையின் அழுத்தத்திற்குக் கவனம் அளிக்காமல், குறைந்த பட்ஜெட்டில், குறைந்த காலத்தில் அதிவேகமாகப் படங்களை எடுத்துத் தள்ளினார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘பிலிம் பேக்டரி' என்றே பெயர் வைத்தார். அவரது நல்ல படங்கள் என்று பெயர்பெற்றுத் தோல்வியை அடைந்த படங்களிலும்கூட, தாறுமாறான காமிரா கோணங்கள், கண்களைத் தொந்தரவூட்டும் ஷாட்களால் எரிச்சலை ஏற்படுத்தினார். தனக்குப் பிரியமான ஷோலே திரைப்படத்தை ‘ஆக்’ என்னும் பெயரில் ரீமேக் செய்தார். பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அந்தப் படம் பெரும் தோல்வியைத் தழுவியது. ஆக் திரைப்படத்தை விட மோசமாக, யாரும் ஒரு படத்தையும் எடுக்கவே முடியாது என்பதே தனது சாதனை என்று தன்னையே கேலிசெய்துகொண்டார்.
2008-ல் இவர் எடுத்த பேய்ப்படமான ‘பூங்’தான் இவருக்கு ஓரளவு வெற்றியை சமீப காலகட்டத்தில் அளித்த படம். சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த சத்யா-2 வும் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.
11 படங்களின் தோல்விகளுக்குப் பிறகு, இவருக்குத் தொடக்கத்தில் புகழை அளித்த தெலுங்கு தேசமே மிதமான வெற்றி ஒன்றைக் கொடுத்து ஆறுதல்படுத்தியுள்ளது. ராயலசீமாவில் நடக்கும் இரு கோஷ்டியினருக்கு இடையிலான மோதல்களை வைத்து எடுக்கப்பட்ட ‘ரௌடி’ சென்ற வாரம் வெளியானது. அதன் மூலம் வர்மா மீண்டெழுந்திருக்கிறார். இந்தியில் அமிதாப்பைக் கதாநாயகனாக்கி இயக்கிய ‘சர்க்கார்’ படத்தின் தழுவலே இக்கதை. ‘காட்பாதர்’ படத்தைத் தழுவியதுதான் ‘சர்க்கார்’. திரும்பத் திரும்ப இந்திய இயக்குநர்களுக்கு வாழ்வளிப்பவர் ‘காட்பாதர்’.
வணிக சினிமா நட்சத்திரமாகவே அதிகம் அறியப்பட்ட மோகன்பாபுவை அருமையான குணச்சித்திரக் கதாபாத்திரமாக ‘ரௌடி’ அறிமுகப்படுத்தியுள்ளது. மோகன்பாபுவும் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் படத்திலும் தந்தை-மகனாகவே நடித்திருக்கிறார்கள். மோகன்பாபு, ஜெயசுதா ஜோடி வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. வர்மாவின் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படாத சென்டிமெண்ட் காட்சிகளும் இந்தப் படத்தில் உண்டு. முப்பது நாட்களில் எடுக்கப்பட்ட படம் இது.
தோல்வியோ, வெற்றியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிடுபவர் வர்மா. அடுத்து ‘பட்டப்பகலு’ என்ற பேய்ப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டுவிட்டார். இதுதாண்டா போலீஸ் நாயகன் ராஜசேகர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இது. அடுத்து இந்தியில் சண்டைக் கலையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போகிறார்.
சத்ரியன் திரைப்படத்தில் திலகன், பழைய பன்னீர் செல்வமாக வரணும் என்று விஜயகாந்தைப் பார்த்துச் சொல்வார். அதேபோல ராம் கோபால் வர்மாவை மீண்டும் பழைய ராம் கோபால் வர்மாவாக எதிர்பார்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தொழில்நுட்ப சாத்தியங்கள் மீதான மயக்கத்திலிருந்து கலைந்து, அருமையான கதையோடு மீண்டும் எழுந்து வாருங்கள் வர்மா.