ஜூன் 24 : கவியரசர் கண்ணதாசன் 89-வது பிறந்த தினம்
திரைப் பாடல்களை ஒரு இலக்கிய வகையாகக் கொள்ள முடியுமா என்ற விவாதம் நீண்ட காலமாகவே இருந்துவருகிறது. அப்படியொரு அங்கீகாரம் திரைப்பாடல்களுக்குக் கிடைக்குமானால் அதில் முதலில் இடம்பிடிப்பவை கவியரசு கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களாவே இருக்கும். இது ஒரு ரசிகனின் உணர்ச்சிகரமான வாதம் அல்ல. கண்ணதாசனின் திரைத்தமிழைத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக உள்வாங்கிக்கொண்ட தமிழர்கள் தரும் நியாயமான கவுரவம்.
பாடாத பொருளில்லை
கவிதைத் தமிழை எளியமையாகவும் நயத்துடனும் திகட்டத் திகட்டத் திரையில் அள்ளித் தெளித்த முத்தையா கசப்பான உண்மைகளையும் வரிகளாக்கத் தவறவில்லை. ஏழ்மை முதல் பொதுவுடைமை வரை, வாழ்வின் அனைத்துப் படிநிலைகளையும், அனைத்து மனித உணர்வுகளையும் பாடல்களாய்ப் படைத்த இந்தப் பாட்டுச் சித்தர், சீர்களில் சித்து விளையாட்டைச் செய்தவர். விருந்தங்களால் தன்னை விரும்ப வைத்தவர். இன்று பெரும்பாலான திரைப்பாடல்கள் வெற்றுத் தத்தக்காரங்களாய் காற்றை அசுத்தப்படுத்திவரும் நிலையில் திரைத்தமிழுக்கும் கவிதைக்குமான இடைவெளியைக் குறைத்து அவற்றைக் காற்றில் அலையும் இலக்கியமாய் உயர்த்தி கவுரவம் செய்தவர். தவழும் நிலமாம் தங்கரதத்தில் அமைந்திருக்கும் அவரது அரசாங்கத்தில், குயில்கள் பாடும் கலைக்கூடத்தில், தாரகை பதித்த மணிமகுடத்தோடு அமர்ந்திருக்கும் அந்தப் பாட்டுக்காரரின் பல்லாயிரம் படைப்புகளில் ஒருசில திரைப்பாடல்களை அசைபோடலாம்.
தத்துவத் தேரோட்டி
வாழ்க்கைக்கான தத்துவங்களைத் தன் அனுபவங்களின் வாயிலாகவே மக்களின் வாசலுக்கு வரவழைத்தவர் கண்ணதாசன். மயக்கத்தையும், கலக்கத்தையும், மனக் குழப்பத்தையும் ஒரு சேர ஓரங்கட்ட மக்களுக்குக் கற்பித்தார். ஆடும்வரை ஆட்டம் போடுபவரையும், ஆயிரத்தில் நாட்டங் கொள்பவரையும் விட்டு விலகி நிற்கச் சொன்னார். ‘நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை’ என்று ஆற்றுப்படுத்தி, மனித மனங்களை அடுத்த உயர்நிலைக்கு இட்டுச் சென்றார்.
பொய்யர்களை இனங்காட்ட, ‘கைகளைத் தோளில் போடுகிறான் அதைக் கருணை என்றவன் கூறுகிறான் -பைகளில் எதையோ தேடுகிறான் கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்’ என்று பாடி நம்மை எச்சரித்து வைத்தார். தன் முதல் பாடலிலேயே, ‘கலங்காதிரு மனமே!’ என்று நமக்கு ஆறுதல் தந்த அந்தக் கலைமகன், ‘கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? - இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா?’ என்று மாற்றுத் திறனாளிகளுக்கும் மன எழுச்சி தந்தார்.
மாற்றுப் பார்வை
அதேபோல் ‘பார்ப்பவன் குருடனடி! படித்தவன் மூடனடி!
உண்மையைச் சொல்பவனே உலகத்தில் பித்தனடி! நீரோ கொதிக்குதடி! நெருப்போ குளிருதடி! வெண்மையைக் கருமையென்று கண்ணாடி காட்டுதடி!’ என்று பாடி நேர்மைக்குக் கிடைக்கும் பரிசை நயம்பட உரைத்தார். யதார்த்தக் கவிஞனாக இருந்த அதே நேரத்தில், நம்பிக்கை வளார்க்க அவர் தவறியதேயில்லை. அதை நிரூபிக்கும் வகையில்,
‘மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா!
மோசம், நாசம், வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா!
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா!
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா!”
என்று எத்தர்களின் வாழ்க்கை விரைந்து முடியுமென்று கட்டியம் கூறுகின்றார்.
இலக்கிய நயம்:
ஊர், தேன், தான், காய், வளை, ஆவேன் போன்ற சொற்களாலும், மே, வா, தா, டா, லே, லா, லோ போன்ற எழுத்துகளாலும் வரிக்கு வாரி முடிவடையும் படிப் பாடல்கள் புனைந்தது கவியரசரின் புலமையால் விளைந்த புதுமை. அது குறித்து ஆராய இப்போது அவகாசமில்லை. வியக்கத்தக்க விஷயங்களைத் தன் பாடல்களில் விதைத்தது அவரது தனித்துவம்.
திரைப்பாடல்களில் அந்தாதித் தொடை என்பது மிக அரிதான விஷயமே. அதுவும், ஒரே படத்தில் இரண்டு பாடல்களை அந்தாதியில் அமைக்க ஓர் அசுரத் திறமை வேண்டும். அது நமது கவியரசருக்கு வாய்த்திருந்தது. ‘மூன்று முடிச்சு” படத்தில் வரும் பாடல்களில்,
‘வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் -
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்-
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்-
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்’என்றும்..
‘ஆடி வெள்ளி தேடி உன்னை நானலைந்த நேரம் -
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்-
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம்-
ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம்’ என்றும் அந்தாதித் தொடைகள் அணிவகுத்து நம்மை அசர வைக்கும். ‘வசந்தகால நதிகளிலே’ பாடலில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், கமல், தேவி இருவரும் காதலில் மயங்கிக் கிறங்கும் பாடலாதலால், 13 இடங்களில் ‘கள்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்திருப்பான் அப்பெருங்கவி.
‘பூஜைக்கு வந்த மலரே வா’ பாடலில், இரண்டாவது சரணத்தில் ‘தேனில் ஊறிய மொழியும் மொழியும் - மலரும் மலரும் பூமலரும்” என்ற வரியில். ‘மொழியும் மொழியும்’ என்றும், ‘மலரும் மலரும்” என்றும் பெயர்ச்சொல் முன்னும், வினைச்சொல் அதைத் தொடர்ந்தும் வருமாறு பாடல் அமைத்தது, அவனது சொல் ஆளுமைக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு.
காட்சிக்கு ஏற்ற கவிதை
‘என்ன பார்வை உந்தன் பார்வை -இடை மெலிந்தாள் இந்தப் பாவை’ என்ற பாடலில், சிறு குசும்புடன் ஓர் இலக்கிய நயம் அமைந்துள்ளது. ‘பார்வை” என்ற வார்த்தையின் இடை எழுத்து - இடையின எழுத்து ‘ர்’ மெலிந்து மறைந்ததால் ‘பாவை’ ஆகிவிட்டது. காதலன் பார்வை பட்டு இடை மெலிந்தாள் பாவை என்பது எப்பேர்ப்பட்ட வார்த்தை ஜாலம்!
‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ பாடலில், ‘வண்ணம்’ என்ற சொல்லை, ஓர் இடத்தில், ‘நிறம்’ என்ற அர்த்தத்திலும், மற்றோர் இடத்தில் ‘தன்மை’ என்ற அர்த்தத்திலும், பிறிதோர் இடத்தில் ‘போல’ என்ற அர்த்தத்திலும் கையாண்டிருக்கும் கவியரசரைக் காலமெல்லாம் கொண்டாடலாம் நாம்.
காட்சி அமைப்புக்கேற்றவாறு மிகவும் பொருத்தமான பாடல்களை இயற்றியிருப்பது அவரது தொழில் பக்தி என்பதா? ஞான சக்தி என்பதா? குறிப்பாக ‘குலமகள் ராதை’ படத்தில், ‘பகலிலே சந்திரனைப் பார்க்கப் போனேன்” என்ற பாடலும், ‘பாக்கியலஷ்மி’ படத்தில் ‘காண வந்த காட்சியென்ன வெள்ளி நிலவே’ என்ற பாடலும், ‘வசந்த மாளிகை’ படத்தில் ‘கலைமகள் கைப்பொருளே’ என்ற பாடலும், காட்சி அமைப்புக்கேற்றவாறும், கதாப்பாத்திரத்துக்குத் தகுந்தாற்போன்றும் எழுதப்பட்ட உச்சத்தைத் தொட்ட பாடல்கள் இவை.
கண்ணதாசன் என்ற பெருநதியிடம் பல முரண்பட்ட கருத்துகள் நிழலாடினாலும், முத்தான, சத்தான பாடல்களைத் தந்ததனால், நித்தமும் நினைக்கப்பட வேண்டிய திரைத்தமிழின் பிதாமகனாக அவர் இருக்கிறார். வானும், வான்மதியும், விண்மீனும், கடலும், காற்றும், மலரும், மண்ணும், கொடியும், சோலையும், நதியும் மாறாததுபோல், கவியரசரின் புகழும் என்றும் மாறாது, மங்காது, மறையாது.