ஆடி மாதத்தைத் தவிர புதுப்படப் பூஜைகளுக்கு எப்போதுமே குறைவிருக்காது! ஊடகங்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் சுமார் 15 படங்கள் உற்சாகத்துடன் தொடங்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் முழுமைபெறும் படங்களின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்குகூடக் கிடையாது என்பதுதான் கோடம்பாக்கத்தின் யதார்த்தம்! பணப் பிரச்சினையைத் தாண்டி வந்து, முதல் பிரதி தயாரான நிலையில், தணிக்கைச் சான்றிதழ் பெற்று, தியேட்டரைத் தொட்டுப் பார்க்கும் படங்கள் வெகு சில மட்டும்தான்! எஞ்சிய படங்கள்? கஞ்சிக்கு வழியில்லாத கடைமடை விவசாயத் தொழிலாளி போல, படத்தை வெளியிடப் பல்வேறு முட்டுக்கட்டைகள். இப்படி சினிமா லேப்களில் கடந்த ஐந்தாண்டுகளில் முடங்கிக் கிடக்கும் சின்னப் படங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 1000! இந்தப் படங்களுக்கு என்னதான் பிரச்சனை?
போணி ஆகாத புதுமுகங்கள்
புதுமுகங்கள் நடித்த படம் என்பதுதான் முதன்மையான முட்டுக்கட்டை என்கிறார் மூத்த திரைப்பட வியாபார விமர்சகரான ஆர். ராமானுஜம். “தணிக்கை முடிந்து தயாரான நிலையிலும்கூட சுமார் 115 படங்களை வாங்க ஆள் இல்லை. காரணம் இந்தப் படங்களில் நடித்திருக்கும் முதன்மை நட்சத்திரங்கள் அனைவரும் புதுமுகங்கள். அதேபோலத் திரையுலகில் பல ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு, எப்படியாவது இயக்குனர் ஆகிவிட வேண்டும் என்ற வெறியில் சிலர் 25 லட்சம், 50 லட்சம், 75 லட்சத்தில் முடித்த படங்கள். இந்தப் படங்களை வாங்க யாரும் முன்வருவதில்லை. இது தவிர 10 லட்சம் முதலீட்டை வைத்துக்கொண்டு தொடங்கி, பிறகு 40 முதல் 50 லட்சம் வரை செலவு செய்யப்பட்ட சுமார் 1000 படங்கள், முடிக்க முடியாத நிலையில், பல ஆயிரம் அடி நெகட்டிவுடன், சினிமா லேப்களில் தூங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தப் படங்களை முடித்து வெளியிட, நிதி உதவி வழங்கவோ, அல்லது முடிந்த படங்களை வாங்கி வெளியிடவோ யாரும் முன்வர மாட்டார்கள். காரணம் இந்தப் படங்களுக்கு ‘பிஸினஸ் வேல்யூ’ என்பது இல்லை. முன்பின் தெரியாத புதிய தயாரிப்பாளர்கள், புதிய நட்சத்திரங்களை நம்பி, சினிமா பைனான்ஸ் செய்யப்படுவதில்லை!” என்று விளக்குகிறார் ராமானுஜம்.
இவர் சொல்வதை ஆமோதிக்கிறார்கள் சென்னையின் பிரபல சினிமா லேப்களில் பணிபுரியும் மேலாளர்கள் பலரும். “படம்பிடிக்கப்பட்ட பிலிம் சுருள்களின் நெகட்டிவ்களை நாங்கள்தான் பாதுகாக்கிறோம். இந்த நெகட்டீவ்களை அழியாமல் பாதுகாக்க வேண்டியது எங்கள் கடமை. இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவைச் சேர்ந்த யாருக்காவது சம்பள பாக்கியோ, அல்லது லேப் பிராசசிங் மற்றும் பிரிண்டிங் கட்டணம் பாக்கி இருந்தால், நாங்கள் படத்தை வெளியிட அனுமதி தர மாட்டோம். பாக்கியைப் புரட்டிக் கொடுத்துப் படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக நஷ்டம் வரும் என்ற நிலையில் இருப்பவர்கள், குழந்தைகளைப் பெற்று அநாதையாகக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் செல்வதுபோலப் படத்தின் நெகட்டிவை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள்” என்கிறார்கள் இவர்கள்.
தீண்டாத திரையரங்குகள்
புதுமுகங்கள் நடித்த படம் என்ற காரணத்துக்காகவே இந்தப் படங்கள் புறக்கணிக்கப்படுகின்றனவா, வேறு காரணங்கள் இல்லையா என்று துருவினால், அடுத்த முட்டுக்கட்டையாக முன்னால் வந்து நிற்கின்றன திரையரங்குகள்.
“சின்னப் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. காரணம், பிரபலமான நட்சத்திரங்களின் படங்களை மட்டுமே வெளியிடத் துடிக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். முக்கியமாக மாஸ் ஹீரோக்களின் படங்கள்தான் இவர்களது கல்லாப் பெட்டிகளின் கடவுள்! எவ்வித கவனிப்புமின்றி வெளியாகும் சின்னப் படங்கள் ரசிகர்களுக்குத் தெரிவதில்லை. சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால், விளம்பரங்களுக்கு செலவு செய்ய முடிவதில்லை! தமிழ்த் திரையுலகைப் பொருத்தவரை பெரிய பட்ஜெட் படங்களுக்கு 3 கோடி ரூபாயும், சின்ன பட்ஜெட் படங்களுக்கு 1 கோடி ருபாயும் விளம்பரங்களுக்கு செலவு செய்ய வேண்டி இருக்கிறது! சின்னபட் ஜெட் படத்தின் தயாரிப்பாளரே தன்னிச்சையாகத் திக்கிக் திணறி வெளியிட்டாலும், படம் நன்றாக இருக்கிறது என்ற ‘மவுத் டாக்’ வருவதற்கே ஒரு வாரம் ஆகிவிடுகிறது! ஆனால் அதுவரை திரையரங்க உரிமையாளர்களுக்குப் பொறுமை இருப்பதில்லை! கூட்டம் வரவில்லை என்றால் இரண்டாவது நாளே படத்தைத் தூக்கிவிடுகிறார்கள். இப்படி ரசிகர்களின் ‘வாய்மொழி விளம்பரம்’ உருவாகும் முன் தியேட்டரை விட்டுத் தூக்கப்பட்ட அற்புதமான படங்களில் ‘தா’, ‘ஆரண்ய காண்டம்’ இரண்டும் கடந்த ஆண்டின் உதாரணங்கள்” என்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளரான ஆர்.எஸ். அந்தணன்.
சின்ன பட்ஜெட் படங்களை ,ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின், மைக்கேல் ராயப்பன், டாக்டர் வி. ராமதாஸ், க்ரீன் ஸ்டூடியோ ஞானவேல்ராஜா என வெகு சிலர் வாங்கினால், அந்தப் படங்கள் கவனம் பெறுகின்றன. காரணம் இந்தப் படங்களை இவர்கள் சந்தைப்படுத்தும் விதம். ஆனால் இவர்கள் யாரும் தற்போது தரமான சின்னப்படங்களை வாங்க போதிய ஆர்வம் காட்டுவதில்லை. காரணமும் புரியவில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள், இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்தே இவர்களைத் துரத்தும் பல அறிமுக இயக்குனர்கள்.
பின் தயாரிப்பிலும் பின் வரிசைதான்!
அவர்களில் ஒருவரான திரைப்படக் கல்லூரி மாணவர் ஆஷீக் ‘உ’ என்ற சின்ன பட்ஜெட் படத்தை இயக்கியிருக்கிறார். “இதுபோன்ற சின்னப்படங்கள் தரமாக இருந்தாலும், மைனா, வெண்ணிலா கபடிக்குழு, நேரம் போல கவனம் பெற வேண்டுமானால், அவற்றை மிகக் கவனமாக திட்டமிட்டு, உருவாக்க வேண்டியிருக்கிறது. ஊடகங்களின் கவனத்தைக் கவர வேண்டியிருக்கிறது. அப்படியே கவனத்தைக் கவர்ந்தாலும், சின்னப் படங்களை வாங்கி வெளியிடும் தயாரிப்பாளர்களை இந்தப் படங்களைப் பார்க்க வைக்கவே பல்வேறு சிபாரிசுகளை நாட வேண்டியிருக்கிறது. படம் முடிந்து தயாராக இருந்தாலும், இப்படி ஆள் பிடிப்பதில் ஆறு மாதம், ஒரு வருடம் என்று ஓடிவிடுகிறது” எனும் ஆஷிக், “பல நடிகர்கள் படத்தில் இருந்தாலும் ஒரு நடிகராவது, மக்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரமக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் குறைந்தபட்ச கவனம் கிடைக்கும்” என்கிறார். இவரது படத்தில் தம்பி ராமைய்யா இருக்கிறார்.
“போஸ்ட் புரடெக்ஷன் வேலைகளுக்காகப் போனபோது, டப்பிங், டி.டி.எஸ் என பல கட்டங்களில், எங்களை வரிசையில் நிற்கவைத்துவிட்டார்கள். பெரிய படங்கள் வேலை முடிந்த பிறகுதான் எங்கள் பக்கம் திரும்பினார்கள். பணம் ஒரு பக்கம் பிரச்சனை என்றால், சின்னப் படம் என்பதற்காக நடத்தப்படும் இந்த மறைமுக ‘ராகிங்’ அதைவிடக் கொடுமையானது” என்கிறார் ஆஷிக். இத்தனை கஷ்டங்களைத் தாண்டி தற்போது ‘உ’ படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று வாங்கி வெளியிட முன்வந்திருக்கிறது.
சாகடிக்கும் சாட்டிலைட் உரிமை
இந்தப் பிரச்சனைகளைத் தாண்டி, முடிந்த சின்னப்படங்களின் சாட்டிலைட் உரிமையை விற்பதிலும் பெரும் சவால்கள். அடிமாட்டு விலைக்கு விலைபேசுகிறார்களாம். அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகும் தொலைக்காட்சியிலிருந்து பணம் கைக்கு வருவதில் இழுவையும், இழுபறி நீடிக்கிறது என்கிறார்கள். சாட்டிலைட் உரிமை மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, பாக்கி தொகைகளை அடைத்து படத்தை வெளியிடலாம் என நினைக்கும் பலருக்கும், பணம் உடனடியாகக் கைக்கு வருவதில்லை. இதனால் பல படங்கள் அப்படியே கிடக்கின்றன. இதில் இரண்டாம் நிலையில் உள்ள ஹீரோக்களின் படங்களும் அடக்கம் என்கிறார் ஒரு சின்னப் படத் தயாரிப்பாளர்.
இத்தனை தடைகளைத் தாண்டிச் சின்னப் படங்கள் வெளியாகும் நிலை வர வேண்டுமானால், அரசின் சலுகைகளும், விதிவிலக்குகளும் தரமான சிறிய பட்ஜெட் படங்களுக்குக் கூடுதலாகத் தேவை என்கிறார்கள் பல கோடிகளை இழந்து நிற்கும் பல சின்னப் படங்களின் தயாரிப்பாளர்கள்.