“ஒரு திரைப்படப் பாடல் அதற்கான காட்சி சூழலில் எப்போதுமே மறைந்துள்ளது. நான் செய்ய வேண்டியதெல்லாம் அதை வெளிக்கொணர்வது மட்டுமே. காதல் எனும் உயர்ந்த உணர்வுக்குக்கூட, ஒரே விதமான பாடல்களை எழுத முடியாது.
ஒவ்வொரு பாடலாசிரியர் உள்ளத்திலும் ஒரு கவிஞன் வாழ்கிறான். ஆனால் ‘பாடலாசிரியர்’ என்பவர் படத்தில் நிகழக்கூடிய ஒவ்வொரு சூழலுக்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளை எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வரிகளை எழுதும் திறன் பெற்றவனாக இருக்க வேண்டும்.
எதையும் எளிய மொழியில் எழுத முடியும். நம் கிராமியப் பாடல்களைப் பாருங்கள். அவற்றில் நமது தலைசிறந்த கவிதைகளில் இடம்பெற்றிருப்பதைவிட ஆழம் அதிகம் கொண்ட கருத்துகள் பொதிந்திருக்கும்.
எந்த ஒரு பாடலின் வரிகளும் அந்தப் படத்தின் கதைக் கருவையும் காட்சிகளையும் பொருத்தே அமைகின்றன. திரைக்கதை வெளிப்படுத்தும் உணர்வு, நிகழும் தருணம், கதாபாத்திரங்களின் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எழுதப்படும் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும்.”
மேலே காணப்படும் கருத்துக்கள் இந்திப் படவுலகில் ‘மக்களின் கவிஞன்’ என்று கொண்டாடப்பட்ட பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி கூறியவை. ‘ஆராதானா’, ‘பாபி’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘அமர் பிரேம்’, ‘ஏக் துஜே கேலியே’ போன்ற தமிழ் ரசிக உலகம் நன்கு அறிந்த படங்களுக்கான பாடல்களை எழுதியவர்.
எளிமையின் கவிஞன்
இதுவரை இப்பகுதியில் நாம் கண்ட ராஜேந்திர கிஷன், ராஜா மெஹதி அலி கான் ஆகிய பாடலாசிரியர்களிடமிருந்து ஆனந்த் பக்ஷி வேறுபடும் இடம் அவரது எளிமை. நமது வாலியைப் போன்றே, எல்லோருக்கும் தெரிந்த எளிய வார்த்தைகளில் பாடலின் சூழலையும் அதனுள் ஊடுருவிக் கிடக்கும் ஆழ்ந்த உணர்வுகளையும் ஆனந்த பக் ஷியின் பாடல்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன. இதனுடன் அவரின் பாடல்களுக்கு அமைந்த இனிய மெட்டுகள், இந்தித் திரை உலகிலிருந்து எப்போதும் பிரிக்க முடியாத அம்சமாக அவரின் பெரும்பான்மையான பாடல்களை ஆக்கின.
ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன், ஜிதேந்திரா போன்ற சூப்பர் ஸ்டார்கள் தங்களின் படங்களுக்கு ஆனந்த பக் ஷி மட்டுமே பாடல் எழுத வேண்டும் எனத் தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை இடும் அளவுக்கு சுமார் 40 வருடங்கள் கோலோச்சிய பக்ஷியின் பாடல்கள் அவரின் மறைவுக்குப் பின்பும் விரும்பி எடுத்துக்கொள்ளப்பட்டன.
600 படங்கள் 4000 பாடல்கள்
‘ஆஜ் மௌசம் படா பெய்மான் ஹை’ என்ற இவரது பாடல் மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’ என்ற படத்திலும் ‘சோளி கீ பீச்சே கியா ஹை’ என்ற பாடல் ‘ஸ்லெம் டாக் மில்லியனர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் மீண்டும் இடம் பெற்றன.
‘பக் ஷி ஆனந்த் குமார் வைத்’ என்ற இயற் பெயரைக் கொண்ட ஆனந்த் பக் ஷி காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள குர்ரி என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்த ‘முஹயால் பிராமணர்கள்’ அல்லது ‘ஹுஸ்ஸேன் பிராமணர்கள்’ என்று அழைக்கப்படும் வகுப்பில் பிறந்தவர். மெக்காவில் உள்ள கர்பாலாவைக் கைப்பற்ற நடந்த யுத்தத்தில் முகமது ஹுஸ்ஸேன் பக்கம் நின்று அவருக்காகத் தன் ஏழு புதல்வர்களை இழந்த பிராமண வம்சம் என்பதால் இந்தப் பெயர் அந்தப் பிரிவினருக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஐந்து வயது நிரம்பும் முன்பே தாயை இழந்த ஆனந்த் பக் ஷி, தன் உறவினர் தயவில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் குடும்ப வழக்கப்படி அன்றைய பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்தார். கவிதையிலும் இசையிலும் ஆர்வம் கொண்ட பக் ஷி, கப்பற் படையில் சேர்ந்ததற்கு, திரை உலக மெக்காவாகத் திகழும் பம்பாய்க்குச் செல்ல அது வழி வகுக்கும் என்று நினைத்ததும் ஒரு காரணம்.
பல சோதனைகள், அடுத்தடுத்த தோல்விகள், தேசப் பிரிவினையின் விளைவால் லக்னோவுக்கு குடி பெயர்ந்தது, பல நாள் மும்பை ரயில் நிலைய நடைமேடைகளில் பட்டினியோடு உறங்கியது ஆகிய எல்லாத் தடைக்கற்களையும் கடந்து மாபெரும் வெற்றியடைந்த ஆனந்த பக் ஷியின் வாழ்க்கை அனுபவங்கள் அவருடைய பாடல்களின் அடித்தளமாக அமைகின்றன. சுமார் 600 படங்களுக்காக அவர் எழுதிய 4000-க்கும் அதிகமான பாடல்கள், சமூகத்தின் அடித்தட்டு, நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு மக்கள் ஆகிய அனைவருக்கும் உற்சாகமூட்டும் அம்சமாகத் திகழ்கின்றன. வரும் வாரங்களில் அவரது பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.