இந்து டாக்கீஸ்

கலக்கல் ஹாலிவுட்: குறைத்து மதிப்பிட முடியாத குரங்குகள்

டி. கார்த்திக்

அறிவியல் புனைவுக் கதைகளுக்கு ஹாலிவுட்டில் எப்போதுமே வரவேற்பு அதிகம். அதுவும் வித்தியாசமான அறிவியல் புனைவுக் கதை என்றால் கேட்கவே வேண்டாம். 2011, 2014-ம் ஆண்டுகளில் வெளியான ‘தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’, ‘டான் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ஆகிய படங்கள் அந்த ரகம்தான். இவை பெற்ற வெற்றி தற்போது ‘வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ என்ற மூன்றாவது பாகமாக ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது. மனித மூப்பு நோய்களை எதிர்த்துப் போராடும் மருந்தைக் கண்டுபிடிக்க முயலும் நாயகன் மனிதக் குரங்கு ஒன்றை வைத்து ஆராய்ச்சி செய்கிறார்.

அந்த மருந்து செலுத்தப்பட்ட குட்டிக் குரங்கு வளர வளர மனிதரைப் போல் சிந்திக்கும் ஆற்றல் முதல் பேசும் ஆற்றல்வரை அனைத்தையும் பெற, அது காட்டிலிருக்கும் தனது குரங்கு இனத்தைத் திரட்டி மனித இனத்துடன் மோதத் தொடங்குவதுதான் கதை.

வெளியாகவிருக்கும் புதிய படத்தில் ராணுவத்துடன் மோதிச் சண்டையில் தோற்றுப்போன குரங்குகள் பழிதீர்ப்பதற்காக மீண்டும் போர் புரிய வருகின்றன. குரங்குகள்தானே என்று குறைத்து மதிப்பிட்டுத் துப்பாக்கிகளுடனும் நவீன ஆயுதங்களுடனும் சண்டையிடும் மனிதர்களுடன் நேருக்கு நேராக மோதும் குரங்குகளின் கதி என்னவாகிறது என்பதுதான் இந்தப் புதிய பாகத்தின் கதை.

அண்மையில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நவீன ஆயுதங்களுடன் வரும் மனிதர்களைப் பழங்கால ஆயுதங்களுடன் குரங்குகள் எதிர்கொள்வது போன்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. இந்தப் படத்தை மேட் ரீவ்ஸ் இயக்கியுள்ளார். சுமார் இரண்டு மணி நேர நீளமுள்ள இந்தப் படம் அமெரிக்கா, கனடா, இந்தியா உள்பட உலகின் பல மொழிகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT