ஏவி.எம் தயாரிப்பில் நான் இயக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் ‘முரட்டுக்காளை’. இந்தப் படத்துக்காக பாகனேரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு ஏறுதழுவி, ஜல்லிக்கட்டில் வெற்றி பெறுவார். மக்கள் அவரை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவார்கள். அப்போது இசைஞானி இளைய ராஜா இசையில் பஞ்சு அருணாசலம் அவர்கள் எழுதிய, ‘பொதுவாக எம் மனசு தங்கம்.. ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’ என்ற பாடலை ரஜினிகாந்த் பாடுவார். இந்தப் பாடல் இன்றைக்கும் ரஜினி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பாடலாக உள்ளது. இப்படி தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை ‘முரட்டுக்காளை’ படத்தில் வைத்து பெருமைப்படுத்தினோம்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தடை இருந்து வந்தது. இந்த ஆண்டு தடை நீங்கி தைத்திருநாளில் ஜல்லிக்கட்டு நடக்கும் என்று ஆவலோடு இருந்தோம். ஆனால், ஏமாற்றம். அதன் எதிரொலியாகத்தான் தமிழர்கள் போராட்டம் வெடித்தது. மாணவ, மாணவிகள் முன்னிருந்து மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் களமிறங்கினர். சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்களும், மாணவர்களும் நடத்திய அறவழிப் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் வரலாற்று முக்கியத்துவமுள்ள சம்பவமாக சரித்திரம் படைத்துவிட்டது.
தமிழகம் முழுவதும் இளம் காளையர்களும், வீர மங்கைகளும் களத்தில் இறங்கி 7 நாட்கள் குடிநீர், உணவு, தூக்கம் இல்லாமல் பனியிலும், மழையிலும், வெயிலிலும் போராடினார்கள். நம்பிக்கையோடு களத்தில் நின்ற மாணவிகளிடம் ‘இரவிலும் தங்கி போராடுகிறீர்களே, உங்களுக்கு பாதுகாப்பு?’ என்று ஊடகத்தினர் கேட்டனர். அதற்கு அவர்கள், ‘மாணவர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு’ என்றனர். நெஞ்சம் நெகிழ்ந்தது. நம் கலாச்சாரம் தெரிந்தது. மாணவ, மாணவிகளுக்கு கிடைத்த முழு வெற்றிதான் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரச் சட்டம். அதன்பிறகு நடந்த சூழ்நிலை வருத்தமளிக்கிறது.
‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான் என்ற வள்ளுவரின் வாக்கை இந்த நேரத்தில் உரியவர்களுக்குச் சொல்கிறேன்.
அதேபோல, புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய,
‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு..
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’
- என்றார். நல்ல விஷயத்துக்காக தமிழர்கள் ஒன்றானதைக் கண்டோம்.
‘காசேதான் கணவனடா’ என்ற நாடகத்தை தொலைக்காட்சி தொடருக்கு ஏற்ற மாதிரி வெங்கட் அவர்களை மாற்றி எழுதச் சொன்னோம். வெங்கட் அவர்கள் திறமையான எழுத்தாளர். பல வெற்றி நாடகங்களை கொடுத்தவர். அன்றாடம் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கையாக காட்சிப்படுத்தி கருத்துள்ள வசனங்கள் நிறைய சேர்த்து அவர் எழுதிக் கொடுத்த அந்தத் தொடர்தான் ஏவி.எம் தயாரித்த ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’.
இதில் சரத்பாபு, நாகேஷ், ஜெயபாரதி, ஜெய்கணேஷ், பொன்வண்ணன், டி.வி.வரதராஜன், சக்திகுமார், மதுபாலாஜி, வாசுகி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்தனர். இசை சந்திரபோஸ். பாடல் வைரமுத்து. கலை இயக்குநர் பத்ம தோட்டாதரணி, ஒளிப்பதிவாளராக டி.எஸ்.விநாயகம், கதை, வசனம் வெங்கட், இயக்கம் நான்.
இதை ஒரு தொலைக்காட்சி தொடராக அல்லாமல் சினிமாவாகவே எடுத்தோம். சரத்பாபு எங்களின் பல படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்தவர். அதேபோல மலையாளத்தில் நிறைய படங் களில் நடித்த ஜெயபாரதி இந்தத் தொடரில் சரத்பாபுவுக்கு மனைவியாக நடித்தார். சீரியல் முழுக்க கணவனை ‘பாவா.. பாவா’ என்று பாசத்தோடு அவர் அழைப்பதை பார்த்து பெண்கள் பலரும் தங்கள் கணவனை ‘பாவா.. பாவா’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ் இத்தொடரில் பழம்பெரும் தியாகியாக நடித்தார். தேசத் தலைவர்களின் படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்ட இடத்தில் ஒரு இளைஞன் சிகரெட் பிடித்துக்கொண்டே அவர்களை கிண்டல் அடிப்பார். அதைக் காணும் நாகேஷ், அந்த இளைஞனிடம் தேசத் தலைவர்கள் செய்த தியாகத்தை சொல்லியவாறே உணர்ச்சி வசப்பட்டு உயிரை விடுவார். நகைச்சுவை நடிகரான நாகேஷ் அவர்களின் நடிப்பு அழுகையை வரவழைத்தது. அதைப்போல மற்ற நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்கள். மொத்தம் 34 வாரங்கள் ஒளிபரப்பானது.
அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 2 எடுத்தோம். இதற்கு கதை, வசனம் எழுதும் பொறுப்பை ‘வேதம் புதிது’ கண்ணன் அவர்கள் ஏற்றார். இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கிய ‘வேதம் புதிது’ இவரது படைப்புதான். பகுத்தறிவு விஷயங்களை படைப்புகளில் புகுத்துவதை கடமையாக கொண்டவர். இந்த தொடரில் மவுனிகா, சேத்தன், தேவதர்ஷினி, தீபா வெங்கட், உஷா ஆகியோர் நடித்தனர். தொழில் நுட்பக் கலைஞர்கள் என் குழுவினர். இந்தத் தொடர் 50 வாரங்கள் ஒளிபரப்பானது.
அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 3. ‘திரிவேணி சங்கமம்’ என்ற துணைத்தலைப்போடு எடுத்தோம். இதில் விஜய் ஆதிராஜ், கவிதா, மோகன்ராம் ஆகியோர் நடித்தனர். இந்தத் தொடருக்கும் ‘வேதம் புதிது’ கண்ணன் கதை எழுதினார். 41 வாரங்கள் ஒளிபரப்பானது.
இதனை அடுத்து ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ 4-வது பாகம். ‘மாவிலைத் தோரணம்’ என்ற துணைத் தலைப்பில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில் தேவிபாலா அவர்கள் எழுதி வாராவாரம் ஒரு பாக்கெட் நாவல் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் நல்ல விஷயங்கள் குவிந்திருந்தன. அவர் எங்கே இருக்கிறார் என்று விசாரித்தபோது அம்பத்தூர் என்று தெரிந்தது. உடனே அவரை நேரில் சென்று பார்த்து விஷயத்தை கூறி சரவணன் சாரிடம் அறிமுகப்படுத்தினேன். கதைகளை நீர் வீழ்ச்சிபோல கொட்டினார்.
ஏவி.எம் தயாரித்த இந்த தோரண வாயில் தொடர் சின்னத்திரையில் தேவிபாலாவுக்கும் தோரண வாயிலாக அமைந்தது. இந்தத் தொடர் வழியே சின்னத்திரைக்கு அறிமுகமானார். இன்றைக்கு சின்னத்திரைக்கு அதிக கதைகள் எழுதிய கதாசிரியர் என்ற பெருமையோடு திகழ்கிறார். நிறைய கற்பனையும், கடுமையான உழைப்பும் அவரை உச்சத்துக்கு கொண்டு போனது. இதில் சுரேஷ், சினிமா நடிகை யுவராணி உள்ளிட்டவர்கள் நடித்தனர். 53 வாரங்கள் ஒளிபரப்பானது.
அடுத்து, ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ பாகம் 5. ‘தன்னம்பிக்கை’ என்ற துணைத்தலைப்பில் தயாரித்தோம். இதன் கதை, வசனம் தேவிபாலா. இதில் விஜய் ஆதிராஜ், சொர்ணமால்யா, தீபாவெங்கட் ஆகியோர் நடித்தனர். இப்படி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஏவி.எம் தயாரிப்பில் ‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ தொடர் வாராவாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தத் தொடர் மூலம் நல்ல கதாசிரியர்களுக்கு வாய்ப்பும், நல்ல நடிகர்களை அறிமுகப்படுத்துவதும், தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வோடு நல்ல செய்திகளை கொடுத்ததிலும் எங்கள் குழுவுக்கு மகிழ்ச்சி.
ஆண்டுதோறும் ஏவி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்கள் ‘வள்ளலார் காந்தி விழா’ நடத்துவார். அந்த நிகழ்ச்சிக்கு வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் பெரிய அளவில் வருவார்கள். இதை கவனித்த ஏவி.எம் சரவணன் அவர்கள் ஒரு யோசனை சொன்னார்கள்?
‘நிம்மதி உங்கள் சாய்ஸ்’ தொலைக்காட்சி தொடர் பாராட்டு விழாவில் சன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன், ஏவி.எம்.ராஜேஸ்வரி அம்மையார் உள்ளிட்டவர்கள்…
- இன்னும் படம் பார்ப்போம்.