கேரளாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெற்றி வாகை சூடியுள்ள முழு நீள அரசியல் படம் ‘ஒரு மெக்சிக்கன் அபாரத’. திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக்கள்போல் கொண்டாட்டங்கள். ஒரே ஒரு வெள்ளிக் கிழமையில் டொவினோ தாமஸ் முன்னணி நாயகன் ஆகியிருக்கிறார். நடிகர்கள் நீரஜ் மாதவ்க்கும் ரூபேஸ் பிதாம்பரனுக்கும் பட வாய்ப்புகள் குவிகின்றன. பெரிய நட்சத்திரங்கள், ப்ரமோக்கள் எதுவுமின்றிக் கிடைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றி மலையாளத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
கேரள மாணவர் சங்கம் (KSU), காங்கிரஸ் கட்சியின் மாணவர் இயக்கம். இந்திய மாணவர் சங்கம் (SFI), மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் இயக்கம். இந்த இரண்டு இயக்கங்களுக்கு இடையிலான அரசியல் சர்ச்சைகளும் சண்டைகளும் அடிக்கடி செய்திகளாக ஆகுபவை. அவற்றில் ஒன்று கல்லூரியில் யாருடைய கொடி, பாரிப் பறக்க வேண்டும் என்பது. இதையே ஆதாரமாகக் கொண்டு தனது முதல் படமாக ‘ஒரு மெக்சிக்கன் அபாரத’வை உருவாக்கியுள்ளார் இயக்குநர் டோம் எம்மட்டி. படத்தில் SFI-க்குப் பதிலாக SFY. KSU-க்குப் பதிலாக KSQ.
ஜினோ ஜானின் உண்மைக் கதை
KSQ கட்சிக்காரராக நடித்திருக்கும் ஜினோ ஜானின் கதைதான் இந்தப் படம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர் 37 ஆண்டுகளாக மகாராஜா கல்லூரி மாணவத் தலைமையைக் கைக்கொண்டிருந்த SFI-யை எதிர்த்து 2011 மாணவர் தேர்தலில் வென்ற KSU தலைவர். படத்தில் கதை, தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. இதை KSU ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
தொடக்கக் காட்சியில் மசாலாப் படத்தில் கதாநாயகன் அறிமுகமாவதுபோல் ஒரு செங்கொடி பிரம்மாண்டமாக எழுகிறது. கம்யூனிச இயக்கங்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்த ‘நெருக்கடி நிலை’க் காலகட்டத்தில் போலீஸின் அராஜகத்தை எதிர்த்த தோழர்களின் முத்திரை வாக்குகள் ஒலிக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் காணாமல்போன மாணவர் பி.ராஜனுக்கு ஆதரவான போராட்டமும் வருகிறது. அந்தச் சமயத்தில் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஒரு கம்யூனிஸ இயக்கத்தைச் சேர்ந்த மாணவர் போலீஸின் தோட்டாவுக்குப் பலியாகிறார்.
இந்த மாதிரியான தொடக்கத்துக்குப் பிறகு கதை நடப்புக் காலத்துக்கு வருகிறது. அரசியல் ஆர்வமற்ற பைங்கிளிக் கதாநாயகனாக டொவினோ தாமஸ். நகைச்சுவைக்கு விஷ்ணு கோவிந்தன். இந்தப் பகுதி, தொடக்கக் காட்சிக்கு முற்றிலும் தொடர்பற்ற வகையில் நீருக்குள் விழுந்த எண்ணெய்போல் விலகிச் செல்கிறது. ட்ரெயிலரில் பார்த்த மூர்க்கமான கம்யூனிஸ்டாகப் படத்தில் டொவினோ இல்லை. ஒரு பெண் பின்னால் சுற்றி, ஏவல் பணிசெய்து ஏமாந்துபோகிறார். ‘பிரேமம்’ படத்தின் கல்லூரிப் பகுதியை நினைவூட்டும் வகையிலான நகைச்சுவைக் காட்சிகள். இவர்களுக்கு இடையில் SFY கொடியை கல்லூரியில் பறக்கவிடுவதற்காகத் தீரமான கம்யூனிஸ்டாக நீரஜ் மாதவ் வருகிறார். ஆனால், மூர்க்கமாக அல்லாமல் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு SFY-க்கு மாணவர்களைச் சேர்க்கிறார். இடையிடையே “ரத்தம் சிந்தினாலும் SFY கொடியை இந்த கேம்பஸில் பறக்கவிடணும்” என்று முழங்குகிறார்.
பிரேமம் நினைவுகள்
‘தீவிரம்’ ‘யூ டூ புரூட்டஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரூபேஸ் பிதாம்பரன் KSQ தலைவர் பாத்திரம் ஏற்றுள்ளார். டொவினோ, ரூபேஸ் இருவரும் தங்கள் மீது ஏற்றப்பட்டுள்ள நாயகச் சுமையைத் தாங்கிச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். திரைக்கதை ‘ஓம் சாந்தி ஓசன்னா’ இயக்குநர் ஜூட் அண்டனி. வழக்கமான சினிமா முடிச்சுடன் கதையை முடித்துவைத்திருக்கிறார். ஜூட் ‘பிரேமம்’ படத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. இந்த வெற்றியை ‘பிரேம’த்தின் தொடர்ச்சி என்றும்கூடச் சொல்லலாம்.
படத்தில் இறுதிக் காட்சியில் சூளுரைத்தபடி ஒருசாரர் ரத்தம் சிந்தித் தங்கள் கொடியை ஏற்றிவிடுகிறார்கள். அது வெற்றிக் கொண்டாட்டமாக ஆகிறது. இது பிரிட்டிஷ் கொடி பறந்த இடத்தில் இந்திய தேசியக் கொடி பறந்ததை நினைவுபடுத்துகிறது.
இந்த SFY, KSQ, சிவப்பு, ஊதா எல்லாம் எடுத்துவிட்டுப் பார்த்தால் ஒரு வழக்கான சினிமாதான் இது. வேணு நாகவல்லி இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘லால் சலாம்’ கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்க காலத்தைச் சித்திரிக்கும் படம். முரளி கோபியின் கதையுடன் வெளிவந்த ‘லெஃப்ட், ரைட், லெஃப்ட்’போலில்லையென்றாலும் ‘லால் சலாம்’ அந்தக் கட்சிக்குள் இருக்கும் சில முரண்களைச் சொல்ல முயலும் படம். ஆனால், ‘ஒரு மெக்சிக்கன் அபாரத’கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது சிறு துரும்புகூட விழாமல் பார்த்துக்கொண்டுள்ளது. இந்த விதத்தில் இது கம்யூனிஸ்ட் கட்சியின் விளம்பரப் படம்போல் ஒற்றைத்தன்மையுடன் இருக்கிறது.