இந்து டாக்கீஸ்

சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்: மொழி பிரிக்காத உணர்வு 21

எஸ்.எஸ்.வாசன்

காதல் பாடல்களில் பெண்ணழகை வர்ணிப்பது ஒரு தனி ரகம். டூயட் பாடல்களில் ஆணைப் பெண்ணும் பெண்ணை ஆணும் வர்ணித்து / புகழ்ந்து பாடும் பாடல்கள் பல உள்ளன. ஆணின் பார்வையில் பெண்ணழகின் மீதான வசீகரம் என்பது எப்போதும் தீராத ஒரு மயக்கம்.

இந்த மயக்கம் ரசனையுடன் வெளிப்படும்போது கவிதையாகவும் பாடலாகவும் மாறுகிறது. ஒரு பெண்ணைப் பார்த்த பிறகு நிலவைப் பார்த்தால் அந்த நிலவுக்கே குளிர் இருக்காது என்று நெக்குருகிய பாடல்கள் இருக்கின்றன.

இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காதல் பாடல்களும் காதலன் / காதலி வர்ணனைப் பாடல்களும் அதிகம் இருந்தாலும் பெண்ணழகை மட்டும் போற்றும் பாடல்கள் ஒப்பீட்டளவில் குறைவுதான். அத்தகைய பாடல்கள் இரண்டை இப்போது பார்க்கலாம்.

பெண்ணின் அழகைப் பற்றிய பிரமிப்பு, சிரிப்பின் நளினம், கண்களின் ஈர்ப்பு, அவளது உடல் மொழி மூலம் ஆண் அடையும் மகிழ்ச்சி ஆகியவற்றின் சங்கமத்தைத் திரையில் நாயகன் பாடும் வரிகளின் வாயிலாக நம்மால் உணர முடியும்.

வானில் முழு மதியைக் கண்டேன் என்று மரபார்ந்த முறையில் பெண்ணை வர்ணிக்கும் பழைய பாடல்கள் பல இருந்தாலும் பிற்காலப் பாடலாசிரியர்கள் புதுமையான வர்ணனையுடன் பெண்ணழகைப் போற்றுகிறார்கள். வழக்கப்படி, முதலில் இந்திப் பாட்டு.

1942- A Love Story (1942-ம் வருடத்திய காதல் கதை) என்ற அனில் கபூர்-மனிஷா கொய்ராலா நடித்து, ஆர்.டி. பர்மன் இசை அமைத்த இப்படத்தின் இப்பாடலை எழுதியவர் குல்சார். பாடியவர் குமார் சானு.

பாட்டு

ஏக் லடிக்கி கீ கோ தேக்கா தோ

ஐஸ்ஸா லஃகா,

கில்த்தா ஃகுலாஃப் ஜைஸ்ஸே,

ஷாயர் கா கவாஃப் ஜைஸ்ஸே,

உஜ்லி கிரண் ஜைஸ்ஸே

வன் மே ஹிரன் ஜைஸ்ஸே,

சாந்தினி ராத் ஜைஸ்ஸே,

நர்மீ கி ஃபாத் ஜைஸ்ஸே,

மந்திர் மே ஹோ ஏக்

ஜல்த்தாஃதீயா ஜைஸ்ஸே,

பொருள்:

ஒரு பெண்ணைப் பார்க்கும்போது

இப்படித் தோன்றுகிறது.

(ஓர் அழகிய பெண் எனக்கு இப்படித் தோன்றுகிறாள்)

மலரும் ரோஜா போல,

கவியின் கனவு போல,

எழுகின்ற கிரணம் போல,

வனத்தில் உள்ள மான் போல,

முழு நிலவு இரவு போல,

மென்மையான பேச்சு போல,

ஆலயத்தில் ஒளிரும் தீபம் போல,

காலைப் பொழுதின் அழகு போல

கார் கால வெயில் போல,

வீணையின் நாதம் போல,

வண்ணக் கோலத்தின் மையம் போல,

வளர்ந்த மரத்தின் கிளை போல,

அலைகளின் ஆடல் போல,

தென்றல் தரும் நறுமணம் போல,

(தோகை விரித்து) நடனமிடும் மயில் போல,

பட்டின் இழை போல,

தேவதையின் பாட்டு போல,

சந்தன (கட்டையால் மூட்டிய) தீ போல,

16 வித முறையில் செய்த ஒப்பனை போல

பழச்சாற்றின் நீரூற்று போல,

மெல்ல மெல்லப் படரும் மயக்கம் போல.

எளிமையும் புதுமையும் கொண்ட இந்தப் பாடலைப் போலவே அமைந்திருக்கிறது ‘மைதிலி என்னை காதலி’என்ற படத்தில் இடம்பெற்ற இனிமையான ஒரு பாடல். அறிமுகமான குறுகிய காலத்திலேயே மிகவும் பாராட்டுதல் பெற்ற டி.ராஜேந்தர் இயற்றி இசையமைத்த பாடல் இது. இந்தித் திரையில் பாடல் இயற்றி அதற்கு இசையும் அமைத்த ரவீந்திர ஜெயின் என்பவருக்கு இணையாக ராஜேந்தர் போற்றப்பட்டார்.

நவீன வர்ணனையும் ரசனையான சொல்லாடல்களும் நிறைந்த பல பாடல்களை எழுதிய ராஜேந்தர் நடிகராகவும் இயக்குநராகவும் விளங்கினார்.

குல்சார் எழுதிய எளிய வரிகளுடன் கூடிய ரசனை உணர்வைத் தமிழுக்கே உரிய விதத்தில் வெளிப்படுத்தும் இப்பாடலைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

பாடல்:

ஒரு பொன்மானை நான் காணத் தகதிமிதோம்

ஒரு அம்மானை நான் பாடத் தகதிமிதோம்

சலங்கை இட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு

அவள் விழிகளில் ஒரு பழரசம்

அதைக் காண்பதில் எந்தன் பரவசம்

தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி

தாமரைப் பூ மீது விழுந்தனவோ

இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்

படைத்திட்ட பாகம்தான் உன் கண்களோ

காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக் கிரு

கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்

ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே

அதில் பரதம்தான் துளிர்விட்டுப் பூப்போல பூத்தாட

மனம் எங்கும் மணம் வீசுது

எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது

சலங்கையிட்டாள் ஒரு மாது ...

சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம்

அரங்கேற அதுதானே உன் கன்னம்

மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்

நடத்திடும் வானவில் உன் வண்ணம்

இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட

புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்

கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்

அந்தக் கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி

மதி தன்னில் கவி சேர்க்குது

எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

சலங்கையிட்டாள் ஒரு மாது ...

படங்கள் உதவி: ஞானம்

SCROLL FOR NEXT