இந்து டாக்கீஸ்

மலையாளக் கரையோரம்: மஞ்சு வாரியர் தமிழுக்கு வருகிறார்

செய்திப்பிரிவு

மலையாளத்தின் முன்னணி நடிகை மஞ்சு வாரியர். இவர் ஒரு காலகட்டத்தில் மலையாள சினிமாவின் வெற்றி நட்சத்திரமாக வலம்வந்தவர். தேசிய விருதும் பெற்றிருக்கிறார். மலையாள முன்னணி நடிகரான திலீப்பை மணந்த பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்டு குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். சமீபத்தில் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதைத் தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்தார். குஞ்சாக்கோ போனனுடன் அவர் இணைந்து நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனது (ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ‘36 வயதினிலே’ இதன் தமிழ் மறுஆக்கம்). இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது சம்பளத்தை 60 லட்சமாக நிர்ணயித்தார் என்று கூறப்பட்டது. இப்போது அதைச் சட்டென 75 லட்சமாக உயர்த்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் தமிழ் சினிமாவிலும் தலை காட்டப்போவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

அடூருக்குக் கவுரவம்

‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற சினிமா ஆளுமை அடூர் கோபாலகிருஷ்ணனுக்குக் கடந்த மாதம் 3-ம் தேதி 75-வது பிறந்த நாள். அவர் சினிமாவுக்கு வந்து 2012-ம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தன. இந்த இரு நிகழ்வையும் இணைத்து அடூர் கவுரவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய மூன்று தேதிகளில் அடூரின் ஆவணப் படங்களும் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. அடூர் குறித்துக் கலந்துரையாடல்களும் நடைபெற்றன. ‘ஃபெடரேஷன் ஆஃப் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா’வின் கேரளப் பிரிவு இதை ஒருங்கிணைத்தது. மேலும், அடூரின் இயக்கத்தில் மலையாளத்தின் ‘ஜனப் பிரிய நாயக’னான திலீப் - காவ்யா மாதவன் நடிப்பில் இந்த வாரம் வெளிவந்துள்ள ‘பின்னயும்’ பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

சித்தார்த்தின் முதல் மலையாளப் படம்

‘பாய்ஸ்’ படத்தில் தொடங்கிய சித்தார்த், தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகரானார். ஆமிர் கானுடன் இணைந்து நடித்து இந்தியிலும் பிரபலமானார். கன்னடத்தில் நடிக்காத குறையை, ‘லூசியா’ கன்னடப் படத்தின் தமிழ் மறுஆக்கத்தின் மூலம் நிறைவேற்றிக்கொண்டார் எனலாம். இனி மலையாளம் மட்டும்தானே பாக்கி. அதுவும் நிறைவேறியிருக்கிறது. ரதீஷ் அம்பட் இயக்கும் படத்தில் அவர் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான திலீப்புடன் நடிக்கவிருக்கிறார். இதில் திலீப்புக்கு இணையான முக்கியத்துவம் நிறைந்த கதாபாத்திரம் சித்தார்த்துக்கு அளிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 18-ல் தொடங்கியுள்ளது. மலையாளத்தின் நடிகர் திலகங்களில் ஒருவராகத் திகழ்ந்த பரத்கோபியின் மகன் முரளி கோபி இந்தப் படத்துக்குத் திரைக்கதை எழுதிகிறார். 2013-ல் வெளிவந்து பெரிய கவனம் பெற்ற ‘லெஃப்ட் ரைட் லெஃப்’டின் திரைக்கதை ஆசிரியரும் இவரே.

மலையாளத்திலும் பேய்

தமிழில் பேய்ப் படங்கள்தான் தற்போதைய ட்ரெண்ட். ‘சந்திரமுகி’யில் தொடங்கியதோ, ‘முனி’யில் தொடங்கியதோ ஆனால் சில ஆண்டுகளாக ரசிகர்கள் இந்தப் பேய்க்கு அடிமையாகிவிட்டனர் எனலாம். லாரன்ஸ் ராகவேந்திராவும் சுந்தர்.சியும் இதைச் சரியாகப் பயன்படுத்திவருகிறார்கள். இந்தப் பேய் ஜுரம் மலையாளத்துக்கும் வந்துவிட்டது. சந்திரமுகியின் மூலப் படமான மணிச்சித்திரத்தாழின் வெற்றிக்குப் பிறகு சில படங்கள் அந்த மாதிரி வந்தன. ஆனால், ட்ரெண்ட் ஆக உருவாகவில்லை. இப்போது அதே பாணியில் வந்து, பாக்ஸ் ஆஃபீசில் ஹிட்டடித்துள்ளது ‘பிரேதம்’. இந்தப் படத்தில் ‘சந்திரமுகி’ ரஜினிகாந்த் மாதிரியான கதாபாத்திரத்தில் ஜெயசூர்யா வருகிறார். பேயுடன் சமரசம் பேசிப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கிறார். மலையாளத்தின் புகழ்பெற்ற மெண்டலிஸ்டான ஆதியை ரோல் மாடலாகக் கொண்டு ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT