தடிமனான கற்சுவர்களையும் கடுமையான காவலர்களையும் தாண்டிச் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் கைதிகளின் கதைகள் ஹாலிவுட் திரையுலகத்துக்கு மிகவும் பரிச்சயமானவை. இந்தப் பின்னணியில் மட்டும் நூற்றுக்கணக்கான ஹாலிவுட் படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றுள் 'தி கிரேட் எஸ்கேப்' முதல் 'ஷஷாங்க் ரெடெம்ப்ஷன்' வரை பல சிறப்பான படங்களைக் குறிப்பிடலாம். அந்த வரிசையில் தப்பிக்கும் சிறைக்கைதியாக, எண்பதுகளின் ஆக்ஷன் நாயகன் சில்வெஸ்டர் ஸ்டாலன் நடிப்பில் வரும் 11-ஆம் தேதி இந்தியா வில் வெளியாகிறது 'எஸ்கேப் பிளான்'.
சக கைதியாக ஹாலிவுட்டின் இணையில்லா அதிரடி நடிகர் ஆர்னால்ட் ஷ்வாட்ஸ்னெகர் நடித்திருப்பபது படத்தின் மற்றொரு சிறப்பம்சம். சில ஆண்டுகளுக்கு முன் ஸ்டாலன் இயக்கிய 'எக்ஸ்பென்டபிள்ஸ்' படத்தில் ஆர்னால்ட் ஒரே ஒரு காட்சியில் தோன்றினார். அதன் இரண்டாம் பாகத்தில் ஆர்னால்டின் சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றன. எனினும் படம் முழுவதும் இருவரும் தோன்றும் காட்சிகள் அதில் குறைவு. எனவே, இருவரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் உலகமெங்கும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
செய்யாத குற்றத்துக்காகக் கைது செய்யப்படும் கட்டுமானப் பொறியாளர் ஸ்டாலன், தான் வடிவமைத்த சிறையிலேயே அடைக்கப்படுகிறார். சிறையிலிருந்து தப்பிச் சென்று தன்னை சிக்கவைத்தவனைப் பழிவாங்கத் துடிக்கிறார். அதற்காக அவர் போடும் திட்டத்துக்கு சக கைதியான ஆர்னால்ட் உதவுகிறார்.
பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் புகழ்பெற்ற ராப் பாடகர் 50 சென்ட்ஸ் நடித்திருக்கிறார். ஸ்டாலனின் உதவியாளர் வேடத்தில் நடித்துள்ள அவர், படத்தின் திரைக்கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறியுள்ளார். நவீன வசதிகள் வந்திராத காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட 'ஷஷாங்க் ரெடெம்ப்ஷன்' படத்தில் நாயகன், காவலர்களின் கவனத்தைத் திசைதிருப்பி சிறைச் சுவரில் ஓட்டையிட்டுத் தப்பிச் செல்வான். இந்தப் படத்தில் ஸ்டாலன் வடிவமைக்கும் சிறை நவீன வசதிகள் கொண்டது என்பதால் தொழில்நுட்ப உதவியுடன் தப்பிச் செல்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
படத்தை இயக்கியுள்ள மிகேயில் ஹாப்ஸ்ட்ராம், 'டிரெய்ல்டு' (தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரமாகக் கோக்கப்பட்ட படம்), ஜான் கஸாக் நடித்த 'ஷாங்காய்' போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர். எனவே, படத்துக்கான எதிர்பார்ப்பு பொய்க்காது என்று தாராளமாக நம்பலாம்.