இது ப்ரூஸ்ட் கேள்விப் பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு பிரஞ்சு எழுத்தாளர் மர்செல் ப்ரூஸ்ட் (Marcel Proust) தனது ஆளுமையை வெளிப்படுத்தும் பதில்களை அளித்திருக்கிறார். அதிலிருந்து பிரபலங்களிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக இந்தக் கேள்விப் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது.
மகிழ்ச்சியைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?
தொடர்ந்து ஆக்கபூர்வமாக இயங்குவதும், நான் நேசிக்கும் மனிதர்களைச் சுற்றி இருப்பதும்.
உங்களுடைய மிகப் பெரிய பயம்?
சராசரியான நிலையில் இருப்பதும், வளர்ச்சியும் மாற்றமும் இல்லாமல் இருப்பதும்.
உங்களுக்குப் பிடித்தமான நற்பண்பு?
இரக்க உணர்வு.
உங்கள் ஆளுமையின் முக்கியமான அம்சம்?
கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பது.
உங்களுடைய பிரதானமான குறை?
நேர்மை.
எந்தத் தவறை உங்களால் அதிகமாக சகித்துக்கொள்ள முடியும்?
சுயநலம்.
எதை நீங்கள் அதிகமாக வெறுக்கிறீர்கள்?
வெறுப்பு என்ற வார்த்தை. அது மிகவும் அழிவைத் தரக்கூடியது.
உங்களுடைய மிகப்பெரிய துரதிர்ஷ்டம் எது?
இன்னும் காதல்வயப்படாமல் இருப்பது.
நீங்கள் பொக்கிஷமாகப் பாதுகாக்கும் பொருள்?
என்னுடைய தோழி இந்த ஆண்டு கொடுத்த ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை. அவள் அந்த அட்டையில் எழுதியிருந்தது என்னை அழவைத்துவிட்டது. நான் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் அதைப் படிக்கிறேன்.
உங்களுக்குப் பிடித்த நிறம்?
பச்சை.
நீங்கள் நீங்களாக இல்லாவிட்டால், வேறு யாராக இருக்க விரும்புவீர்கள்?
என் அம்மா...
உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?
மாயா ஏஞ்சலோ, சில்வியா பிளாத், தாகூர், சரோஜினி நாயுடு, கபீர்.
நீங்கள் மிகவும் மெச்சும் ராணுவ நிகழ்ச்சி?
இந்திய-சீன போர். ஆனால், வன்முறையையும் தீவிரவாதத்தையும் நிச்சயமாக வெறுக்கிறேன். வெளியுறவுத் துறைரீதியிலான உறவையும், பேச்சுவார்த்தையையும் பயன்படுத்திப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என நினைக்கிறேன்.
நீங்கள் மிகவும் பாராட்டும் சீர்திருத்தம் எது?
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடைத்தது.
எந்தத் திறமை உங்களுக்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
இசை சம்பந்தமான எதையும். நான் இசையை நேசிக்கிறேன்.
வரலாற்றில் எந்த நபரை அதிகமாக வெறுக்கிறீர்கள்?
ஹிட்லர்.
உங்களுக்குப் பிடித்தமான உணவும் பானமும்?
உணவு: இந்திய, தாய்லாந்து உணவுகள். அவகடோ எனக்கு மிகவும் பிடிக்கும். பானம்: ‘ரெட் ஒயின்’, தண்ணீர்
உங்களுடைய தற்போதைய மனநிலை என்ன?
மனநிறைவு. வேலை செய்வது எனக்குப் பிடிக்கும். ஆக, மனநிறைவுடன் பேய்போல் வேலைபார்ப்பவள் நான்.
எப்படி இறக்க விரும்புகிறீர்கள்?
நான் நேசிக்கும் ஆணுடன் மகிழ்ச்சியாக இறக்க விரும்புகிறேன்.
உங்களுக்குப் பிடித்தமான தாரகமந்திரம் எது?
நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை விடச் சிறந்தவராக ஆவதற்கு எப்போதும் முயற்சி செய்யுங்கள்.
தமிழில்: என். கெளரி