தென்மேற்கு பருவகாற்று படத்திற்காகத் தேசிய விருதுபெற்ற இயக்குநர் சீனு ராமசாமி அடுத்து இயக்கிவரும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தில் வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் புகழ்பெற்ற மனிஷா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் 5 நாட்கள் படப்பிடிப்புக்குப் பின் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டார் என்ற செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில் அவரைச் சந்தித்தபோது...
வழக்கு எண் படத்துக்குப் பிறகு கவனிக்கப்படும் கதாநாயகி ஆகியிருக்கிறீர்கள். மற்ற தென்னிந்திய மொழிகளில் அழைப்புகள் வந்ததா?
அது என்னவோ தெரியலை. என்னோட ஆர்வம், ஃபேஷன், சென்டிமென்ட் எல்லாவற்றிற்கும் தமிழ்ப் படங்கள்தான் பொருத்தமா இருக்கு. தெலுங்கு, கன்னடம் இரண்டிலிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வருது. ஆனால் தமிழ்ப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் அதில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கத் தோணுது. இங்கே நல்ல பேர், நல்ல இடம் கிடைச்சுட்டா மத்த இடங்களில் அங்கீகாரம் தானா கிடைக்கும்.
தமிழ்த் திரையை ரொம்பவே நேசிக்கிறீங்க. ஆனா இன்னும் கனமான கதாபாத்திரம் அமையவில்லையே, ஏன்?
என் அறிமுகப் படத்தை விட கனமான கதாபாத்திரம் வேணுமா என்ன? ‘ஆதலால் காதல் செய்வீர்’ படத்தில என்னோட கேரக்டர் பார்த்துட்டு எவ்வளோ பேரன்ட்ஸ் எனக்கு வாழ்த்து சொன்னாங்க தெரியுமா? எனக்கு அடுக்கடுக்காக படம் பண்ண வேண்டும் என்பதெல்லாம் ஆசை இல்லை. கதை பிடித்து படம் பண்ணணும். எங்காவது ஒரு காட்சியிலாவது கதையோட ஓட்டத்தை என் கதாபாத்திரம் நகர்த்தும்படியாக அமைய வேண்டும். என்னோட கேரக்டரால் படத்தோட கதை மாறணும். சும்மா இரண்டு பாட்டு தேவையில்லை. படம் செய்தால் அதில ஒரு மீனிங் இருக்கணும்.
உங்களோட ஃபோட்டோ ஷூட் ஆல்பங்கள்ல கிளாமர் அதிகமா இருக்கே?
ஓபனாக சொல்கிறேன். சினிமாவுக்கு கிளாமர் அவசியம். என்னை இதுவரைக்கும் யாரும் கிளாமரா பார்க்கல. நான் மாடலிங்ல இருந்து சினிமாவுக்கு வந்தேன். ஆக்டிங், கிளாமர் ரெண்டுக்கும் நம்ம சினிமால பெரிய தொடர்பு இருக்கு. கிளாமர் இல்லாமல் அழகான ஸ்டோரி போதும் அப்படின்னுல்லாம் நான் அடம் பிடிக்க மாட்டேன். இரண்டிலும் அசத்தணும். பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா வெரி குட் ஆக்டர். அதே நேரத்தில் கிளாமர்லயும் கலக்குவாங்க. அதுதான் என்னோட டிராக்.
இயக்குநர் சீனு ராமசாமி படத்திலிருந்து ஏன் விலக்கப்பட்டீங்க?
இது பற்றி அவசியமில்லாத செய்திகள் வருது. இரண்டு மாதத் திற்கு முன்னாடி இந்தப் படத்தில நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தொடங்கி ஒரு கட்டத்தில் சீனு ராமசாமி ‘இந்த கேரக்டருக்கு கொஞ்சம் மேன்லி நடிப்பு வேண்டும்’னு சொல்லி நடிகர் விஷ்ணுக்கு ஜோடியாக வேறு ஒரு கேரக்டரை எனக்குக் கொடுத்தார். எனக்கு அந்த கேரக்டரில் சம்மதமில்லை. அவர் முன்னாடி சொன்ன கேரக்டர் பிடிச்சிருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். திடீர்னு இப்போ வேற ஒரு கேரக்டர்னு சொன்னா எப்படி? மனசு கேட்கல. இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறாங்க. அந்த கம்பெனி என்னோட ஃபேமிலி மாதிரி. நடந்ததெல்லாம் அவங்களுக்கும் தெரியும். 5 நாட்கள் ஷூட் பண்ணின பின்னாடி எப்படி வேறு ஒரு ரோல்ல நடிக்கிறது. சீனு சார் வாக்கு தவறிட்டார். ஒரு இயக்குநரா அவரோட எதிர்பார்ப்புக்கு நான் பொருந்தாம போறது அவருக்கு சரியா இருக்கலாம். அதுல நான் குறுக்கிட விரும்பல. அதனால நானே விலகிட்டேன். யாரும் என்னை விலக்கல. எதையும் திறந்த மனதுடன் எதிர்கொள்ள விரும்புறேன். எனக்குப் பிடிக்காத எந்த விஷயங்களையும் நான் விரும்புறதில்ல, அது எனக்கு கிடைக்கிற கேரக்டரா இருந்தாலும். எனக்கு நடிப்புத் தெரியும். அது ரசிகர்களுக்கு தெரியும்.