இந்து டாக்கீஸ்

பிரியங்கா சோப்ராவின் ஆசைக் கணவர்

ஆர்.ஜெய்குமார்

தன் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்னும் தன் நீண்ட நாள் விருப்பத்தை பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தியுள்ளார். 2000ஆம் ஆண்டு உலக அழகியாக முடி சூடிய பிரியங்கா, விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் நடிகையானார். தொடர்ந்து பல இந்திப் படங்களில் நடித்துவருகிறார். பர்ஃபி, காமினி போன்றவை அவரது சமீபத்திய வெற்றிகள்.

நடிப்பதோடு அல்லாமல் சமீபத்தில் இன் மை சிட்டி, எக்ஸோடி ஆகிய இரு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இதில் எக்ஸோடி ஆல்பம் வெளியான 20 மணிநேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். “பிரியங்கா என் இசையில் பாட ஒரு வாய்ப்பு தர வேண்டும்” என ஏ.ஆர். ரகுமான் கேட்டது பிரியங்காவின் குரலுக்குக் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்.

பிரியங்கா தொடர்ந்து முன்னணிப் படங்களில் நடிப்பவர் அல்ல. ஆனாலும் அவர் நடிக்கும் படங்களில் துணிச்சலான வேடங்கள் ஏற்கிறார். இந்திய நிறம், வசீகரமான இதழசைவு, மயக்கும் குரல் இவை மற்ற நாயகிகளிடம் இருந்து பிரியங்காவைத் தனித்துக் காட்டுபவை. பிரியங்காவின் தோற்றத்தைக் கவர்ச்சி எனச் சொல்ல முடியாது. ஆனால் கவர்ச்சி தேவைப்படும் காட்சிகளில் அனாயாசமாக நடித்து ரசிகர்களைக் கவர்கிறார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பிரியங்கா தன் எதிர்காலத் துணை தனது ஆண் பிரதியாக இருக்க வேண்டும் என்று கூறினார், “அவர் அறிவாளியாக இருக்க வேண்டும். நல்ல மனிதராக இருக்க வேண்டும். குறும்புத்தனம் மிக்கவராகவும் இருக்க வேண்டும். மொத்தத்தில் அவர் என்னுடைய ஆண் பிரதியாக இருக்க வேண்டும். ஆனால் அவர் நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.” என்றும் கூறுகிறார் அதிரடியாக.

SCROLL FOR NEXT